தத்ரூபமான ரஜினி சிலை! ரசிகர்களை சந்திக்க வருகிறார் ஊர் ஊராக?
கபாலி கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் கபாலி, சுமார் 5000 தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொள்ளும் என்றெல்லாம் பேசப்படுகிறது. இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட முழுமையான ட்ரெய்லர் இன்னும் சில தினங்களுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ள நிலையில், ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு தகவல்…. ரஜினி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமேயில்லை.
பல லட்சம் ரூபாய் செலவில் ரஜினியின் மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்திருக்கிறதாம் கபாலி படக்குழு. அப்படியே ரஜினியை நேரில் பார்ப்பதை போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சிலையை, கபாலி வெளியாகும் தியேட்டர்களுக்கு அனுப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வேலையை செய்யப் போகிறார்களாம். ரசிகர்கள் அந்த ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுமாம்.
இதுவரை ரஜினியின் எத்தனையோ படங்கள் வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. அவரது படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட எந்திரன் படத்திற்கு இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டதில்லை. ஆனால் கபாலி படத்திற்கு இப்படியொரு ஐடியாவை உருவாக்கி, அதற்கு பல லட்சங்களை அள்ளி வீசியிருக்கிற கலைப்புலி, நிஜமாகவே விளம்பரப் புலிதான்!