வதந்திகளை அடக்குவதற்கு வர்றாரு ரஜினி!
நெருப்புடா நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்குற அழிக்கிற எண்ணம்
முடியுமா இன்னும்.
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியிற நூலா நீ
தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியலை விரும்பிடும் கபாலி
நெருப்புடா…
இதுதான் கபாலி படத்தில் வரும் பாடல் ஒன்றின் வரிகள். வார்த்தைக்கு வார்த்தை ரஜினி பிராண்ட் மொழி என்பது சொல்லிதான் தெரிய வேண்டுமா என்ன?
ரிலீசுக்கு இன்னும் சொற்ப நாட்களே இருக்கிற நிலையில், “பாடல்கள் லீக் ஆகிருச்சாமே? ரஜினிக்கு உடம்பு சரியில்லையாமே? ஆடியோ ரிலீசுக்கு ரஜினி வராத காரணத்தால் தாணு சாருக்கு சில கோடிகள் லாஸ் போலிருக்கே?” என்று அடுக்கடுக்கான அங்கலாய்ப்புகள் கிளம்புகிறது கோடம்பாக்கத்தில்.
இதில் அவருக்கு ‘உடம்பு சரியில்லை’ என்கிற விஷயம் மட்டும் சற்று கொட்டை எழுத்துக்கு மாறி, எட்டுகால செய்தியானதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அமெரிக்காவில் அவர் சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டதை அவரது தரப்பு உடனடியாக மறுக்கவில்லை என்றாலும், சில நாட்கள் தாமதத்திற்கு பின் இன்று வெளியாகியிருக்கும் தகவல் சற்றே ஆறுதல். “அவருக்கு ஒன்றும் இல்லை. நன்றாகதான் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் அவர் சென்னை திரும்புகிறார்” என்பதுதான் அது.
ஜுலை இரண்டாவது வாரத்தில் கபாலி திரைக்கு வரப்போகிறது. படம் பற்றிய எதிர்பார்ப்புகள் தாறுமாறாக கிளம்பியிருக்கும் நிலையில் அதை இன்னும் பெரிதாக்க வேண்டாம் என்று அடக்கி வாசிக்கவே விரும்புகிறதாம் படக்குழு.