சசிகலாவை சீண்டுகிறார் ராம்கோபால் வர்மா! சொல்லப்போவது உண்மையா? பொய்யா?
எப்படி வேண்டுமென்றாலும் உருளும் என்று தெரிந்தேதான் இந்த பூமியை உருண்டையாக படைத்தானோ என்னவோ? அம்மா புராணம் போய் விட்டது. கடந்த பத்து நாட்களாகவே தமிழ்நாட்டை சுற்றி சுற்றி அடிப்பது சின்னம்மா புராணம்தான். ஜெயலலிதா இதய தெய்வம் என்றால், இவர் கருணை தெய்வமாம். இன்னும் என்னென்னவோ புகழ் மொழிகள் சொல்லி பூமியையே குளிர வைக்கும், மந்திரிகளும் மற்றவர்களும் ஒரு விஷயத்தில் மட்டும் செம ஷாக்!
எங்கெல்லாம் சர்ச்சைகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் தன் தெலுங்கு மூக்கை நுழைத்து செமத்தியாக கூர் தீட்டிக் கொள்ளும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தனது அடுத்த படத்திற்கு ‘சசிகலா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். யாரெல்லாம் புகழோடு இருக்கிறார்களோ… அவர்களை சீண்டுவதுடன், அவர்களின் இமேஜை நார் நாறாக கிழித்து ட்விட் போடுவது கூட ராம்கோபால் வர்மாவின் இன்னொரு பொழுதுபோக்கு.
சமீபத்தில் இவரின் ஓட்டை வாயில் விழுந்தவர் ரஜினிகாந்த். இவரெல்லாம் ஒரு அழகா? இவரை எப்படிதான் இந்தியாவே கொண்டாடுதோ? என்றெல்லாம் ட்விட் பண்ணியிருந்தார் அவர். அப்படிப்பட்ட ஒருவர், ‘சசிகலா’ என்ற பெயரில் படம் எடுத்தால்…? அதுவும் ஜெ.வின் உயிர் தோழி சசிகலாவின் கதையைதான் எடுக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு செய்தால் என்னவெல்லாம் நடக்கும்?
ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. பிரபலமானவர்களை பற்றி படம் எடுப்பதென்றால் அவர்களது அனுமதியை முறையாக பெற வேண்டும். இல்லையென்றால் படம் துவங்குவதற்கு முன் இந்தப்படம் முழுக்க முழுக்க கற்பனையே என்று குறிப்பிட வேண்டும். இவர் எடுத்த வீரப்பன் கதையே உண்மைக்கு சம்பந்தமில்லாமல் இருந்தது.
இது மட்டும் எப்படியிருக்குமாம்? தப்பித்தவறி எல்லை மீறினால், ராம் கோபால் வர்மாவை , ராம் கோபால் ‘குருமாவாக்க’ கோடிக்கணக்கான தொண்டர்கள் தயார். மிஸ்டர்…. என்ன பண்ணப் போறீங்க?
https://youtu.be/xt_FTlnrr2s