சமந்தாவுக்கு மெட்ராஸ் ஐ நல்லவேளை… ஆர்யா தப்பித்தார்!
மலையாளத்தில் வெளிவந்து எல்லாருடைய மனசையும் கொள்ளையடித்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்கிறது பிவிபி நிறுவனம். ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, சமந்தா, ஸ்ரீதிவ்யா, பூ பார்வதி ஆகியோர் நடிக்க, பிரபல தெலுங்கு இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு மற்ற எல்லாரும் வந்திருக்க, சமந்தாவை மட்டும் ஆளைக் காணோம். என்னவாம்? ஐயோ பாவம். அவருக்கு கண் வலி. (அப்படியே வந்திருந்தா கூட எங்க கண்ணு குளுகுளுன்னு இருந்திருக்குமே)
ஆர்யாதான் வம்பை ஆரம்பித்தார். பொதுவாகவே கூட்டத்தில போட்டு உடைக்கிற விஷயத்தில் அவருக்கு நிகர் அவர்தானே? இந்த படத்தில் பழைய காதலியை நினைச்சு பீல் பண்ணுற மாதிரியான கேரக்டரில் ராணா நடிச்சுருக்கார். அவருக்கு நிஜ வாழ்க்கையிலும் அப்படியொரு அனுபவம் இருக்கறதால, அவரு ரொம்பவே பீல் பண்ணி நடிச்சார் என்று சொல்ல, அதையே நூலாக பிடித்துக் கொண்டது பிரஸ். ராணாவிடம், “த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?” என்று கேட்க, “இங்க இருக்கிற ஸ்ரீதிவ்யா, பார்வதி பற்றி கேளுங்க சொல்றேன். த்ரிஷா பற்றி தெரிஞ்சுக்கணும்னா நீங்க ஆர்யாவை கேளுங்க” என்று கூறிவிட்டு, “பிளைட்டுக்கு நேரமாச்சு” என்று கிளம்பி ஓடினார். “த்ரிஷா என்னோட தங்கச்சிங்க. ராணாவுக்கு என்ன உறவுன்னு நீங்க அவருகிட்ட கேளுங்க” என்று ஆர்யா தொடர் ஜோக் அடிக்க, அந்த இடமே கலகல!
பெங்களுர் நாட்கள் என்று தமிழில் வெளிவரும் இப்படத்தை மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கியிருக்கிறார். தெலுங்கில் சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரி பிரமாதமான வெற்றிகளை கொடுத்த பொம்மரிலு பாஸ்கர், இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றவுடன் மனப்பூர்வமாக ஒப்பு கொண்டாராம். அந்த படத்தின் மீதிருந்த தாக்கம்தான் இதற்கு காரணம். அதே நேரத்தில் தமிழ் நாட்டிலிருந்து தெலுங்கு படம் இயக்க போய்விட்டாலும், தமிழில் ஒரு நல்ல படம் தர வேண்டும் என்கிற ஆசை இருக்குமல்லவா? அதை இந்த படம் நிறைவேற்றும் என்றார் பாஸ்கர்.
2015 தொழில் ரீதியாக எனக்கு சுமாரான வருஷம்தான். 2016 நல்லாயிருக்கும்னு நம்புறேன். அதுக்கு இந்த படமும் ஒரு காரணமா இருக்கும் என்றார் ஆர்யா. ஜோசியம் பலிக்கட்டும்…