சத்யராஜ் வெறும் கட்டப்பா இல்லை! மன்னர்யா மன்னர்! -தேனி கண்ணன்

நடிகர் சத்யராஜ் நட்பை மதிப்பவர். அவரை வித்தியாசமாக காண்பித்து ஒரு பேட்டியெடுக்க ஐடியா செய்து அவரைப் போய் பார்த்தேன். அதாவது ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ஐந்தாம் வகுப்பு மாணவன் மாதிரி இருக்கணும். பெல்ட் போட்ட ட்ரவுசர் போட்டு காண்பிக்கணும். இதை சொன்னால் செய்வரா என்ற சந்தேகம் இருந்தது. காரணம் நடிகர்களீல் அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் சத்யராஜ். திராவிட சிந்தனை, கம்யூனிசக் கருத்து என்று ஆழ்ந்த ஞானம் உள்ளவர் அவரை நம் இஷ்டத்திற்கு மாற்ற முடியுமா?

வீட்டில் அவரை சந்தித்து விஷயத்தை சொன்னபோது’ ”அவ்வளவுதான கண்ணன் நாளைக்கு வாங்க” என்றார். மறுநாள் போனால் அப்படியே ஸ்கூல் பையன் போலவே பெல்ட் போட்ட ட்ரவுசர் ஜோல்னா பை என்று குழந்தை போல் மாறி இருந்தார். அந்த வாரம் குமுதத்தில் அந்த கட்டுரை பெரிய வரவேற்பை பெற்றது.

சத்யராஜ் முதன் முதலில் எனக்குப் பழக்கமானபோது முதல் சந்திப்பே சண்டையோடுதான் ஆரம்பித்தது. நண்பர் பாஸ்கரதாஸ் அழைத்துப்போனார்.

அப்போது குங்குமத்தில் அவரை பற்றி ஒரு கட்டுரை எழுத இருந்தேன் அது தொடர்பான சந்திப்பு அது.

அந்த கட்டுரைக்கான காரணம், சத்யராஜின் வரலாற்றுப் பின்னணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஈரோடு பகுதியில் வாழ்ந்த காளிங்கராயன் என்ற குறுநில மன்னன் பரம்பரையை சேர்ந்தவர் சத்யராஜ். இந்த தகவல் தொடர்பாக அவரிடம் தெரிந்து கொள்ள்வே அவரை சந்திக்க வந்தேன். அய்யர் ஐபிஎஸ் என்ற படத்திற்காக அப்போது ராவுத்தர் பில்டிங் பகுதியில் இருந்தார்

நான் போய் சந்தித்து விஷயத்தைச் சொன்னதும் ‘யாருக்குமே தெரியாத விஷயம். நீங்க எப்படி தெரிஞ்சுகிட்டீங்க” என்று வியந்தார்.

’நீங்க மன்னர் பர்ம்பரயை சேர்ந்தவர்னு எப்போதுமே சொன்னதில்லையே ஏன்.?

”அதேயேங்கேக்குறீங்க. மன்னர் பரம்பரைனு சொன்னதால எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைக்கலை. அப்புறம் எப்படி சொல்லுவேன்” என்று சொல்லி பேசத் தொடங்கினார்.

”நான் சினிமாவுக்கு நடிக்க வந்தபோது அண்ணன் சிவக்குமார் தேவர் பில்ம்ஸ்க்கு அழைச்சிட்டுப் போனார். அங்க தேவர் இருந்தார். என்னைப் பார்த்ததுமே ‘உனக்கு பல்டி அடிக்க தெரியுமா? என்று கேட்டார். உடனே நான் பல்டி அடிச்சு காண்பிச்சேன்.” நீ நம்மூரு பையனா. என்று விசாரித்தார். ‘என் தாத்தா பேரு நடராஜ காளிங்கராயர்” என்று நான் சொன்னதும், ’முருகா முருகா…நீயெல்லாம் சினிமாவில் நடிக்கணுமா’ என்று தலையில் அடித்துக்கொண்டார். அவர் படத்தில் எனக்கு வாய்ப்புகொடுக்கவில்லை” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சத்யராஜ்.

தொடர்ந்து அவர் சொன்ன வரலாற்று தகவல் வியப்பானது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஈரோடு பகுதியில் வெள்ளோடு என்ற ஊரை தலைமையிடமாக வைத்து காளிங்கராயன் என்ற குறு நில மன்னன் ஆண்டு வந்தான். அந்த நேரத்தில் தமிழகத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சம் போல் அப்போது ஈரோடு பகுதியை கடுமையாக பாதித்திருக்கிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதில் கவலைக்குள்ளான காளீங்கராயன் மன்னன். அன்று மதுரையை ஆண்டு வந்த வீரபாண்டிய மன்னனிடம் முறையிட்டான். விரபாண்டிய மன்னன் காளிங்கராயனின் வாய்க்கால் வெட்டும் திட்டத்தை கேட்டு மலைத்துப் போய் ஈரோடு பகுதியில் வரி வசூல் செய்யும் உரிமையை காளிங்கராயனுக்கு வழங்கிவிட்டார்.

ஊர் திரும்பிய காளிங்கராயன் தன் கொங்கு இனத்தைச் சேர்ந்த வாலிபர்களையும், விவசாயிகளையும் திரட்டி இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து, பெரிய மலைகளையும் நிலங்களையும் வெட்டி வாய்க்கால் வெட்டும் பணியை மேற்கொண்டார்.

பவானி ஆற்றின் குறுக்கே சிறு தடுப்பனை ஒன்றை கட்டி அங்கிருந்து கொடுமுடி வரை 95 கிலோ மீட்டர் வரை வாய்க்கால் வெட்டி பாசன வசத்திக்கு வழியும் செய்தார். இதன் மூலம் சுமார் ஐம்பது கிராமங்கள் பலனடைந்தன. அதோடு பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் செழித்து வளர்ந்தன.

இந்த பணீகள் நடந்து கொண்டிருக்கும் போதே அதைத் தடுக்க சிலர் முயற்சி செய்தனர். காளிங்கராயன் தன் சொந்தங்களின் நிலங்களை வளப்படுத்தவே மக்களீன் வரிப்பணத்தில் வாய்க்கால் வெட்டுகிறான் என்று பகையை பரப்பிவிட்டனர். இதை கேள்வி பட்ட காளிங்கராயன் தான் வெட்டிய வாய்க்கால் ஓரங்களில் இருந்த விளைநிலங்களை விட்டு விட்டு அவர்களை வேறு ஊர்களீல் குடியமர்த்தினார். அதோடு “இனி என் வம்சாவழியினர் யாரும் காளிங்கராயன் வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்த மாட்டார்கள் என்று மக்களீடம் உறுதி வழங்கினார்.

அந்த தியாக மன்னன் காளீங்கராயன் வழிவந்த 36 வது தலைமுறை தான் நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள். இப்போதும் ஊத்துக்குளி பகுதியில் காளிங்கராயனின் வம்சாவளியின் அரண்மனைகளில் வாழ்ந்து வருகின்றனர். எந்த தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில் காளிங்கராயன் வெட்டி முடித்த வாய்க்காலை பார்த்து வியந்து போய் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை வியந்து பாராட்டி எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்போதும் அந்த வாய்க்காலில் சினிமா படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தன் மக்கள் தாகம் தணிந்தால் போதும் என்று தன் பரம்பரையையே தியாகம் செய்ய வைத்த சத்யாரஜ் பாட்டனின் தியாக வரலாற்றை சுமந்தபடி இப்போதும் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது காளிங்கராயன் வாய்க்கால்!

-தேனி கண்ணன்

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
The Single track “Hey Penne” from ‘Kattapava Kanom’

Close