எப்ப டி.ஐ வொர்க் முடிஞ்சு… எப்ப படம் தியேட்டருக்கு வந்து…? ஐ தரும் அலுப்பு
ஐ – எப்போது திரைக்கு வரும்? இந்த கேள்விக்கு விடை அப்படத்தின் இயக்குனர் ஷங்கருக்கே தெரியாது போலிருக்கிறது. ‘போன தீபாவளிக்கே வந்திருக்க வேண்டிய படம். ஆனால் தயாரிப்பாளரின் சில தவறான முடிவுகளால் அப்போது வரமுடியவில்லை. இதோ அடுத்த தீபாவளியும் வந்துவிட்டது. இப்போதும் ஐ வரவில்லை. அதற்காக நான் சும்மாயிருப்பதில்லை. ஓய்வு நேரத்தில் மூன்று ஸ்கிரிப்டுகள் எழுதி முடிச்சுட்டேன்’ என்று சற்று வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார் ஷங்கர். பிரபல நாளிதழில் அவர் கூறியிருக்கும் பதிலில்தான் இப்படியொரு விரக்தி.
நவம்பர் 14 ந் தேதி படம் வெளியாகிவிடும் என்று செய்திகள் கசிந்தாலும் அதுவும் சாத்தியமில்லை போல்தான் தெரிகிறது. ஏனென்றால் ஐ படத்தின் டி ஐ பணிகளை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்களாம். மற்ற படங்கள் போல ஷங்கரின் படங்களுக்கு டி ஐ செய்துவிட முடியாது. ஒவ்வொரு பிரேமிற்கும் அவர் சில நுணுக்கங்களை வைத்திருப்பார். பர்பெக்ஷன் 100 சதவீதம் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அப்படியிருக்கும்போது இந்த டிஐ பணிகளை முடிக்கவே எத்தனை நாட்கள் பிடிக்குமோ?
இதற்கிடையில் விக்ரம் நடித்து கோலிசோடா விஜய் மில்டன் இயக்கி வரும் பத்து எண்றதுக்குள்ள… படம் முடியும் தருவாயில் இருக்கிறதாம். ஒருவேளை ஐ தள்ளிப் போய் கொண்டேயிருந்தார், பத்து எண்ணுதுக்குள்ள படத்தை வெளியிட்டு விடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
விக்ரம் வெகு கால இடைவெளிக்கு பிறகு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். அது பத்து எண்றதுக்குள்ள… முடிஞ்சுரக் கூடாதே என்பதுதான் ரசிகர்களின் வருத்தம்!