கோடிகளில் சம்பளம்! உதவி இயக்குனருக்கு மட்டும் பட்டை நாமம்! ஷங்கர் சார்… இதுதானா உங்க நேர்மை?
தமிழ்சினிமா இயக்குனர்களில் ஷங்கரிடமும், முருகதாசிடமும் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள் போன பிறவியில் புண்ணியம் பண்ணியவர்கள் என்றொரு எண்ணம் கோடம்பாக்கத்தில் நிலவி வருவதுண்டு. மாதா மாதம் சம்பளம், மரியாதையான ட்ரீட்மென்ட், நிம்மதியான மனநிலை என்று தன் உதவி இயக்குனர்களை பூப் போல வைத்திருப்பார்கள்.
அந்த எண்ணத்தில் கம்பியை காய்ச்சி இழுத்துவிட்டார் ஷங்கர். இத்தனைக்கும் தன் படத்தில் அவர் சொல்லும் கருத்துக்கள், வேதவாக்கு. தப்பு செய்தவர்களுக்கு அதுவே வயிற்றுப் போக்கு. அந்தளவுக்கு கம்பீரமான இயக்குனராக அறியப்பட்டு வரும் ஷங்கர் இந்த செய்திக்காக வெட்கப்படுவதுதான் சரி.
2.0 படத்தில் பணியாற்றி வரும் முரளி மனோகர் என்ற உதவி இயக்குனர் தனது முகப்புத்தகத்தில் ஒரு தகவலை எழுதியிருக்கிறார். அதுதான் கோடம்பாக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது குறும்படத்திற்காக தேசிய விருது வாங்கிய ஒரு கலைஞனுக்கு நேர்ந்த கதியை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.
இதோ- முரளி மனோகரின் பதிவு.
“இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. #2.0க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன். கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி” – “என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்” என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப் படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை”.
இவ்வளவுக்கு பின்பும் ஷங்கர் மவுனமாக இருந்தால், அந்த கருட புராண விசேஷம் அவருக்கே அமையும். அதுதான் காலத்தின் கட்டாயமும் கூட!
தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் வாங்கித்தரும் பொறுப்பு இயக்குனருக்கே என்றாலும், பலருக்கும் பேலன்ஸ் வைத்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் அலட்சியப் போக்கும் இந்த நிலைக்கு ஒரு காரணம்.