விஜய் 63 ல் ஷாருக்கான்? மிஸ்டர் பீலா பீதாம்பரங்களால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்காக உள்ளங்காலை அறுத்துப் பார்க்கிற டாக்டரை உலகம் கண்டிருக்கிறதா? கோடம்பாக்கத்தில் அப்படி நடந்தாலும் நடக்கும். அர்னால்டு ஸ்வாஸ்நேகரை வரவழைத்து ஆடியோ ரிலீஸ் நடத்தினார்கள். ஆனால் அது அந்நியன் படத்திற்கு எந்த வகையிலும் பிரயோஜனமாக இல்லை. அப்படிதான் விஜய் 63 படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக ஒரு புரளியை கிளப்பிவிடுகிறார்கள். அதனால் எந்த பிரயோஜனமும் இருக்கப் போவது இல்லை.

ஒருவேளை அது நிஜமாகவே இருந்தால் கூட, எந்த வகையில் சாத்தியம் என்பதை யோசிக்க வேண்டாமா?

விஜய் படத்திற்கென ஒரு வியாபாரம் இருக்கிறது. அதை தாண்டி படத்தின் பட்ஜெட் சென்றுவிடக் கூடாது என்று யோசித்து யோசித்து கணக்குப் போட்ட ஏ.ஜி.எஸ் நிறுவனம், அட்லீயை கோல்கேட் பேஸ்ட் போல அன்றாடம் நசுக்கி பிதுக்கி வருகிறது. எந்த வகையிலும் பட்ஜெட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்கிற அக்கறையில்தான் அவரும் படம் இயக்கி வருகிறார். அப்படியிருக்க… தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும், மிஞ்சி மிஞ்சிப் போனால் கர்நாடகா, கேரளாவிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்திற்கு வெறும் விஜய் இருந்தாலே போதும். போட்ட பணத்தை அள்ளிவிடலாம்.

இதில் இன்னும் பல கோடிகளை கொட்டி எதற்காக ஷாருக்கானை கொண்டு வர வேண்டும். ஒருவேளை ஷாருக் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம். அதை பாலிவுட்டில் ரிலீஸ் செய்து பல கோடிகளை அள்ளிவிட முடியுமா என்ன?

இப்படி வியாபார ரீதியாக எந்த வகையிலும் இந்தப்படத்திற்கு உதவாத ஷாருக்கானுக்கு எதற்காக பல கோடிகளை இறைக்க வேண்டும் என்று ஏ.ஜி.எஸ் நினைக்காதா? இந்த புரிதல் ஏதுமில்லாத பீலா பீதாம்பரம் யாரோ இந்த வதந்தியை கிளப்பிவிட, பற்றிக் கொண்டு எரிகிறது கோடம்பாக்கம்.

பொழுது போகலைன்னா ‘தாமரை மலர்ந்தே தீரும்’ வீடியோவை பார்த்து என்ஜாய் பண்ண வேண்டியதுதானே, அதைவிட்டுட்டு ஏனிந்த அழிச்சாட்டியம்?

Read previous post:
பிரமோஷனுக்கு வராத நடிகர்களுக்கு கொலைகாரன் நிகழ்ச்சியில் கொத்து பரோட்டா!

Close