நகுலுடன் தகராறு மூன்றரை மணி நேரம் படப்பிடிப்பை நிறுத்திய ஹீரோயின்!

நாரதர் கலகம் நன்மைக்கே என்பார்கள். அதற்காக ‘நாரதர் ’ படப்பிடிப்பில் ஏற்பட்ட கலகம் நன்மைக்கா என்றால், நிகிஷா படேலின் தலையிலடித்து கூட சத்தியம் பண்ணலாம், இல்லவே இல்லை என்று! ஒரு நடிகை வளரும்போதே இப்படியிருந்தால், அவர் வளர்ந்து மரமானால் மொத்த கிளையும் தயாரிப்பாளர் தலையில்தான் விழும் போலிருக்கிறது. வேறொன்றுமில்லை… இந்த படம் துவங்கி ஒவ்வொரு நாள் ஷுட்டிங்கும் நரகமாகதான் நகர்கிறதாம். அத்தனைக்கும் காரணம் நிகிஷாதான் என்கிறார்கள் தகவல் தரும் அருமை அன்பர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் வடபழனி சாலிகிராமம் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படத்தின் ஹீரோ நகுலுக்கும், நிகிஷாவுக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் முட்டிக் கொண்டதாம். அத்தனை பேரும் பார்க்கிறார்கள் என்பதை கூட மறந்து இருவரும் தாட் பூட் என்று இங்கிலீஷில் திட்டிக் கொள்ள, நடமாடும் காவல் வண்டி வந்தால் கூட, இந்த சண்டையை விலக்க முடியாது போலிருக்கே என்று அச்சப்பட்டார்களாம் படக்குழுவினர். எப்படியோ இருவரையும் சமாதானப்படுத்தி லவ் சீன் எடுத்திருக்கிறார்கள். (கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரிங்கறாங்களே… அந்த நேரத்தில் தேடினாலும் கிடைச்சிருக்காதே?)

அதற்கு மறுநாள் இன்னும் கொடுமையாய் விடிந்ததாம் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும். ஷாட்டுக்கு தயாரான அத்தனை பேருக்கும் ஜர்க் கொடுத்தார் நிகிஷா. கம்பெனி கொடுத்த ஒரு டிரஸ்சை போடவே மாட்டேன் என்று அவர் அடம் பிடிக்க, யார் யாரோ வந்து பேசியும் நகரவில்லையாம் நிகிஷா. இப்படியே ஒன்றரை மணி நேரம் போய்விட்டது. அதற்கப்புறம் எங்கோ ஓடிப் போய் வேறொரு காஸ்ட்யூம், அதுவும் நிகிஷாவுக்கு பிடித்த மாதிரி கொண்டு வந்து கொடுத்தார்களாம். அதுவரைக்கும் நகுல், மற்றும் யூனிட்டே காத்திருக்க, மூன்றரை மணி நேரம் ஆவியாய் போனது. அரை நாள் ஷுட்டிங்குக்கு முழு நாள் செலவை செய்திருந்தார் தயாரிப்பாளர்.

நிகிஷா படேல்னு பெயர் வச்சுகிட்டு இப்படி நிகிஷா படீர் படீர்னு சொல்ற அளவுக்கு சண்டை போடுறீங்களே? நீங்க ஒருத்தர் போதும்… தமிழ்சினிமா வௌங்கிரும்!

அபாய குறிப்பு- இவர் இதற்கு முன் பாஸ் என்கிற பாஸ்கரனுடன் தலைவன் படத்திலும், கவுதம் கார்த்தியுடன் என்னமோ ஏதோ படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

Read previous post:
யார் யாரெல்லாம் பார்த்திபனின் குறும்புக்கு எறும்பாக போகிறார்களோ?

‘ஒரு கோடி சம்பளம் தர்றேன். என் பேனர்ல புது முகங்களை வச்சு ஒரு படம் இயக்கிக் கொடுங்க...’ இப்படி பிரகாஷ்ராஜ் கேட்டபோது கூட, ‘அதுக்கான கதை வந்தால்தானே...

Close