யார் யாரெல்லாம் பார்த்திபனின் குறும்புக்கு எறும்பாக போகிறார்களோ?

‘ஒரு கோடி சம்பளம் தர்றேன். என் பேனர்ல புது முகங்களை வச்சு ஒரு படம் இயக்கிக் கொடுங்க…’ இப்படி பிரகாஷ்ராஜ் கேட்டபோது கூட, ‘அதுக்கான கதை வந்தால்தானே பண்ண முடியும்?’ என்று ஒரு கோடியை தவற விட்டவர் பார்த்திபன். இப்படி பார்த்திபன் தவற விட்டது கோடம்பாக்கத்தில் நிறைய இருந்தாலும், ‘நின்று ஆடுகிற விஷயத்தில்’ அவர் எப்போதுமே கில்லாடி என்கிறார்கள் ஏரியாவில். அதனால்தான் இப்பவும் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களை கூட தன் படத்தில் அசால்ட்டாக கெஸ்ட் ரோல் செய்ய வைத்துவிட முடிகிறது அவரால்.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்றொரு படத்தை இயக்கி வருகிறாரல்லவா? அதில் ஆர்யா, விஷால், விஜய்சேதுபதி, அமலாபால், டாப்ஸி, பிரகாஷ் ராஜ், சேரன் போன்ற டாப் டாப் சினிமாக்காரர்கள் நடித்திருக்கிறார்கள். ஒரு பகுதி கதையில் இவர்கள் நடிக்க, இன்னொரு பகுதி கதையில் நான்கு இளைஞர்களும், இரண்டு இளைஞிகளும் அறிமுகமாகிறார்கள். அதிலும் சத்யராஜே அண்ணாந்து பார்க்கிற உயரத்திலிருக்கும் ஒரு கதாநாயகி அகிலா கிஷோருக்கு பெங்களூருதான் பூர்வீகம் ஊர்வீகமெல்லாம். அவருக்கும் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறார் பார்த்திபன். ‘ஷுட்டிங்ல எனக்கு சார் நல்லா கத்தி குடுத்துச்சு…’ என்று அவர் நேரடி தமிழில் போட்டு தாக்க…, பார்த்திபன்ங்கிற தமிழ் வாத்தியார் அகிலாவை பார்த்ததும் உள்ள தமிழையும் நொள்ளையாக்கிக் கொண்டாரே என்கிற கவலைதான் வந்தது நமக்கு. இந்த அகிலா நடித்த சில காட்சிகளை ஸ்கிரீனில் பார்த்த அமலாபால், இந்த பொண்ணுக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஃபியூச்சர் இருக்கு. அழகா நடிக்குது. அழகா இருக்குது என்றாராம்.

இந்த இன்றியமையாத தகவலை பிரஸ்சுக்கு சொல்லி பெருமைப்பட்ட பார்த்திபன், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது முக்கியமான செய்தி.

தம்பி ராமய்யா மாதிரி ஒருத்தரை நடிக்க வைக்கணும். எக் காரணத்தை முன்னிட்டும் அவரை மட்டும் நடிக்க வைச்சுரக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்த பார்த்திபனுக்கு கடைசியில் மிஞ்சியது தோல்விதான். யார் யாரையோ நடிக்க வைத்து திருப்தியுறாத அவர், கடைசியில் சரணாகதி அடைந்தாராம் அவரிடம். சினிமாவுக்குள் சினிமா என்பதுதான் இந்த படத்தின் டிராவல்.

யார் யாரெல்லாம் பார்த்திபனின் குறும்புக்கு எறும்பாக போகிறார்களோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எத்தனை பெத்துக்கலாம்னு நீங்களே சொல்லுங்க… நிருபர்களை மடக்கிய அமலாபால்!

நண்டும் காதலும் ஒன்றுதான். சற்றே எடை கூடினால் படக்கென்று வெளியே வந்துவிடும். அப்படிதான் அமலாபால் விஜய் காதல் விவகாரமும். பொத்தி பொத்தி வைத்திருந்த காதல் பொசுக்கென மீடியாவில்...

Close