மீனோடு நடிச்சாரா, மீனாவோடு நடிச்சாரா! இப்படி சந்தோஷப்படுறாரே சிபிராஜ்?
நாய், நரி, பூனை, புலிக்குட்டி என்று நடிப்பதற்கு தயாராக இருக்கும் விலங்குகளில் பாம்புக்கு மட்டும்தான் ஃபுல்லாகிறது கால்ஷீட் டைரி. அதுவும் ஆடி மாதம் வந்தால், ரிலீஸ் பண்ணுவதற்காகவே தயாராகும் பாம்புப்படங்கள், போட்ட காசை விட பல மடங்கு தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அதற்கப்புறம் ரஜினி படத்திலேயே தலை காட்டுகிற அளவுக்கு போனது மிஸ்டர் நாகராசனின் அந்தஸ்து. யார் வந்தாலும் நம்ம மார்க்கெட்டை அடிச்சுக்க முடியாது என்று கர்வமாக திரிந்த பாம்புக்கு இனிமேல் செம டஃப் கொடுப்பதற்காக ஒரு பிராணி என்ட்ரி. அவர்தான் மிஸ்டர் வாஸ்த்து மீன்.
‘கட்டப்பாவை காணோம்’ என்ற பெயரில் விரைவில் வரப்போகும் இந்தப் படம் பெரிய ஹிட்டடித்தால், தமிழ்சினிமாவின் மார்க்கெட் வாஸ்த்து மீன்கள் பக்கம் திரும்புவதற்கு 100 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஒரு அடிஷனல் தகவல்… இந்த படத்தில் வாஸ்த்து மீனோடு சேர்ந்து நடித்திருக்கிறார் சிபிராஜ்.
மீனோடு நடித்ததை ஏதோ மீனாவோடு நடித்ததை போல முகமெல்லாம் பல்ப் எரிய அவர் சொல்ல சொல்ல, வாஸ்த்து மீனின் வலிமை புரிய ஆரம்பித்தது நமக்கு. படத்தின் இயக்குனர் மணி செய்யோன், ஈரம் அறிவழகனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். “இப்படியொரு கதையை சிபிராஜிடம் சொல்லி அவர் ஓ.கே சொன்னவுடன் நாங்க செஞ்ச முதல் வேலை, வாஸ்த்து மீன் ஒன்றை வரவழைச்சு அது கூட பழகுனதுதான். கரெக்டா மீன் தொட்டிக்கு பக்கத்தில் நின்று, இந்தப்பக்கம் வா என்று விரலை நீட்டினால் அந்தப்பக்கம் வருகிற அளவுக்கு அதை முதலில் பழக்கினோம். (பார்றா) சமயத்துல வா-ன்னா வராது. அப்பல்லாம் அது வர்ற வரைக்கும் டயலாக்கை சொல்ல சொல்லி ரீடேக் எடுத்துகிட்டேயிருப்போம். பாவம் சிபிராஜ்”என்றார் மணி செய்யோன்.
இந்த மீனின் பெயர்தான் கட்டப்பாவாம்! அப்புறமென்ன? தலைப்பே பாதிக் கதையை சொல்லிவிட்டதல்லவா? அங்குதான் ட்விஸ்ட் வைக்கிறார் மணி. “வாஸ்த்து மீனை காணோம். அதை கண்டுபிடிக்க கிளம்புறார் ஹீரோங்கறதை நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்க. அதில் நாங்க வச்சுருக்கிற சம்பவங்கள்தான் படமே. சின்னக்குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பாங்க. இது குழந்தைகளுக்கான படமும் கூட” என்றவரிடம், வாஸ்த்து மேல உங்களுக்கு நம்பிக்கையிருக்கா? இந்தப்படம் வாஸ்த்துக்கலையை நம்புங்கன்னு சொல்ல வருதா? மூட நம்பிக்கையை வளர்க்கிற படம்னா இதை பக்திப்படத்துல சேர்க்கலாமா? என்று ஏராளமான கேள்விகளை அடுக்கினோம்.
ஒரே வரியில் முடித்தால் மணி செய்யோன். “அதெல்லாம் இல்லீங்க. உள்ளே வாங்க… உங்களுக்கு படம் பிடிக்கும்! ” பிடிக்கலைன்னா குழம்பு வச்சு ஏப்பம் விட்ருவோம்…தெரியும்ல கட்டப்பா?