சிக்கிக்கு சிக்கிக்கிச்சு- விமர்சனம்
ஒடும் ரயிலில் ஒரு காதல்! அந்த தண்டவாள சத்தத்திற்கு நடுவே ஒரு வண்டவாள சேசிங்! கூட்டிக் கழித்தால் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படம்!
ஒருதலைராகம் காலம் தொடங்கி, இந்த சிக்கிக்கிச்சு காலம் வரைக்கும் ரயிலும், அதற்குள் நடக்கும் காதலும் ரசிகர்களை பொருத்தவரை ஒருவித பரவச ஃபார்முலாதான். பொதுவாகவே இதுபோன்ற ரயில் நிலைய காட்சிகள் என்றால், பட்ஜெட்டில் துண்டு விழுகிற அளவுக்கு அச்சம் ஏற்படும் தயாரிப்பாளர்களுக்கு. ஆனால் இந்த படத்தில் இந்த ரயில் மேட்டர் ஒரு காட்சியோ, இரு காட்சியோ அல்ல. படம் முழுக்க ரயில்தான். அந்த துணிச்சலுக்காவே தயாரிப்பாளருக்கு ஒரு ரிசர்வேஷன் பர்த் கொடுங்கப்பா கோடம்பாக்கத்தில்!
கதை?
சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்கிறது ஒரு ரயில். தன் நண்பன் ஆதவனை வழியனுப்ப வருகிறார் ஹீரோ மிதுன். பொண்ணுன்னா இப்படியில்ல இருக்கணும்? என்று அவன் மனசுக்குள் வந்து சிரித்துவிட்டு போகிற அழகோடு அதே ரயிலில் மிருதுளா பயணிக்க, வழியனுப்ப வந்தவரே வழித்துணை ஆகிறார் அவளுக்கு. ரயில் நிற்பதற்குள் அவளும் அவனும் காதலித்தார்களா? என்பது கூட முக்கியமில்லை. இவர்கள் காதலிப்பதை அதற்குள் செல்போன் தகவல் மூலம் அறியும் அண்ணன் அனூப் அரவிந்த் நாகர்கோவில் ஸ்டேஷனுக்கு அருவாளோடு வந்து காத்திருக்க, என்ன நடந்தது? ட்விட்ஸ்ட்!
க்ளைமாக்சை முடிவு பண்ணி வைத்தே கதையை எழுத ஆரம்பித்திருப்பார்கள் போலிருக்கிறது. வழிநெடுக ஸ்டேஷன்கள் கடப்பதை போல, ஆங்காங்கே சோதனைகளை கடந்தாலும், அந்த கடைசி காட்சியும் திருப்பமும் “ங்கொய்யால… என்னென்னவோ நினைக்க வச்சு டென்ஷனை ஏத்திப்புட்டாங்களே…” என்று படம் பார்க்கும் ரசிகனை வாய்விட்டு விமர்சிக்க வைக்கிறது.
தமிழ்சினிமாவில் சாக்லெட் பாய்கள் குறைந்து ஆக்ஷன் பாய்கள் அதிகரித்துவிட்டார்கள். அப்படி குறைந்த இடத்தை நிரப்புகிற அழகோடு ஒரு ஹீரோ. மிதுன்! தன்னுடன் பயணிக்கும் மிருதுளாவுக்கு அன்றைய தினம்தான் பர்த் டே என்பதை அறிந்து, கையிலிருக்கிற இட்லி பொட்டலத்தையே கேக் போல வெட்டி கொண்டாடுகிற சாமர்த்தியம்… இளசுகள் கற்றுக் கொள்ள வேண்டிய இம்பார்ட்டன்ஸ் மேட்டர்.
மிருதுளா மட்டும் என்னவாம்? சற்றே ஹோம்லியான, அதே நேரத்தில் செக்சியான சிரிப்புடன் கவர்கிறார். நடிப்பும் நல்ல மாதிரியாகதான் இருக்கிறது. இருட்டு, ரயிலுக்கு வெளியே நிலா. ஜன்னல் வழியே வீசும் காற்று. சினிமாதானே? என்னென்னவோ பண்ணியிருக்கலாம். ஆனால் நாகரீகத்தோடு கடக்கிறார் இயக்குனர் என்.ராஜேஷ்குமார். ஒளிப்பதிவும் இவரேதான் போலிருக்கிறது. ஒரு ரயிலுக்குள் எத்தனை கோணங்களை காட்ட முடியுமோ, அத்தனையையும் காட்டி அசர வைக்கிறார்.
விஜய் பெஞ்சமினின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் ஹிட்டுக்குள் அடங்கும் மெலடி.
காமெடி என்ற பெயரில் ஆதவன் கடிக்கும் கடிகளை தவிர்த்திருந்தால், ரயில் பயணம் சுகமாகவே இருந்திருக்கும்!
-ஆர்.எஸ்.அந்தணன்