சிம்புவின் சுணக்கத்திற்கும் சிவன்தான் காரணமாம்! ஓரேயடியாய் ஓப்பன் ஹார்ட் ஆன சிம்பு!
“இங்க இருக்கிற எல்லாரையும் தனித்தனியா பேர் சொல்லிக் கூப்பிடுற அளவுக்கு எல்லா பத்திரிகையாளர்களையும் எனக்கு தெரியும். ஆனால் என் மகன் சிம்புதான் எல்லாரையும் விட்டு விலகி நிற்கிறான். அவன் எல்லாருகிட்டயும் சகஜம் ஆகணும்னுதான் இந்த சந்திப்புக்கே ஏற்பாடு செஞ்சேன். மற்றபடி வாலு வெற்றியா, தோல்வியா? என்பது விஷயமில்ல. இந்த படத்தை நான் ரிலீஸ் பண்ணியதே பெரிய வெற்றிதான்….” 102 டிகிரி ஜுரத்தையும் தாண்டி மகனுக்காக அந்த பிரஸ்மீட்டில் வந்து நின்ற டி.ராஜேந்தரின் வெளிப்படையான பேச்சுதான் இது.
ஆச்சர்யமாக நிறைய பேசினார் சிம்புவும்.
பாய்ந்து வந்த எல்லா கேள்விகளுக்கும் பதற்றப்படாமல், கோபப்படாமல், சில நேரங்களில் விருப்பப்படாமலும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஹன்சிகா, நயன்தாராவில் ஆரம்பித்து, “வருஷத்துக்கு மூணு படமாவது நீங்க நடிக்கலாமே?” என்கிற கேள்வி வரைக்கும் அவர் பதிலளித்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். பேச்சை பொறுத்தவரை டி.ஆர் கடல் என்றால் மகன் சிம்பு ஒரு சின்னஞ்சிறிய நீர் குவளைதான். இருந்தாலும் ததும்பாமலிருந்தது அவர் பேச்சு.
இந்த படம் முடிவதற்கும், ரிலீஸ் ஆவதற்கு சில வருஷங்கள் தாமதம் ஆனது. உங்களை நீங்களே சுய பரிசோதனை பண்ணிக்க வேண்டிய காலம் இது என்பதை உணர்கிறீர்களா?
இந்த கேள்விக்குதான் வேதாந்தமும், வித்யா ஞானமுமாக பேச ஆரம்பித்தார் சிம்பு. “நான்தான் எல்லாத்துக்கும் பொறுப்பேத்துக்குறேனே? ஆனால் என்னை இயக்குறது மேலே இருக்கிற சிவன். இது இந்த நேரத்துலதான் வரணும்னு அவன் நினைச்சா வந்துரும். இப்போ அவன் நினைக்கும் போது வந்திருக்கு. அவ்வளவுதான். இனிமேல் வரிசையாக என்னோட படங்கள் வெளியாகும். இது நம்ம ஆளு ஷுட்டிங் முடிஞ்சுருச்சு. கௌதம் மேனன் படம் 75 சதவீதம் முடிஞ்சுருக்கு. செல்வராகவன் படம் ஐம்பது சதவீதம் முடிஞ்சுருக்கு. வரிசையா ஒவ்வொண்ணா வெளியாகும்.
இந்த படத்துல உங்களுக்கு விஜய் உதவியதால் அஜீத் ரசிகர்கள் உங்க மேல கோவமா இருக்காங்கன்னு…? கேள்வியை முடிக்கும் முன் எதிர்கொள்கிறார் சிம்பு.
அது சும்மா எழுதுறாங்க. அவ்வளவுதான். அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிச்சவுடன், அஜீத் சார் அப்பாவிடம் பேசினார். அவன் எல்லாத்தையும் மீறி வெளியே வருவான். ஜெயிப்பான்னு அவர் நம்பிக்கை கொடுத்தார்.
திரையில கலகலப்பா இருக்கீங்க, ஆனா நேர்ல ரொம்ப ரிசர்வ்டா இருக்கீங்க? ஏன் இப்படி? என்ற கேள்விக்கு மீண்டும் சிவனை வம்புக்கு இழுத்தார் சிம்பு. “நான் ஆன்மீகத்துல அதிக நாட்டத்தோட இருக்கேன். அந்த ஆன்மீகம் தந்த பக்குவம்தான் இது. இமயமலை பக்கம் திரியுணும்னு ஆசைப்படுறேன். போயிட்டும் வந்துட்டேன். ஒருமுறை என்னோட வந்தா நான் ஏன் இவ்வளவு அமைதியாகிட்டேன்னு உங்களுக்கு புரியும்” என்றார் சிம்பு ஒரு தேர்ந்த ஞானி போல!
ஏணிய கோணியில கட்டுன மாதிரி இதென்னய்யா பொருந்தாத விளக்கம்?