நான் ஒரு ஐடியா சொல்றேன்! சிம்புவால் வந்த ஷிவரிங்?
பலத்த மேக மூட்டங்களை கடந்து ஒருவழியாக டேக் ஆஃப் ஆகிவிட்டது சிம்புவின் ட்ரிப்பிள் ஏ! (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) ஹிப்பி தலை, அடர்ந்த தாடி, எய்ட்டீஸ்களை நினைவூட்டும் பெல்பாட்டம் என்று எக்குத்தப்பான கெட்டப்பில் இருக்கும் சிம்புவின் புகைப்படங்களும் வெளியாகிவிட்டன. இதற்கப்புறம் உப்பு மிளகாய் புளி கலப்பதெல்லாம் சிம்புவின் நேரம் தவறாமையில்தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் இந்த படம் குறித்த மிக முக்கியமான தகவல் ஒன்றும் கசிகிறது. அதுவும் சிம்புவின் ஐடியா என்பதுதான் பலத்த ஷிவரிங்.
என்னவாம்? சற்றே நீளமான கதை. படத்தில் மூன்று சிம்புக்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதனால் தனித்தனியாக கதையை கோர்த்தால் படத்தின் நீளம் வழக்கத்தை விட அதிகம் வரும் போல இருக்கிறதாம். “இதில் எதையும் கட் பண்ணத் தேவையில்லை. அப்படியே எடுங்கள்” என்கிறாராம் சிம்பு. அப்படி பார்த்தால், படம் மூன்றரை மணி நேரம் வருமேங்க. யாரு தாங்குவா? என்று கேள்வி கேட்ட தயாரிப்பாளருக்கு, சிம்பு சொன்ன பதிலில் இருக்கிறது கரண்ட்.
“இருக்கட்டுமே சார்… படத்துக்கு ரெண்டு இன்டர்வெல் விடுவோம். ஜனங்களுக்கும் இவ்ளோ பெரிய படம் பார்த்தோம்னு ஒரு திருப்தி இருக்குமில்ல?”
ஹையோ… பகவானே! ஒரு தியேட்டரில் காலை காட்சியையும் சேர்த்து மூன்று ஷோக்கள்தான் இப்போதைக்கு உத்திரவாதம். இரவு பத்துமணி காட்சிகள் எல்லாமே ஈ ஓட்டுவதால் தியேட்டர் காரர்களே அதை ரத்து செய்து நாளாச்சு. இப்போது படம் மூன்றரை மணி நேரம் ஓடினால், எத்தனை காட்சிகள் திரையிடுவது என்ற சிக்கல் வரும். அதுமட்டுமல்ல… சிம்பு மாதிரியான ஓப்பனிங் ஹீரோக்கள் படங்களை முதல் இரண்டு நாட்களுக்கு நான்கு ஷோ போடுகிற மால்களின் கதி?
இதற்கெல்லாம் விடையை சிம்புவே கண்டுபிடித்தால், படம் மூன்று மணி நேரமும் அதற்கப்புறம் வரும் அரை மணிநேரமும் அதிகப்படியாக ஓடக்கூடும். கண்டு புடிங்க விஞ்ஞானி!