நடிகர் சங்க கடனை அடைக்கும் கொம்பன் முத்தையா?
கடனை அடைக்குறோம்… கல்யாணத்தை முடிக்கிறோம்… என்ற ஒரே வெறியோடு ஓடிக் கொண்டிருக்கிறார் விஷால். “பேரன் பேத்தி எடுக்கணும் சீக்கிரம்ப்பா” என்று வீட்டில் பெற்றோர்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், நாலாபுறத்திலும் தன் முயற்சியை நீட்டித்திருக்கிறார் விஷால். நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடம் ஒன்று செங்கல்பட்டு பகுதியில் இருக்கிறதாம். சரி… அதையும் நல்ல விலைக்கு தள்ளிவிட்டால், ஒரு ஃபுளோருக்காவது அது உதவுமே என்று நினைத்து இடப் பத்திரத்தை தேடினால், மேற்படி இடமே ஸ்வாகா. அதற்காகவும் இப்போது நடவடிக்கை, போலீஸ் கம்ப்ளைண்ட் என்று துடித்துக் கொண்டிருக்கிறது அவரது சதை.
இதற்கிடையில் இவரும், கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடித்து, அதை நல்ல விலைக்கு விற்று வருகிற லாபத்தை நடிகர் சங்க கடனுக்காக போடுகிற திட்டம் ஒன்று இருக்கிறதல்லவா? அது நல்ல வேகத்தை எட்டியிருக்கிறது. கிட்டதட்ட ஆறு கோடி சம்பளம் வாங்கும் விஷாலும், அதற்கு குறையாமல் வாங்கும் கார்த்தியும் இந்த படத்தில் இலவசமாக நடிக்கவிருக்கிறார்கள். (இந்த நல்ல மனசு மற்ற நடிகர்களுக்கும் வந்தால், படத்தின் வசூல் பிச்சுக்கும். ஆனால் செய்யணுமே?) சரி… இந்த படத்தை இயக்கப் போவது யார்? மூன்று இயக்குனர்களை வரவழைத்து கதை கேட்டோம். ஒருவரை முடிவு செய்திருக்கிறோம். அவர் யாரென்பதை அப்புறம் சொல்கிறோம் என்று கூறியிருந்தார் விஷால்.
அவர் சொன்ன இயக்குனர் கொம்பன் முத்தையாதானாம். கார்த்தியையும், விஷாலையும் ஏற்கனவே இயக்கியவர் என்ற முறையிலும், வில்லேஜ் கதைகளை நெத்தியடியாக எடுத்துக் கொடுப்பார். அதுவும் சிக்கனமாக என்கிற நம்பிக்கையிலும் இவரை செலக்ட் பண்ணியிருக்கிறார்களாம் இருவரும்.
அட… படத்தை முடிச்சுப்புட்டு
கடனை அடைச்சுப்புட்டு
கட்டிடத்தை கட்டிடுங்கண்ணே
நடிகர் சங்க
கட்டிடத்தை கட்டிடுங்கண்ணே… (அட கருப்பு நிறத்தழகி மெட்டில் பாடவும்)
இவரும் கட்டிடத்தை கட்டமா விடமாட்டாரு போல….