பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க சிவா!

சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடிக்கும் படமான ரெமோ, களை கட்ட ஆரம்பித்துவிட்டது. எப்போது அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியானதோ, அந்த நிமிஷம் முதல் கொண்டே சிவகார்த்திகேயன் என்ற குதிரையை பந்தய கிரவுண்ட்டுக்குள் இறக்கிவிட்டு விட்டார்கள். அவருடன் மோத வரும் எந்தெந்த குதிரைகளை முந்தப்போகிறாரோ? அது அந்த நேரத்து பரபரப்பு. ஆனால் நேற்று இந்த விழாவில் அவர் பேசியதெல்லாமே பரபரப்புதான்.

பிறகு என்னவாம்? இதுவரை நடித்த எல்லா படங்களையுமே வெற்றிப்படங்களாக்கிய மனுஷன், “இன்னமும் என்னோடு நடிக்க ஹீரோயின்கள் தயங்குறாங்க” என்று பேசினால் யாருக்குதான் சிரிப்பு வராது. அல்லது சந்தேகம் வராது? சிவகார்த்திகேயன் பொய் சொல்கிறாரோ என்றுதானே தோன்றும்? அந்த விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் அப்படிதான் தோன்றியிருக்கும்.

ரெமோ விழாவில் சற்று மனம் விட்டுதான் பேசினார் சிவகார்த்திகேயன்.

இப்படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர் என்று நிறையப் பேர் எழுதியிருந்தார்கள். ஒரு வேளை நான் இப்படி ஒரு படம் தயாரித்திருந்தால் இவ்வளவு பெரிய விழா எல்லாம் எடுத்திருக்க மாட்டேன். ரேடியோவில் ஒரு பாடலை வெளியிட்டுவிட்டு சென்றிருப்பேன். இவ்வளவு பெரிய மெனக்கிடலுக்கு காரணம் எல்லாமே ராஜா அண்ணன் தான். நானே தயாரிக்கலாம் என்று யோசித்தேன். காமெடியனாக அனைத்து நாயகர்களுடன் நடித்தால் போதும் என்று நினைத்தவனுக்கு நாயகன் என்ற பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு மேல் ஒரு பெரிய அங்கீகாரத்தால் எனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

இப்படத்துக்கு முதலில் உள்ளே வந்தவர் பி.சி.ஸ்ரீராம் சார். அவர் நான் வளரும் கலைஞர் என்று சொன்னாலும், நாங்கள் அவரை ஒளிப்பதிவின் பிதாமகராகத் தான் பார்க்கிறோம். அவர் உள்ளே வந்தவுடன் சின்ன ரொமோவாக இருந்த படம் ஷங்கர் சார் ரொமோவாக மாறியிருக்கிறது. என்னுடைய பெண் வேடத்துக்கு பி.சி.ஸ்ரீராம் சார் ஸ்பெஷலாக லைட்டிங் எல்லாம் பண்ணியிருந்தார். நானே ஒருமுறை ஸ்கிரீனில் பார்க்கும் போது காதல் வந்துவிட்டது. “சே.. நாம தான் அது” என்று அடித்துக் கொண்டேன்.

நான் பெண் வேஷம் போட முடியுமா என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 8 மேக்கப் டெஸ்ட்டுக்குப் பிறகு நிக்கி, ரேச்சல், அனு மேடம் இவர்கள் மூவரும் போட்ட மேக்கப் சரியாக இருந்தது. என்னுடைய மேக்கப் பிடித்திருந்தது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் 3 பேரும் தான். பெண் வேடத்துக்கு 42 நாள் படப்பிடிப்பு பண்ணினோம். அப்போது 3 முறை THREADING, WAXING உள்ளிட்ட நிறைய பண்ணினேன். அதெல்லாம் எப்படி பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு வலித்தது. முதல் நாள் பெண் வேடத்துக்கான மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு வெளியே வர பயமாக இருந்தது. ஒளிந்துக் கொண்டு வெளியே பார்த்தேன். பி.சி.ஸ்ரீராம் சார் முதல் ஷாட் பண்ணி என்னை ப்ரேமில் பார்த்தவுடன் தான் நம்பிக்கை வந்தது. முதல் நாள் எப்படி நடிப்பது என்று தெரியவில்லை. 42 நாட்கள் நடித்து முடித்தவுடன் பெண் வேடத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. 20 நாள் ப்ரேக் எடுத்து வீட்டில் சும்மா உட்கார்ந்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்தேன்.

நான் அதிகமாக கோபப்பட மாட்டேன், எரிச்சலடைய மாட்டேன். ஆனால் இப்படப்பிடிப்பில் எனக்கு அதெல்லாம் வந்துவிட்டது. அதெல்லாம் தாண்டி ரொம்ப சந்தோஷமாக பணியாற்றினேன். நான் ஒரு நடிகராக ஆகவிட்டேனா என்றெல்லாம் தெரியாது. நடிகராக ஆவதற்கு முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன்.

பி.சி.ஸ்ரீராம் சார், இயக்குநர் என எல்லாருமே கீர்த்தி சுரேஷ் நாயகி என்று சொல்லும் போது வேண்டாம் என்று சொன்ன முதல் ஆள் நான் தான். 2 படங்கள் தொடர்ச்சியாக பண்ணினால் கிசுகிசு வந்துவிடும் என நினைத்தேன். நானே அவரிடம் நல்ல நாயகி இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறேன். இப்படத்தின் நாயகியாக நடிக்க முடியாது என்று சொன்ன அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அழகாக இருந்தது என்றார் சிவகார்த்திகேயன்.

தமிழ்சினிமாவில் டாப் ஐந்து ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார் சிவகார்த்திகேயன். நயன்தாரா, தமன்னா, காஜல் என்று அவருடன் ஜோடி போட ராப்பகலாக தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் முன்னணி ஹீரோயின்கள் எல்லாரும். உண்மை அப்படியிருக்க, என்னோடு நடிக்க மறுத்தார்கள் என்று சிவகார்த்திகேயன் சொல்வது யாரை? ஒருவேளை ‘போட்டு’ வாங்குகிறாரோ?

1 Comment
  1. roja says

    every one knows shruthihasan and samantha rejected the movie to act with siva.

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க சிவா- yes that suits when he said that is not his own productions

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுது…? 24-6-2016

Close