என் எதிரி வைரமுத்துவை ஒரே மேடையில் சந்திக்கணும்! சினேகனின் பேச்சால் சலசலப்பு!
“என்னம்மா ஆச்சு உங்களுக்கு…? நீங்க உயிரோட வேணும்மா எங்களுக்கு…” புகழ் சினேகனுக்கு, நாக்கு நம நம என்று அரிக்க ஆரம்பித்துவிட்டது போலும். அதை இன்று சென்னையில் நடந்த சத்ரியன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உணர முடிந்தது. இந்தப்படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுத, சினேகன் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். இருவரும் இணைந்து பாடல் எழுதுகிற முதல் படம் இதுதான். கடைசி படமும் இதுவாகதான் இருக்கும் போல. ஏன்? படியுங்கள்… தானாக புரியும்.
மேடையேறிய சினேகன், “நானும் வைரமுத்துவும் சேர்ந்து எழுதுகிற முதல் படம் இது. இதுவரைக்கும் 2500 பாடல்களுக்கும் மேல் எழுதிவிட்டேன். ஆனால் இப்போதுதான் இது நடந்து இருக்கிறது. இதற்கு முன் அவர் பாடல் எழுதுகிற படத்தில் என்னையும் எழுதக் கேட்பார்கள். அதற்கப்புறம் என்னாகுமோ? அந்த வாய்ப்பு பறிபோய்விடும். அவர் சொல்லி நடக்கிறதா, தானாக நடக்கிறதா என்று தெரியாது. ஆனால் இந்த முறை நடந்துவிட்டது. இந்த மேடையில் அவரும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என் குரு அவர்தான். என் எதிரியும் அவர்தான். பல மேடைகளில் அவரை விமர்சனம் செஞ்சுருக்கேன். எதற்கும் அவர் பதில் சொன்னது இல்லை. நேரில் அவரோடு விவாதம் செய்ய வேண்டும்”
“எதிரிக்கு முன் நானும் சமம்தான் என்று சொல்கிற வாய்ப்பும், குருவுக்கு முன் வித்தையை காட்டுகிற வாய்ப்பும் அமைவதுதான் நல்ல விஷயம். அது எப்போது வரும் என்றே தெரியவில்லை. அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
பின்னாலயே பேச வந்த டைரக்டர் அமீர், “சந்தனத் தேவன் படத்தில் வைரமுத்துதான் பாடல் எழுதுகிறார். ஒரு பாடல் சினேகனுக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வைரமுத்துவின் ஒப்புதலோடு அது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் வைரமுத்து என் எதிரி என்று சினேகன் பேசிய பின்பு, நான் எப்படி அவரிடம் போய் கேட்பது?” என்று வேதனைப்பட்டார்.
ஆக புலவர்களுக்குள் புல் மீல்ஸ், மினி மீல்ஸ் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது என்பதுதான் நிஜம்!
https://www.youtube.com/watch?v=uB-l8UmwoWc