காயம் படாமல் மாட்டை அடக்குங்க ரிட்டையர்டு மாடுபிடி வீரர் சூரி அறிக்கை!

உலகம் இந்த உண்மையை அறியாம எப்படிய்யா இத்தனை வருஷம் சும்மாயிருந்துச்சு? நம்ம காமெடி சூறாவளி சூரியும் ஒரு மாடு பிடி வீரராம்ல? கடந்த சில வாரங்களாகவே மாட்டு வாலில் உன்னி உட்கார்ந்த மாதிரி, ஓயாமல் இம்சித்துக் கொண்டிருந்த ஒரு மேட்டருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது மத்திய அரசு. ஜல்லிக்கட்டு நடத்தியே ஆகணும் என்று மதுரை, தேனி, உள்ளிட்ட மக்கள் தாங்களும் போராடி, தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை விட்டும் மனு கொடுக்க வைத்தார்கள். விலங்குகள் நல வாரியம் ‘விட மாட்டோம்’ என்று மல்லுக்கு நிற்க, எப்படியோ ஸ்பெஷல் முயற்சி எடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிவிட்டது மோடி அரசு.

அதற்கப்புறம் ஒரே கோலாகலம்தான். மதுரை ஏரியாவில் பட்டாசு வெடித்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வரும் வேளையில், நடிகர் சூரியும் ஒரு அறிக்கை வெளியிட்டு தன் மாடுபிடி சாகசங்களை நினைவு கூர்ந்திருக்கிறார். அந்த அறிக்கை இதுதான்-

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த வருடமும் நடக்காமல் போய்விடுமோ பரிதவித்தவர்களில் நானும் ஒருவன். ஒரு மாடுபிடி வீரனாகவும், பலநூறு மாடுகளை எங்கள் வீட்டில் வளர்த்தவனாகவும் ஜல்லிக்கட்டு விளையாட்டின்மீது நான் கொண்டிருந்த நேசம் அளவிட முடியாதது. ஆனால், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளைச் சேர்த்ததால் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த முடியாமல் போனது என்னைப் போன்றவர்களுக்கு தாங்க முடியாத வேதனையை உண்டாக்கியது. தமிழ் மக்களின் வீர விளையாட்டு இந்த வருடமும் நடக்காமல் போனால், நமது பாரம்பரியப் பெருமையும் சிறப்பும் மீட்க முடியாத அளவுக்குப் போய்விடுமே என தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வேதனையின் விளிம்பில் இருந்தனர்.

இந்த நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் போராட்டத்தாலும் தமிழ் மக்களின் இடைவிடாத கோரிக்கையாலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. வெளிநாட்டில் சிகப்பு துணியைக் கையில் வைத்துக்கொண்டு காளையை சுவற்றில் மோத விட்டே கொல்வதுபோல் நாம் ஜல்லிக்கட்டு நடத்துவது இல்லை. திமிலோடு நிற்கும் காளைக்கு நேராக நாம் திமிரோடு நின்று அடக்க முயல்கிறோம். இது தமிழர்களின் வம்சாவழி வீரம்.

எந்தக் கொம்பனாக இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக எதிர்க்கிறவன் தமிழன். அதற்கான அடையாளம்தான் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு. மொத்தத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் தனி, மாடுகள் தனி எனப் பிரிக்க முடியாது. இத்தகைய அன்புக்கும் வீரத்துக்கும் அடையாளமான ஜல்லிக் கட்டு நிகழ்வு இந்த வருடம் நடக்க இருப்பது ஒவ்வொரு தமிழர்களுக்குமான வெற்றித் திருவிழா. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மிகக் கவனமாகச் செய்துகொண்டு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதபடி தமிழர்களின் வீரவிளையாட்டை அரங்கேற்றிக் காட்டுவோம்.

இவ்வாறு ரிட்டையர்டு மாடுபிடி வீரர் சூரி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டாப்லெஸ் ஆதரவாளர் வேலுபிரபாகரன் மீண்டும் பீப் காலத்தில்! இந்த படத்துல என்ன அட்ராசிடியோ?

ஒரு இயக்குனரின் காதல் டைரி! இதுதான் வேலு பிரபாகரனின் அடுத்த அதிரடி ஆர்ப்பாட்டம்! ஒரு காலத்தில் பெரியார் திடலில் பேச்சுப்புலியாக திரிந்த வேலு பிரபாகரன், குட்டி பெரியாராகவே...

Close