கமல் படத்திற்கு கை கொடுத்த ரஜினியின் மகள்!!!
ஒருவகையில் தமிழ்சினிமா நன்றி சொல்ல வேண்டிய கட்டத்திலிருக்கிறது சவுந்தர்யா ரஜினி அஸ்வினுக்கு. தமிழ்சினிமா துறையில் நிலவும் தீராத பிரச்சனைகளை கூட வெகு எளிதாக தீர்க்கக் கூடிய அளவுக்கு ஒரு முக்கியமான பதவிக்கு வந்திருக்கிறார் அவர். பல நுறு கோடியை சினிமாவில் இறக்குகிற அளவுக்கு ஸ்டிராங்கான நிறுவனம்தான் ஈராஸ். கோச்சடையான் படத்தை தயாரித்திருப்பதும் அந்த நிறுவனம்தான். அந்த படத்தின் வெளியீட்டுகு பிறகு அதே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை பெற்றார் சவுந்தர்யா.
வந்தவுடன் அவர் போட்ட முதல் கையெழுத்தே கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை பெறுவது தொடர்பானதுதான். அதுவரைக்கும் அந்த படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை வாங்குகிற துணிச்சல் ஒரு நிறுவனத்திற்கும் இல்லை. இப்போது அதே போலொரு நல்ல காரியத்தை செய்திருக்கிறார் அவர். லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படம், பரவலாக ஓடியதாக சொல்லப்பட்டாலும், அவரை பொறுத்தவரை சிக்கல்தானாம். இது போதாதென சமூக வலைதளங்கள் இப்பவும் அந்த படத்தை கிழித்து தொங்கப் போட்டு வருவது துரதிருஷ்டம்.
உத்தம வில்லன் உள்ளிட்ட நாலைந்து படங்களை தயாரித்து வரும் திருப்பதி பிரதர்ஸ், இதில் பெரிய படமான உத்தம வில்லனை விற்றாலே பாதி பிரச்சனை சால்வ்! இது ஒரு புறமிருக்க, வாங்கி வைத்த சிவகார்த்திகேயன் கால்ஷீட் வீணாகிவிடுமோ என்றும் அஞ்சிக் கொண்டிருந்தது அந்நிறுவனம். அவர் நடிக்கும் ரஜினி முருகன் படப்பிடிப்பை பொருளாதார சிக்கல்கள் காரணமாக தொடர முடியாத நிலைமை.
இந்த நேரத்தில்தான் அந்த நல்ல விஷயத்தை செய்து கொடுத்திருக்கிறார் சவுந்தர்யா. தான் பணியாற்றும் ஈராஸ் நிறுவனத்தின் சார்பாக உத்தம வில்லன் படத்தின் வெளியீட்டு உரிமையையும், இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத ரஜினி முருகன் படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியிருக்கிறாராம்.
திருப்பதி பிரதர்ஸ் இப்போது தெம்பாக இருக்கிறது. சிவகார்த்திகேயன்… எப்ப ஷுட்டிங் ஆரம்பிக்கலாம்?