இதான் சூர்யாவோட பழக்கம்! என்ன… அதிர்ச்சியா இருக்கா?
நான் நடிச்ச படத்தை நானே பார்க்க மாட்டேன் என்கிற கொள்கையுள்ள நடிகர்கள் யாராவது இருப்பார்களா? இந்த கேள்விக்கு அப்புறம் விடை தேடலாம். படம் பார்க்கிற விஷயத்தில் நடிகர்கள் எப்படி? அதுவும் முன்னணி ஹீரோக்கள் எப்படி?
கேட்டால் தலை கிறுகிறுத்துப்போய்விடும். பாதிக்கு மேல் திருட்டு விசிடிதான். ஒரு சிலர்தான், ‘படம் நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டேன். ஒரு ஷோ ஏற்பாடு பண்ண முடியுமா ?’ என்று நேரடியாக இயக்குனரிடமோ, அப்படத்தின் ஹீரோவிடமோ கேட்டு பிரத்யேக ஷோவில் ரசிக்கிறார்கள். இன்னும் சிலர் படு மோசம். அந்த படத்தின் வெற்றி விழாவில் வாழ்த்த வருவார்கள். ஊர் உலகமே அந்த படத்தை கொண்டாடியிருக்கும். ஆனால் நம்மை மதித்து அழைத்திருக்கிறார்களே என்கிற கூச்சம் கூட இல்லாமல், ‘நான் இன்னும் இந்த படத்தை பார்க்கல. நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. அதனால் வாழ்த்த வந்தேன்’ என்று சொல்லி, படக்குழுவுக்கு விளக்கெண்ணை கொடுத்துவிட்டு போவார்கள்.
இப்போது நாம் சொல்லப்போகிற விஷயம் அவ்வளவு மோசமானதில்லை என்றாலும், ‘ஏன்ன்ன்ன்ன்ன்?’ என்று நீண்ட பெருமூச்சை வரவழைக்கிற ரகம். வேறென்றுமில்லை, சூர்யா இருக்கிறாரல்லவா? அவர் நடித்த படங்கள் எதையும் ரிலீஸ் ஆன பின் பார்ப்பதில்லையாம். டப்பிங் நேரத்தில் பார்க்கிறார் அல்லவா? அதோடு சரி. அதற்கப்புறம் எங்கும், எதன் பொருட்டும் அவர் நடித்த படங்களை பார்ப்பதில்லை என்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
இதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இருக்கிறதா? அல்லது ச்சும்மா ஒரு சேஞ்சுக்கு நாம் அப்படி இருப்போமே என்பதாலா? சூர்யாவே விளக்கினால்தான் உண்டு.