சூர்யாவுக்கு யாருமே நினைத்துப்பார்க்காத ஜோடி?
சாதாரணமாகவே கேரளப் பெண்கள் அழகு. அந்த அழகுக் கேரளமே ‘அடடடா அழகு’ என்று வியந்து வியந்து கொண்டாடிய ஒரு அழகுதான் மஞ்சு வாரியர்!
குடும்ப வாழ்க்கை கசந்து போன 982 வது நடிகையாக இப்போது திரும்பி வந்திருக்கிறார் இவர். ஏன் பிரிஞ்சீங்க? எதுக்கு பிரிஞ்சீங்க? என்று குடும்பம் கேட்டு, கோர்ட் கேட்டு, மீடியாவும் கேட்டு மனசை நோகடித்த பின்பும் தன் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார் என்றால், அதுதான் கடவுள் கொடுத்த கிஃப்ட்.
மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லாருடனும் நடித்துவிட்டு போன மஞ்சு, திலீப்புடன் நடிக்கும் போது காதலாகி கசிந்துருகி அவரை கல்யாணம் செய்து கொண்டார். பதினைந்து வருட குடும்ப வாழ்க்கையில் இப்போது குழாயடி சண்டையாம். கணவரை பிரிந்து இல்லற வாழ்வையும் உதறிவிட்டார். மீண்டும் சினிமா…இதுதான் அவரது ஒரே ஆறதலாக இருந்தது. அப்படி இல்லறத்திலிருந்து விலகி அவர் நடித்து வெளிவந்த ஹவ் ஓல்ட் ஆர் யூ படம் செம ஹிட். கேரள சினிமாவின் முன்னணி ஹீரோயின்களே இந்த ஹிட்டினால் கிலி பிடித்திருக்கிறார்கள். வேறென்ன? நம்ம திண்ணைக்கு ஆள் வந்தாச்சே என்கிற அச்சம்தான்.
இந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்துவதை போல கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார் மஞ்சு. அதில் சில தமிழ் படங்களும் அடக்கமாம். சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க சொல்லியும் ஆஃபர் வந்திருக்கிறதாம். அதுவும் நடந்துவிட்டால், தமிழ்நாட்டு முல்லை பெரியாறிலும் வெள்ளம்தான்!