ஐ லவ் டமிள் டைரக்டர்ஸ்! இந்த ஆந்திராவும் இருக்கே…சே! தெலுங்கு நடிகரின் பேச்சால் பரபரப்பு
தேசிய விருது பெற்ற ‘விசாரணை’ படத்தை யாரும் மறக்க முடியாது. அதில் வரும் அந்த மொட்டை போலீசை நினைத்தாலே கை கால்கள் உதறும். ‘இதுதான்டா போலீஸ்’ என்று காலரை உயர்த்திய தெலுங்கு பட ஏரியாவிலிருந்து வந்த இந்த மொட்டை போலீஸ், ‘இதுவாடா போலீசு?’ என்று எல்லாரையும் கிலி பிடிக்க வைத்தார். கட்…
இப்போது மீண்டும் அதே மொட்டை போலீஸ். அவரது பெயர் அஜய் கோஷ். தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவரை, மீண்டும் ‘தப்பு தண்டா’ படத்தின் மூலம் தமிழில் நடிக்க வைத்திருக்கிறார் ஸ்ரீகண்டன். இவர் பாலுமகேந்திராவின் உதவியாளர். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பாலுமகேந்திராவின் மனைவி அகிலா வந்திருந்தார்.
இங்கு பேசிய அஜய்கோஷ்தான் மேடையை சலசலக்க வைத்தார். “அவர் பேசிய பேச்சுக்கு இனி ஆந்திரா பக்கம் கால் வைக்க முடியாது போலிருக்கே?” என்று அங்கு வந்த தெலுங்கு நிருபர்கள் முணுமுணுத்தது தனிக்கதை. அப்படியென்ன பேசினார் அஜய் கோஷ்.
‘அந்தரிக்கு நமஸ்காரம்’ என்று ஆரம்பிக்கிற வாயால், ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று ஆரம்பித்தார். அதற்கப்புறம் அவர் செய்ததுதான் பயங்கரம். மேடைக்கு முன்னால் வந்து அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். அதற்கப்புறம் மைக்கை பிடித்தவர், “நான் இந்த தமிழ் இன்டஸ்ரியை வணங்குறேன் சார். இப்படியொரு இன்டஸ்ட்ரி, இவ்வளவு அறிவுள்ள டைரக்டர்கள், அதுவும் வெற்றிமாறன் மாதிரியான டைரக்டர்கள் உள்ள இந்த மண்ணை நான் வணங்கறதுல ரொம்ப பெருமை சார். நானும் தெலுங்கு படங்களிலெல்லாம் நடிச்சுருக்கேன். ஆனால் எனக்கு இப்படியொரு கேரக்டர் கொடுக்கணும்னு என்னை தேடி வந்து அழைச்சு பெருமை படுத்துனது வெற்றிமாறன் சார்தான். அந்தப் படத்தை ஆஸ்கர் வரைக்கும் கொண்டு போய் என்னையும் உலக அளவில் பெருமை படுத்திட்டார். என் ஆசையெல்லாம் நான் இங்கேயே, இதே தமிழ் இன்டஸ்ட்ரியிலேயே இருந்திட வேணும்னுதான். எனக்கு தெலுங்கு படமெல்லாம் வேண்டாம் சார்”.
“அங்க எல்லாருக்கும் ஈகோ இருக்கு சார். சும்மா பார்க்கும் போதே கர்வமாதான் பார்ப்பாங்க. ஆனால் தமிழ் இன்டஸ்ட்ரி அப்படியில்ல. எல்லாருக்கும் மரியாதை கொடுக்குற இன்டஸ்ட்ரி” என்று உணர்ச்சிக் கொந்தளிப்பில் வார்த்தைகளை கொட்டிக் கொண்டே போனார். அதைவிட பெரிய அதிர்ச்சி, அங்குள்ள தெலுங்கு பத்திரிகையாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று அவர் நடித்துக் காட்டியதுதான்.
தப்பு தண்டா படத்திலும் இவருக்கு போலீஸ் கேரக்டர்தான். விசாரணை அளவுக்கு எனக்கு பேர் வாங்கித் தரப்போற இன்னொரு படம் என்று அஜய் கோஷ் குறிப்பிட்டதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. பார்க்கலாம்…
https://youtu.be/H9sZwLMwErQ