தெறி விமர்சனம்
அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா…” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’ கட்டுகிற அளவுக்கு தெறி தட்டுகிறார்கள் தியேட்டரில். நாளைக்கு பிறக்கப் போகிற குழந்தை கூட, வயிற்றிலிருக்கும் போதே தெரிந்து வைத்த கதைதான் இந்த தெறி. அதைதான் விஜய் என்ற ஒரே மனிதனின் தலையில் ஏற்றி வித்தை காட்டியிருக்கிறார் அட்லீ. தெரிந்தே தலை கொடுத்திருக்கிறார் விஜய்யும்.
ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி, தன் குடும்பத்தை துஷ்டர்களின் விஷக் கொடுக்குக்கு தாரை வார்த்துவிட்டு தப்பிக்கிறார். பிறகு எங்கே எப்படி குழந்தையுடன் நிம்மதியாக வாழ்கிறார்? குற்றவாளிகளுக்கு அவர் கொடுத்த தண்டனை என்ன? என்பதுதான் இந்தப் படத்தின் இரண்டே வரிக் கதை. ஒரு சினிமாவை எங்கு ஆரம்பிக்க வேண்டும்! மெல்ல தென்றல் போல துவங்கும் அப்படம், புயலாக எங்கு வீச வேண்டும்! எந்த இடத்தில் அது சூறாவளியாக சுழன்றடிக்க வேண்டும் என்பதையெல்லாம் தெள்ளந் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் அட்லீ! இல்லையென்றால் படத்தில் முதல் இரு காட்சிகளில் அசால்ட்டாக கடந்து போகும் ஃபைட் சீக்வென்சில் விஜய்யை அமைதி காக்க வைத்துவிட்டு பதுங்கியிருக்குமா அவரது திரைக்கதை?
விஜய் காமெடி பண்ணினால் ‘கிச் கிச்’ நிச்சயம் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் இந்தப்படத்தில் அவரது மேனரிசமும், டயலாக் டெலிவரியும் நினைத்து ரசிக்க வைக்கிறது. ஸ்கூலில் ரவுடிகளுக்கு கிளாஸ் எடுக்கிற அந்த இடம் ரகளை என்றால், அம்மா ராதிகாவுடன் விஜய் அடிக்கும் செல்ல சிணுங்கல்கள் அத்தனையும் வேறொரு அழகு. “அப்படிச் ச்சொல்ல்ல்ல்லக்கூடாது…” என்று ராதிகாவிடம் ஒரு சிணுங்கு சிணுங்குகிறாரே… “எங்க இன்னொரு தடவ பண்ணுங்க விஜய்” என்று ஆர்வமாகிறது தியேட்டருக்கு வந்த தாய்குலம்ஸ்.. அதற்கப்புறம் பைட்! சிக்னலில் குழந்தைகளை பிச்சையெடுக்க விடும் ரவுடிகளை போட்டு புரட்டி எடுக்கிறாரே… அந்த காட்சியில் விஜய்யின் பஞ்ச்சும், திலீப் சுப்பராயனின் பைட் கம்போசிங்கும் ஆஹா ஆஹா… அந்த பிச்சைக்குழந்தைகள் எபிசோட் கண்கலங்கவும் வைக்கிறது.
குழந்தையை பிச்சையெடுக்க விடும் அந்த வில்லனின் டயலாக்குகளும், திமிரும் செம கிக். “கொழகொழன்னு கொழந்த மாதிரி மூஞ்ச வச்சுகிட்டு… யார்றா நீ?” என்று விஜய்யை வாரும்போது, தியேட்டரே ரகளையாகிறது.
ஒரு வழக்கமான கதையை புதுசாக்குவதிலிருக்கிற பிரச்சனையை சற்றே தளர விட்டிருக்கிறார் நம்ம குட்டி மீனா. யெஸ்… நடிகை மீனாவின் மகள் நைனிகாவுக்கும் விஜய்க்குமான அந்த உறவு அற்புதமாக திரையில் மலர்ந்திருக்கிறது. நைனிகாவும் “தப்பு பண்ணினா ஸாரி கேட்டுடணும்” என்ற லாஜிக்கோடு தன் மகளை வளர்க்கும் விஜய்யும் மனமெங்கும் நிறைந்து இடம் பிடித்துக் கொள்கிறார்கள். பேபி ஷாலினி, பேபி ஷாம்லி சகோதரிகளின் காலத்தை நம் கண் முன் கொண்டு வந்திருக்கிற நைனிகாவுக்கு, அவர் குமரியாகிற வரை கால்ஷீட் டைரி புல்லாகவே இருக்கும். இருக்கட்டும்…
மொட்டை ராஜேந்திரனுக்கு பிரமோஷன்! அவரும் கிடைத்த கேப்பில் கிடா வெட்டியிருக்கிறார். மேலதிகாரிக்காகவே வாழும் இதுபோன்ற ஊழியர்களும் இருக்கதானே செய்கிறார்கள்?
படத்தின் வில்லன் நம்ம பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன். இந்த வயதில் அவர் என்ன பண்ணப் போகிறார் என்று நாம் நினைத்த மாதிரியே அட்லீயும் நினைத்ததுதான் அநியாயம். இருந்தாலும் செந்தாமரை, அசோகன்கள் செய்வது போல குழந்தை குளிக்கும் தொட்டியில் தண்ணீரை திறந்துவிட்டு கிளம்புகிறார். கடைசி காட்சியில் அவரையும் தலைகீழாக கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள். நல்லவேளை… மகேந்திரனின் இமேஜ் தொங்காமல் அப்படியே இருப்பது ஆறுதல்.
சமந்தாவுக்கும் விஜய்க்குமான லவ்வில் அப்படி பொங்கி வழிகிறது யதார்த்தம். சமந்தாவும் ஓவர் மேக்கப்பில், உளுந்த மாவை உருட்டிப் போட்ட மாதிரி ஜம்மென இருக்கிறார். படத்தில் அவரது முடிவு அல்பாயுசு என்றாலும், அலைபாய வைக்கிறது அவரது நடிப்பு. படத்தில் எமியும் இருக்கிறார். அவரது மண்டையிலிருக்கிற விக் மாதிரியே படம் முழுக்க ஒட்டாமல் தவிக்கிறது அவரது கேரக்டர். எமியை இந்த படத்தோடு இந்தியாவை விட்டே பேக்கப் பண்ணிவிட்டால் இன்பமாக இருக்கும். படத்தில் பிரபுவும் இருக்கிறார். அவ்ளோ வெயிட்டான அவருக்கு வெயிட்டேயில்லாத ரோல்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பின்னணிக்கு நிறைய வேலை! உணர்ந்து உருவாக்கியிருக்கிறார். பாடல்களில் சில கேட்ட ரகம். சில திரும்ப திரும்ப கேட்கும் ரகம். அவற்றையெல்லாம் செட் போட்டு படமாக்கியிருக்கும் குழுவின் அசாத்திய முயற்சிக்கு தனியாக ஒரு கைதட்டல். ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவு விசேஷம். குறிப்பாக பல கிரீன்மேட் ஷாட்டுகளை ஒரிஜனலாக்கி தர ஒத்துழைத்த விதத்தில். பாடல் காட்சிகள் நாம் முன்னெப்போதும் பார்த்திராத வெளிநாடுகளாக இருக்கும் என்று நினைத்தால், அவ்வளவும் செட்டும்மா! ஆர்ட் டைரக்டருக்கு ஒரு அல்டிமேட் பொக்கே!
முதல் பாதியிலிருக்கிற விறுவிறுப்பும் பரபரப்பும் இரண்டாம் பாதியில் தொங்கி விட்டதை இயக்குனரும் உணராமல், எடிட்டருக்கும் புரியாமல் விட்டதுதான் ஏனென்றே புரியவில்லை. “இப்பல்லாம் ஆவிப்படம்தான் நல்லா ஓடுது அண்ணாச்சி” என்று ராங் ரூட்டுக்கு ரைட் போட்டுக் கொடுத்த அந்த அசிஸ்டென்ட் டைரக்டர் மட்டும் கையில் கிடைத்தால், தியேட்டர் வாசலிலேயே ‘வச்சு செய்யலாம்!’
விஜய் மாதிரியான ஒரு ராட்சத பலசாலிக்கு தெறி…. அட்லீ ஊட்டியிருக்கும் ‘மினி பேக்’ சோளப்பொறி!
-ஆர்.எஸ்.அந்தணன்
** விஜய் மாதிரியான ஒரு ராட்சத பலசாலிக்கு **
நடிப்புப் புலி?