100 கோடி வசூலை நோக்கி தெறி! ஹேப்பிதான்… ஆனா இவிய்ங்க இப்படி பண்றாங்களே?
தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வசூல் ஹீரோ படத்தை ஒரு பெரிய ஏரியாவில் வெளியிடாமல் புறக்கணித்த பெருமையை செங்கல்பட்டு ஏரியா பெற்றிருக்கிறது. இது பெருமை என்று விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் நினைத்தாலும், நிஜத்தில் விஜய் ரசிகர்களுக்கு வெறுமைதான். இந்த நிலையில் இந்த படம் திரையிடப்படாமல் தடுக்கப்பட்டது குறித்து இன்று செய்தியாளர்களிடம் தன் கோபத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளர் தாணு.
தமிழகத்தில் வெளியான அனைத்து திரையங்குகளிலும் தெறி வசூல் சாதனையைப் பெற்றுள்ளது. ஆனால் செங்கல்பட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட திரையரங்கு உரிமையாளர்களால், அந்தப் பகுதிகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்கள்தான் காரணம். செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வமே காரணம். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் பன்னீர்செல்வம் தான் பிரச்னை கொடுக்கிறார். செங்கல்பட்டு ஏரியாவிலுள்ள தியேட்டர்களில் ‘தெறி’ படத்தை வெளியிடாமல் பன்னீர் செல்வம் அவர்கள் தடுத்ததற்கான காரணம், அவரது மகனுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னால் திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு விஜய்யையும், ரஜினிகாந்தையும் அவர் அழைத்திருந்தார். ஆனால் அந்த திருமணத்திற்கு ரஜினிகாந்தும், விஜய்யும் செல்லவில்லை.
அந்த திருமணம் நடக்கும்போது விஜய்யும், ரஜினிகாந்தும் வெளிநாடுகளில் இருந்த காரணத்தால் அவர்களால் அவர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. இதை மனதில் வைத்து தான் அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக விஜய் நடித்த படத்தை வெளியிடுவதில் தியேட்டர் அதிபர்களை ஒருங்கிணைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளார். (இந்த விஷயத்தை நாம் முன்பே நமது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தோம். காண்க https://wh1049815.ispot.cc/tfpc-plans-to-vijay-enemys/)
நான் படத்தை சத்யம், ஐநாக்ஸ், பி,வி,.ஆர், பல திரையரங்குகளில் வெளியிட்டுள்ளேன். ‘அங்கெல்லாம் நீங்கள் போடும் ஒப்பந்தத்தை ஏன் எங்களுடன் போடுவதில்லை?’ எனக் கேட்கிறார் செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர். அங்கே இருக்கும் திரையரங்குகள் மாதிரியா நீங்கள் திரையரங்குகள் கட்டியுள்ளீர்கள்? மேலும் நான் உங்கள் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டாலும் நீங்கள் வசூலை சரியாக கொடுக்கப்போவதில்லை பின் எப்படி நான் உங்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்க முடியும் என்றார் தாணு. ‘தெறி படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே நாள் வசூலாக சென்னையில் மட்டும் ஒரு கோடியைச் சம்பாதித்துள்ளது. எந்தப் படத்திற்காவது இப்படி வசூல் வந்திருக்கிறதா நாங்கள் ஒன்றும் கொள்ளைக்காரர்களோ, கொலை காரர்களோ இல்லை’ என்றார் ஆவேசமாக.
உண்மையில் இந்த விஷயத்தில் இப்போது சிக்கித் தவிப்பவர்கள் அவரது சூழ்ச்சியான பேச்சை கேட்டு நடந்துகொண்ட தியேட்டர் உரிமையாளர்கள் தான். ‘தெறி’ உலகம் முழுக்க வெளியாகி வசூலில் பல சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியிட்ட எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதை கேள்விபட்டு, செங்கல்பட்டு ஏரியாவிலுள்ள் சில தியேட்டர் உரிமையாளர்கள் எனக்கு ஃபோன் செய்து வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள். இப்படி நல்ல வசூல் செய்ய கூடிய ஒரு படத்தை திரையிட விடாமல் தடுத்து சூழ்ச்சி செய்யும் பன்னீர் செல்வத்தின் செயல் சினிமாவை அழிக்கும் செயலாகும்! இது சினிமாவில் இருந்துகொண்டே அவர் சினிமாவுக்கும், சினிமாவை நம்பி இருப்போருக்கு செய்யும் பெரும் துரோகம் ஆகும். அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன், தயவு செய்து பெரிய பதவியில் இருந்து கொண்டு உங்கள் சுயநலத்துக்காக சினிமாவை அழித்து விடாதீர்கள். நீங்கள் செய்யும் சூழ்ச்சிக்கும், அநியாயத்திற்கும் காலம் பதில் சொல்லும்’’ என்றார்.
இது ஒருபுறமிருக்க, தெறி படத்தின் தெறிக்க விடும் கலெக்ஷனால் விஜய்யும் தயாரிப்பாளர் தாணுவும் ஹேப்பி! பாக்ஸ் ஆபிஸ் கூறும் வசூல் தகவல் இது-
‘தெறி’ திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகி வசூலில் சாதனை செய்து வரும் நிலையில் இந்த படம் வசூல் செய்த தொகை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் ‘தெறி’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.35.5 கோடியும், கேரளாவில் ரூ.6.60 கோடியும், கர்நாடகாவில் ரூ.5.05 கோடியும், ஆந்திராவில் ரூ.3.20 கோடியும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.1.25 கோடியும் என மொத்தம் இந்தியாவில் மட்டும் ரூ.51.42 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவை தவிர அமெரிக்காவில் ரூ.6.15 கோடியும், பிரிட்டனில் ரூ.2.62 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.1.57 கோடியும், பிரான்ஸில் ரூ.1.60 கோடியும், மலேசியா,சிங்கப்பூர் மற்றும் இதர நாடுகளில் ரூ.22 கோடியும் என மொத்தம் ரூ.85 கோடி வசூல் செய்துள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு முழுமையாக விடுமுறை விட இன்னும் இரண்டொரு நாட்கள்தான் இருக்கின்றன. அப்படி விடுமுறைக்குப்பின் தெறி கலெக்ஷன் இன்னும் தாறுமாறாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.