திமிரு புடிச்சவன் /விமர்சனம்

தமிழ்சினிமாவில் சாயம் போகிற அளவுக்கு காக்கியை அடித்து துவைத்து வெளுத்துவிட்டார்கள். இருந்தாலும் எப்பவோ வந்த தங்கப்பதக்கமும், எப்போதும் மனசில் நிற்கும் மூன்று முகமும், எவர் க்ரீன் கம்பீரத்துடன் சாமியும், சமயங்களில் சிங்கம் அண்கோவும் இருக்க… ‘இப்ப எதுக்குய்யா இன்னொன்னு?’ என்று கேட்டால், ‘காக்கியில முக்கியெடுக்கலேன்னா அவன் நடிகனே இல்ல’ என்றொரு பதில் வரக்கூடும்.

மிளகாயை நறுக்கி மூக்கில் செருகினால் கூட, ‘ரெடி டேக்’ என்றால் தும்மக் கூட மாட்டார் விஜய் ஆன்ட்டனி. அவருக்குப் போய் காதல், ஆக்ஷன், சென்ட்டிமென்ட், பைட் என்று கலந்து கட்டி களி கிண்டியிருக்கிறார் இயக்குனர் கணேஷா. முடிந்தவரை முதுகில் சுமக்கிறார் ஹீரோ!

கண்டிப்பான அண்ணனின் டார்ச்சர் பொறுக்க மாட்டாமல் சென்னைக்கு ஓடிவரும் தம்பி, ‘போலீஸ்னா வெத்து. ரவுடிதான் கெத்து’ என்ற முடிவுக்கு வருகிறார். அவரைத் தேடி சென்னைக்கு வரும் அண்ணன் விஜய் ஆன்ட்டனி ஒரு போலீஸ். வந்த இடத்தில் தம்பியை தேடி மஃப்டியில் சோளம் விற்கும் அவருக்கு தம்பியே கண் முன் வருகிறான்… அதுவும் லோக்கல் ரவுடியாக. சுட்டுத்தள்ளுகிறார்! தம்பியை இப்படி தவறான பாதைக்கு கொண்டு சென்றவன் எவனோ, அவனையும் வெளுக்க வேண்டி தன் போலீஸ் பயணத்தை துவங்குகிறார். மிச்ச சொச்சம் என்ன என்பதுதான் காரசாரமற்ற முடிவு!

‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. ‘சாக்கடை அள்ளுவது கூட நம்ம வேலை’ என்று அவர் முடிவெடுப்பதெல்லாம் காமெடி என்றாலும், மண்டையை கழுவி வைத்துக் கொண்டு ரசிக்க முடிகிறது. அவ்வளவு பெரிய ரவுடி, பவுடர் கடத்துவதை கூட கண்டுபிடித்துவிடுகிற இவருக்கு, அவனை அரெஸ்ட் பண்ணுவதற்கு மட்டும் காரணம் சிக்கவில்லையாம். அவன் மீது கோழி திருடிய குற்றம் ஒன்று கிடைக்க, சந்தோஷமாக அவர் கைது பண்ணக் கிளம்புகிற காட்சிக்கு செத்துப்போன சிவாஜியே தங்கப்பதக்கம் டிரஸ்சோடு வந்து கைதட்டுவார்(?)

நல்லவேளை… இவருக்கும் நிவேதா பெத்துராஜுக்குமான காதல் செம ஸ்மார்ட்! உன்னை லவ் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு. கிளம்பு என்று புல்லட்டிலிருந்து இறங்கிக் கொள்கிற அந்த காட்சி!

லஞ்சப் பிசாசு நிவேதாவின் புன்னகையும் கம்பீரமும் சூப்பரோ சூப்பர். என்னவொரு அலட்சியமான டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ். இந்தப்படத்தை கொஞ்ச நஞ்சம் ரசிக்க முடிகிறது என்றால், அது முழுக்க முழுக்க நிவேதாவின் பர்பாமென்சுக்காகதான்! முக்கியமாக நிவேதா புல்லட் ஓட்டும் ஸ்டைல்.

பல படங்களில் கூட்டத்தோடு கோவிந்தா போட்ட தீனா என்பவர்தான் இப்படத்தின் ஸோலோ வில்லன். இந்த பிரமோஷனை கவனமாக உள்வாங்கி கம்பீரமாக மிரட்டியிருக்கிறார். தன் மீசைக்காக பெத்த அப்பனையே பலி போடுவது கூட திடுக் திருப்பம்தான்.

திருநங்கைகளுக்கு நல்ல இமேஜ் வருவதற்காக ஒரு அணில் போல உதவி செய்யும் இயக்குனர்கள் வரிசையில் கணேஷாவும் சேர்ந்திருக்கிறார். தனி பாராட்டுகள். போலீசாக நடித்திருக்கும் அந்த நிஜ திருநங்கையும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், தன் இருப்பை உர்ஜிதமாக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன்.

படத்தில் வரும் அந்த நான்கு பசங்களும் ஈரக்குலையை நடுங்க வைக்கிறார்கள். மைனர் பசங்களை தொழிலுக்கு வைத்துக் கொள்ளும் ரவுடி, அவர்களுக்கு தீனி போட்டு வளர்த்து திசையெங்கும் குற்றம் பரவச் செய்கிற விஷயம்… கேட்பதற்கும் பார்ப்பதற்கும் புதுசுதான்! உயரதிகாரிகள் ஆராய வேண்டிய உளவியலும் கூட!

நிமிஷத்துக்கு நிமிஷம் பதற விடுகிற போலீஸ் படங்களையே, ‘காலி துப்பாக்கி’ என்று காமென்ட் அடிக்கிற ரசிகர்களுக்கு, அடர்த்தியில்லாத திரைக்கதையுடன், அசுவாரஸ்மான திருப்பங்களுடன், பேத்தலான காட்சியமைப்புகளுடன் ஒரு படத்தை கொடுத்தால் என்னாகும்? ஒரு போர்ஸ்சான போலீஸ் அதிகாரிக்கு ஏன் அப்படியொரு நோய் வரவேண்டும்? அவர் அவ்வப்போது சுருண்டு கொள்ள வேண்டும்? (போய்யா… படத்துல இது மட்டுமா பிரச்சனை?)

சரி போகட்டும். பாடல்களும் அதை படம் பிடித்த விதமும் அருமை. குறிப்பாக அந்த ‘நக நக’ பாடலின் எழுச்சியும் அதன் வேகம் குறைக்காத அந்த பாட்டும்! விஜய் ஆன்ட்டனியே இசை என்பதால் அந்த பகுதியில் நிறைவு!

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு வழக்கம் போல சிறப்பு. இந்தப்படத்திற்கு விஜய் ஆன்ட்டனியே எடிட்டரும் கூட! எந்த புறா தன் முட்டையை கூமுட்டை என்று ஒப்புக் கொள்ளும்? எல்லா காட்சிகளுக்கும் டிக் அடித்து உள்ளே இறக்கிவிட்டிருக்கிறார்.

‘திமிருக்கே புடிச்சவன்’ என்கிறார்கள் ஒரு பாடல் வரியில்! திமிருக்கு புடிச்சுருக்கலாம்… ஆனால், தியேட்டருக்கு புடிக்கணுமே!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வர வர விஜய் ரஜினியாக முடிவெடுத்து விட்டார் போலிருக்கே?

Close