தோழா விமர்சனம்

தெலுங்கு ஹீரோக்களை தமிழ் படங்களில் நடிக்க வைக்கிற போது பெரும்பாலும் அது கன்னுக்குட்டி மூக்கில் தும்பிக்கையை பிக்ஸ் பண்ணிய மாதிரி பொருந்தாமல் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை ஒவ்வொரு ரசிகனின் மனசுக்குள்ளேயும் வைத்து பூட்டிவிட்டு போகிற வித்தை இந்த படத்தில் நடந்திருக்கிறது. அதிலும் கார்த்தியின் நடிப்பு, ‘நானே கொம்பன். என்னை அடக்க இன்னொரு கொம்பனா?’ என்று சரிக்கு சரி நின்று மல்லு கட்டியிருக்கிறது. “நாகார்ஜுனா- கார்த்தியில் யார் ஒசத்தி? யார் சுமார் ஒசத்தி?” என்று தராசில் கொட்டி நிறுத்து நிறுத்து பார்த்தாலும், “நிறுத்துய்யா உன் கம்பேரிசனை” என்பான் தோழாவில் தன்னை முழுசுமாக கரைத்த ரசிகன். இவர்களுக்கு முன் தமன்னா, அனுஷ்கா, ஸ்ரேயா எல்லாரும் நாட் அவுட் ஆகாமல் கிரவுண்டுக்குள் நின்றிருப்பதே அவரவர்கள் செய்த பாக்யம்.

விபத்தில் சிக்கி கழுத்துக்கு கீழே எவ்வித அசைவும் இல்லாத நாகார்ஜுனாவை கவனித்துக் கொள்ளும் ஒரு எடுபிடியாக பங்களாவுக்குள் நுழையும் கார்த்தி, அதே நாகார்ஜுனாவுக்கு எவ்வளவு முக்கியமான ஆளாகிறார் என்பதுதான் கதை. இரண்டு வரியில் சொன்னால் படு சுமாராக இருக்கும் இந்த கதையை, தன் திரைக்கதை யுக்தியால் கவிதை போல வடித்து, கனவு போல மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி. காற்றில் சிதறும் ஒரு சொட்டு கண்ணீருக்கும் கூட ஒரு காரணம் சொல்கிறார்கள்.

அம்மா, தங்கச்சி, தம்பி என்று சொந்தக்கதையை சொல்லி, சில நிமிஷங்கள் வெறுப்பேற்றும் கார்த்தி நாகார்ஜுனா வீட்டுக்குள் நுழைந்தவுடன் கதை வேகம் பிடித்துக் கொள்கிறது. அதற்கப்புறம் அடடா மழைடா… அட மழைடா என்று சிரிப்பையே தோரணம் கட்டுகிறார் அவர். அவ்வளவு பெரிய பணக்காரரான நாகார்ஜுனாவை அசால்ட்டாக டீல் பண்ணும் கார்த்தியின் ஸ்டைலுக்கு நாகார்ஜுனாவே அடிக்ட் ஆவதுதான் விசேஷம். கார்த்தியின் இன்னொசன்ஸ் தியேட்டரை மட்டுமல்ல, திரைக்குள்ளிருக்கும் நாகார்ஜுனாவையும் சேர்ந்தே சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, ‘நம்மளே பெயின்ட் பண்ணிட வேண்டியதுதான்’ என்று வெறிகொண்டு கிளம்பும் கார்த்தி, அந்த பெயின்ட் ரகசியத்தை பிரகாஷ்ராஜிடம் அவிழ்க்கிற காட்சியில் தியேட்டரே தெறிக்கிறது.

பெரிய பணக்காரரான நாகார்ஜுனா முடங்கிவிட்டார். பிரகாஷ்ராஜ் வேறு என்ட்ரி கொடுத்துவிட்டார். சொத்து, அபகரிப்பு, சவால், என்று கதை நகருவதற்கு ஏராளமான அபத்த வழிகள் இருந்தும், அதையெல்லாம் தவிர்த்திருக்கிறார் இயக்குனர் வம்சி. சபாஷ்! பிரகாஷ்ராஜ் கொஞ்சமே வந்தாலும், ஏமாந்துட்டமே என்பதையும், எக்கச்சக்க சமாளிப்புமாக பிரமாதப்படுத்துகிறார்.

முதல் பார்வையிலிருந்தே தமன்னாவை துரத்தக் கிளம்பும் கார்த்தியின் குறும்புகள் ஒரு புறம் ரசிக்க வைக்க, தமன்னா ‘விழுகிற’ அந்த செகன்ட்டுக்காக காத்திருக்கிறது மனசு. ரொம்ப பொயட்டிக்காகவே அந்த நிமிடத்தை உருவாக்கித் தருகிறார் வம்சி. தமன்னா இன்னும் எத்தனை வருஷத்துக்குதான் இப்படியே குல்பியில் போட்ட ரசகுல்லாவாகவே இருப்பாரோ? அள்ளுதே…ம்மா அழகு!

நாகார்ஜுனா ஒரு மெல்லிய புன்னகையில், ஒரு வெற்று பார்வையில், ஒரு கண்ணசைவில் எல்லாவற்றையும் பேசி விடுகிறார். ஒரு மனுஷன் உட்கார்ந்தபடியே படம் முழுக்க வருவது, அப்படியே வந்தாலும் வினாடி நேரம் கூட அலுப்பு தட்டாமல் ரசிகனை ஆட்கொள்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமேயில்லை. அவ்வளவு பெரிய ஸ்டார்… பிளாஷ்பேக்கில் ஒரு டூயட் கூட பாடியிருக்கலாம். ஆனால் ஒரு ஷாட்டில் அவர் நடந்து வருவதாக காட்டுகிறார்கள். அவ்வளவுதான். அதற்கே கிளாப்ஸ்ணா…

படத்தில் ஸ்ரேயா இருக்கிறார், அனுஷ்கா இருக்கிறார், ஆனால் அதோ… என்பதற்குள் பறந்துவிடுகிறார்கள். கெஸ்ட் ரோல்தான். அதிலேயும் ரொம்ப ஜஸ்ட் ரோல்!

வீடு, அதை விட்டால் ஈசிஆர் ரோடு, அதற்கப்புறம்? என்று யோசிக்கும்போது கதையை பிரான்ஸ்சுக்கு கொண்டு போகிறார் வம்சி. அவ்வளவு பெரிய அழகான நகரத்தை இலவசமாக சுற்றிக்காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அங்கும் படு பயங்கரமான ஒரு கார் சேசிங் வைத்து மிரள விட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்தின் லாவகங்களில் மின்னல் தெறிக்கிறது.

கோபிசுந்தரின் இசையில் பாடல்களை வைத்து திணிக்காமல், தேவைப்படுகிற இடத்தில் மட்டும் அளவாக வைத்திருக்கிறார்கள். ஜெயிலுக்குள் பாடும் அந்த முதல் பாடல் மட்டும், கமர்ஷியலுக்காக என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்களோ, என்னவோ?

இந்த படத்தின் ஆகப்பெரிய அற்புதங்களில் ஒன்று வசனம். ஆனந்த விகடன் புகழ் ராஜுமுருகனும், அதே நிறுவனத்தின் வார்ப்பான சி.முருகேஷ்பாபுவும் எழுதியிருக்கிறார்கள். ‘மனுஷன் போற இடத்துக்கெல்லாம் மனசும் வராது சீனு…’ , ‘அஞ்சு நிமிஷத்துல எல்லாமே வெறும் ஞாபகம் ஆகிடுச்சு’ – இப்படி வெகு இயல்பாகவும், அழுத்தமாகவும் கடந்து போகிற வசனங்களை தொகுத்து எடுத்தாலே ஒரு தத்துவ புத்தகம் ரெடியாகும் போலிருக்கே?

பென்ஸ் காரில் நெருங்கிய தோழனுடன் ஒரு லாங் டிரைவ்!

ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Mudhal Kadhal Song

https://www.youtube.com/watch?v=5oP9PJFUUls

Close