இப்பதான் கம்ப்யூட்டர், போட்டோஷாப்பெல்லாம்! அப்போது ஜெயராமன்தான்…

தமிழ் திரைப்படவுலகில் மறக்க முடியாத ஒரு பெயர் டைட்டில் ஜெயராமன். சுமார் 1000 திரைப்படங்களுக்கு டைட்டிலில் இடம் பெறும் நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்களை எழுதியவர் இவர். ஏவி.எம்.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த சகலகலா வல்லவன், பாயும் புலி, முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, சம்சாரம் அது மின்சாரம், மகேந்திரன் இயக்கிய உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, பாலுமகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை, கே.பாலசந்தரின் புன்னகை, எதிர் நீச்சல், இரு கோடுகள், நூற்றுக்கு நூறு, நிழல் நிஜமாகிறது, அபூர்வ ராகங்கள், அச்சமில்லை அச்சமில்லை, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, புன்னகை மன்னன், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ போன்ற படங்களுக்கெல்லாம் டைட்டில் எழுதியவர் இவர்தான்.

அவர் அந்த காலத்தில் எழுதிய டைட்டில்களைத்தான் இப்போது அபூர்வராகங்கள், புன்னகை மன்னன், நூற்றுக்கு நூறு என்ற பெயர்களை வைத்து கம்ப்யூட்டரில் ‘ஃபாண்ட்’களாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கம்ப்யூட்டரோ, நவீன தொழில் நுட்ப வசதிகளோ இல்லாத காலத்தில் தனது கையில் தூரிகையை மட்டும் பயன்படுத்தி 1000 படங்களுக்கு டைட்டில் எழுதி சாதனை புரிந்த டைட்டில் ஜெயராமனை சமீபத்தில் நேரில் தன் ‘லேகா புரொடக்‌ஷன்ஸ்’ அலுவலகத்திற்கு வரவழைத்து பொன்னாடை போர்த்தி, கவுரவித்தார் விளம்பரப்பட இயக்குநரும், ‘லேகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனருமான லேகா ரத்னகுமார்.
லேகா ரத்னகுமாரின் இந்த நல்ல செயலைப் பார்த்து மனம் நெகிழ்ந்து விட்டார் டைட்டில் ஜெயராமன்.

‘இதயம் நல்லெண்ணெய்’ பாக்கெட்களிலும், புட்டிகளிலும் இருக்கும் இதயம் என்ற பெயரை, தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் 30 வருடங்களுக்கு முன்னால் முதன்முறையாக வடிவமைத்தவரே இந்த டைட்டில் ஜெயராமன்தான். அதை ஞாபகத்தில் வைத்துத்தான் லேகா ரத்னகுமார் அவரை, நேரில் வரவழைத்து சந்தோஷத்துடன் பெருமைப்படுத்தினார்.

‘1986ஆம் வருடம் லேகா ரத்னகுமார் என்னை நேரில் வந்து சந்தித்து ‘இதயம் நல்லெண்ணெய்’ என்ற பெயரை எழுதித் தரச் சொன்னார். நான் இதயம் என்ற பெயரை இரண்டு வகையான வடிவங்களில் எழுதினேன். அதில் ஒன்றை அவர் தேர்வு செய்தார். இரண்டாவது முறை அதை வாங்குவதற்காக அவர் வந்தபோது, லேகா ரத்னகுமாருடன் ‘இதயம்’ நிறுவனத்தின் தலைவர் திரு.முத்து அவர்களும் வந்திருந்தார். வருடங்கள் கடந்தோடி விட்டன. ‘இத்தனை வருடங்களுக்குப் பிறகு, என்னை ஞாபகத்தில் வைத்து கவுரவித்த திரு.லேகா ரத்னகுமார் அவர்களை நான் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்’ என்றார் டைட்டில் ஜெயராமன் கண்களில் கண்ணீர் கசிய. அவருடைய தற்போதைய வயது 76.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 1000 திரைப்படங்களுக்கு மேல் டைட்டில் எழுதியிருந்தாலும் டைட்டில் ஜெயராமன் பெயர் எழுதிய ஒரே விளம்பரமே ‘இதயம் நல்லெண்ணெய்’ மட்டும்தானாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் அவர் எழுதிய ‘இதயம்’ என்ற பெயர்தான் ஃபாண்ட் கம்பெனிகளால் இப்போது கம்ப்யூட்டர் உதவியுடன் வடிவமைக்கப்பபட்டு பயன்பாட்டில் உள்ளது.

லேகா ரத்னகுமார் இயக்கிய ‘இருட்டில் ஒரு வானம்பாடி’ தொலைக்காட்சி தொடருக்கு டைட்டில் வடிவமைத்தவரும் இவர்தான்.

மேலேயிருக்கும் படத்தில், லேகா ரத்னகுமார், டைட்டில் ஜெயராமன் ஆகியோருடன் சித்ரலேகா, சுமித்ரா.

1 Comment
  1. Anantharaman says

    Thanks for sharing sir

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘புதுசா தினுசா மாம்பழம் பாரு அதைப் பறிச்சி கசக்கி ஜூஸைப் போடு’

தமிழ்ப்பட உலகில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் வில்லன் நடிகர் கே.ஜி.ஆர். மேட்டூருக்கு அருகிலிருக்கும் பூமனூர் இவரின் சொந்த ஊர். இவரின் உண்மையான பெயர் கோவிந்தன். தந்தை பெயர், மகன்...

Close