அன்று கார்த்திக்! இன்று டி.ஆர்! செலக்ட் பண்ணி அடிக்கும் கே.வி.ஆனந்த்!!
அனேகன் படத்தில் நடிப்பதற்கு ஒரு வில்லன் வேண்டும். ஆனால் அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய வில்லனாக இருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த கே.வி.ஆனந்த், ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்துதான் நவரச நாயகன் கார்த்திக்கிடம் போனார். “கார்த்தி அந்த கேரக்டர்ல நடிச்சா எப்படியிருக்கும்?” என்று தனது சகாக்களிடம் கேட்டபோது, முள்ளை பரப்பி வச்சு, அதில் முழங்கால் போட்டு கும்பிடணுமா? என்று பேரதிர்ச்சி அடைந்தார்கள் அவர்கள். சிலர் நேரடியாகவே, “அதெல்லாம் ரொம்ப ரிஸ்க்கான விஷயம். அவரை மேய்க்கறது கஷ்டம்” என்றெல்லாம் சொல்லி குழப்பினார்கள். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சுகிறவரா கே.வி.ஆனந்த்?
நேரடியாக கார்த்திக்கை சந்தித்து இந்த கதையை சொல்லிவிட்டு, “எல்லாரும் உங்களை பற்றி இப்படி சொல்றாங்க” என்றும் சொல்லிவிட்டும் வந்தார். அதற்கப்புறம் நடந்ததுதான் மேஜிக். எல்லாரும் சொல்றாங்க என்று அவர் சொல்லிவிட்டு வந்தாரில்லையா? அப்படி சொன்னவர்கள் எல்லாரையும் அசர வைத்தார் கார்த்திக். நினைத்தபடி படத்தை முடித்தார் கே.வி.ஆனந்த். சினிமாவை ஷாப்பிங் மாலுக்கு போய் விண்டோ ஷாப்பிங் பண்ணுவது போல டீல் பண்ணும் கார்த்திக்கையே சமாளித்த கே.விக்கு, டி.ராஜேந்தரை நடிக்க வைப்பதில் ஒரு கஷ்டமும் வரப்போதில்லை.
அவருக்கு சினிமா ஷாப்பிங் மால் என்றால், டி.ராஜேந்தருக்கு அது கோவில். ஏழு மணிக்கு ஷூட்டிங் என்றால், ஆறு மணிக்கே அங்கு நின்று பழக்கப்பட்டவர். மிகுந்த சந்தோஷத்தோடு ஒரு புது படத்தில் இணைகிறார்கள் கே.வி.ஆனந்த், விஜய்சேதுபதி, டிஆர் மூவரும்!
ஷுட்டிங் ஸ்பாட்டில் டிஆர் காட்டப்போகும் அந்த தனி சினிமாவுக்கு இப்போதே தரை டிக்கெட்டெல்லாம் ஃபுல் ஆகியிருக்கும். அதிலென்ன சந்தேகம்?