என்னது சிம்புவுக்கு அம்மாவா நடிக்கணுமா? அட்வான்சை திருப்பி தந்த த்ரிஷா!
அன்பே ஆருயிரே படத்தில் நீங்க எனக்கு அம்மாவா நடிக்கணும் என்று எஸ்.ஜே.சூர்யா, அந்த காலத்து அழகி தேவயானியிடம் கேட்டபோது, அவர் தன் மனம் கவர்ந்த மணாளன் ராஜகுமாரனிடம் சொல்லி உதைப்பேன் என்று மிரட்டி கூட இருக்கலாம். ஆனால் “கதையை சொல்லுங்க. கன்வின்ஸ் ஆனா பார்க்கலாம்” என்றார். அதற்கப்புறம் அவரே அந்த கேரக்டரில் நடித்தார் என்பது சோழர் கால கல்வெட்டு சொல்லும் கதை.
அப்படியே காலம் திரும்புகிறது. ஆனால் தேவயானி அளவுக்கு பொறுமையில்லை போலிருக்கிறது இந்த த்ரிஷாவிடம். காச் மூச் என்று கவலைப்பட்டதுடன், நீங்க கொடுத்த அட்வான்ஸ் பத்து லட்சத்தை எப்ப வந்து வாங்கப் போறீங்க என்று மெசேஜ் அனுப்பி விட்டாராம். நடுவில் நடந்தது என்ன?
மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார் அல்லவா? அதில் தனக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்யச் சொன்னாராம் சிம்பு. என்ன கண்றாவியோ தெரியவில்லை. பொதுவாக கதை சொல்ல வருகிறவர்களிடம் கதை மட்டும் கேட்டு பழக்கப்பட்ட த்ரிஷா, முதல்ல பத்து லட்சம் அட்வான்ஸ் கொடுங்க. அப்புறம் கதை கேட்கிறேன் என்று படத்தில் கமிட் ஆகிக் கொண்டாராம். கதை சொல்லப் போனார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆற அமர கதையை கேட்ட த்ரிஷாவுக்கு ஆயுள் முழுக்க ஷாக் வருகிற மாதிரி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் ஆதிக். இந்த படத்தின் நீங்க சிம்புவுக்கு அம்மாவாகவும் நடிக்கணும். அவ்வளவுதான்…
கடுப்பான த்ரிஷா, மைக்கேல் ராயப்பனுக்கு போன் செய்து உங்க அட்வான்சை திருப்பி தர்றேன். வாங்கிட்டு கிளம்புங்க என்று கூறிவிட்டாராம். இதனால் சிம்புவுக்கும் ஷாக். ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து, ஏன்யா… உன்னால ஒரு ஹீரோயின்ட்ட கதை சொல்லி கன்வின்ஸ் பண்ண முடியல. நீயெல்லாம் என்னை வச்சு எப்படிதான் இந்த படத்தை முடிக்கப் போறீயோ என்றாராம். எந்த நேரத்திலும் டைரக்டர் மாற்றப்படலாம் என்பதுதான் இப்போதைய வானிலை அறிக்கை!