நா.முத்துக்குமாருக்காக கண்ணீர் விட்டு அழுத வைரமுத்து!

நா.முத்துக்குமாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்து, கதறி அழுதது அங்கு வந்திருந்த எல்லாருடைய நெஞ்சையும் உலுக்கியது. திரைப்பட பாடலாசிரியர்களில், வைரமுத்துவின் பாடல்களுக்கு இணையாக எழுதியவர் நா.முத்துக்குமார். ஒருவகையில் அவரது தொழில் போட்டியாளர் என்றால், முழு தகுதி நா.முத்துக்குமாருக்குதான் இருந்தது. அவரது மறைவு செய்தி கேட்டு ஓடோடி வந்த வைரமுத்து, அந்த இடத்தில் கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியான விஷயம்தான்.

அவரது அறிக்கை இது-

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.

‘உன் சொந்த ஊர் எது தம்பி’ என்று ஒருமுறை கேட்டேன். “காஞ்சி அண்ணா” என்று சொன்னார். “அண்ணாவே காஞ்சிதான்” என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். “சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு” என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.

நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
wagah movie review

https://www.youtube.com/watch?v=ODkfwwE7hIw  

Close