எட்டு வருஷ போராட்டத்தையே என்னால தாங்க முடியல… விஜய் சேதுபதி ஓப்பன் டாக்!
இருபத்தைந்து வருட போராட்டம்! எப்படியோ நேமிசந்த் ஜபக், விஜய் சேதுபதி புண்ணியத்தால் இயக்குனராகிவிட்டார் ஜெய் கிருஷ்ணா. இவர் இயக்குகிற ‘வன்மம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசிய விதம், கல்லும் கரையும் டைப்!
‘ரொம்ப நெர்வசா இருக்கேன். இந்த படத்தில் வொர்க் பண்ணிய அத்தனை டெக்னீஷியன்களும், ஹீரோக்களும் ஹீரோயினும் துணை நடிகர் நடிகைகளும் என்னோட இத்தனை வருட போராட்டத்தை மனசுல வச்சுகிட்டு அவ்வளவு கோ- ஆப்ரேட் பண்ணினாங்க. அவங்களுக்கெல்லாம் என்னோட நன்றி’ என்றார் ஜெய் கிருஷ்ணா.
படத்தின் மியூசிக் டைரக்டர் தமன் பேசியது பொசுக்கென சிரிக்க வைத்தாலும், அதிலிருக்கிற உண்மை மனசை நெகிழ வைத்தது.
‘நான் என்னோட வொர்க் பண்ணிய டைரக்டர்களையெல்லாம் மச்சான் மாமான்னு கூப்பிட்டே பழகுனவன். திடீர்னு பார்த்தால், அப்பா வயசுக்கு ஒருத்தர் வந்து நிக்கிறார். இவரோட எப்படி வொர்க் பண்ண போறனோன்னு பயந்துட்டேன். ஆனால் பார்க்கதான் அப்படி. இந்த படம் இந்த கால ட்ரென்டுக்கு ஏற்ற மாதிரி இருக்கு’ என்றார்.
‘எனக்கு ஜெய் கிருஷ்ணாவை முன்னாடியே தெரியும். ஒரு டி.வி.எஸ் 50 ல் வருவார். டீக்கடைகளில் மீட் பண்ணியிருக்கோம். நானும் அப்போ வாய்ப்பு தேடிகிட்டு இருந்த காலம். இந்த கதையை அவர் நாலு வருஷத்துக்கு முன்னாடியே எங்கிட்ட சொல்லியிருந்தார். சரியான சந்தர்ப்பம் வரும்போது பண்ணலாம்னு நானும் சொல்லியிருந்தேன். திடீர்னு ஜபக் சார் கூப்பிட்டு இவரோட கதையை கேட்க சொன்னார். கேட்டுட்டு நான் ‘உடனே நடிக்கிறேன்’னு சொல்லிட்டேன். இருபத்தைந்து வருஷம் எப்படிதான் தாக்கு பிடிச்சாரோ? நானெல்லாம் எட்டு வருஷத்தை தள்றதுக்குள்ளே போதும் போதும் ஆயிருச்சு. பேசாம சினிமாவை விட்டுட்டு திரும்பவும் ஊருக்கு போயிடலாமான்னு கூட நெனைச்சுருக்கேன். ஜெய் கிருஷ்ணாவோட இத்தனை வருஷ அனுபவம்தான் ஷுட்டிங் ஸ்பாட்ல அவ்வளவு கை கொடுத்துச்சு. ஏதாவது மாத்தணும்னு கேட்டால், ‘பண்ணிடலாம் சார்’னு சொல்லிட்டு, ரொம்ப பர்பெக்டா மாத்திக் கொடுப்பார். அவர் இத்தனை வருஷ காலம் கழிச்சு படம் இயக்கியிருக்கிறார் என்பது ஒன்றும் தவறான விஷயம் இல்ல. இப்பவும் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி படம் அவ்வளவு நல்லா வந்திருக்கு’ என்றார் விஜய் சேதுபதி.
துறுதுறுன்னு இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பயங்கரமாக அலட்டிக் கொள்ளும் ‘யாமிருக்க பயமே’ கிருஷ்ணா, இப்படத்தில் இரண்டாவது ஹீரோ! ‘விஜய் சேதுபதி பெரிய ஹீரோவாச்சே. அவரோட நடிக்கும் போது டைரக்டர் என் போர்ஷன்ல கையை வைச்சுருவாரோன்னு பயந்தேன். ஆனால் எங்க ரெண்டு பேருக்குமே ஈக்குவலான அந்தஸ்து கொடுத்திருக்கிறார்’ என்றார் வெளிப்படையாக.
சுனைனாதான் இப்படத்தின் ஹீரோயின். நாகர் கோவில் வெயிலில் போட்டு வறுத்தெடுத்திருக்கிறார்கள் இவரை. ஒற்றை சொல், ஒரு நட்பை எப்படியெல்லாம் கூறு போடுகிறது என்பதுதான் கதையாம். வன்மம்… ஜெயகிருஷ்ணாவின் 25 வருட கனவை இன்பம் ஆக்கட்டும்…!