வெள்ளைப் பூக்கள் / விமர்சனம்

“எப்படியிருந்த விவேக் இப்படியாகிட்டாரே…!” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்!

க்ரைம் த்ரில்லர் வகை படங்ளை சுமக்கவென்றே ஸோல்டரை பில்டப் பண்ணி வைத்திருக்கும் ஜிம் பாடி ஹீரோக்களை நாசுக்காக தவிர்த்துவிட்டு, விவேக்கை தேடி வந்து கொத்தியிருக்கிற டைரக்டர் விவேக் இளங்கோவனுக்குதான் முதல் துணிச்சல். அதற்கப்புறம்தான் விவேக்!

‘சென்னை’ என்று எழுத்துக் கூட்டி வாசிப்பதற்குள் கதை ரன்வேயில் ஏறி அமெரிக்காவுக்கு பறந்துவிடுகிறது. தமிழக போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான விவேக் தன் மகனை பார்க்க கிளம்புகிறார். போன இடத்தில்தான் பரபரப்பு. பக்கத்து வீட்டு பெண்மணி கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். அடுத்தடுத்து நடக்கும் மேலும் சில கடத்தல்களுக்கு அதிர்ச்சியாகிற விவேக் ஒவ்வொன்றிலும் மூக்கை நுழைக்கிறார். ஒரு கட்டத்தில் தன் சொந்த மகனையே தேட வேண்டிய துர்பாக்கியம். அவன் ஏன் கடத்தப்பட்டான்? கடத்தியது யார்? ஏன்? என்பதுதான் விவேக் துப்பறிந்து கொப்பளிக்கும் க்ளைமாக்ஸ்!

பளிச்சென்று துடைத்து வைத்தது போல அழகான நாடு. ஒரு நிமிஷம் கூட கண் சிமிட்டாமல் பார்த்து ரசிங்க மக்களே… என்று வழித்து வாரிக் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவு என்று சட்டென்று நம்மை படத்திற்குள் இழுத்துக் கொள்கிறார்கள். அதற்கப்புறம் ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல் படிக்கிற எபெக்ட்டை அசால்டாக தருகிறார் டைரக்டர் விவேக் இளங்கோவன். துணை நின்ற இப்படக்குழுவினருக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.

தன்னிடம் சொல்லாமல் ஒரு வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக் கொண்ட மகனை மன்னிக்கிற விவேக், மருமகளை பார்க்கும்போது மட்டும் மாட்டுக் கோமியத்தை குடித்தது போல முகத்தை வைத்துக் கொள்வது இயல்புதான். அதற்கப்புறம் அதே மருமகளுக்காக அவர் சியாட்டில் நகரத்தின் சந்து பொந்தெல்லாம் அலைவதும், ஆறுதல் சொல்வதும் நல்ல மாமனாருக்கு அழகு. தன் வழக்கமான நக்கல் நையாண்டிக்கெல்லாம் இடம் கொடுக்காமல் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார் விவேக். நிஜமாகவே வித்தியாசமான ரோல்தான். அதே நேரத்தில் அவ்வளவு பயங்கரமான கிரிமினல்களை ஏதோ காய்கறி வண்டியை பின் தொடர்வது போல ஃபாலோ பண்ணுவதுதான் சிரிப்போ சிரிப்பு.

‘இந்த கொலையை பண்ணிய நபர் இத்தனை வயசு ஆளாதான் இருக்கணும். ஏன்னா ஒரு ஆளால இழுக்க முடியாம அங்கங்க நிறுத்தி இழுத்துட்டு போயிருக்காங்க பாரு…’ என்று மூளையை ஷார்ப்பாக்கி பேசுகிற விவேக், ஆச்சர்யப்பட வைக்கிறார். அப்புறம் தானே ஒரு கற்பனை கோர்ட்டை உருவாக்கி, அங்கே அவர் நடத்தும் விசாரணையெல்லாம் அல்டிமேட் காட்சிகள்!

அதே ஊரில் விவேக் போல வந்து சிக்கிக் கொண்ட இன்னொரு ஜீவன், சார்லி. தேவைப்படுகிற நேரத்தில் மட்டும் அளவாக சிரிக்க வைக்கிறார். இவரது மகளாக பூஜா தேவ்ரியா. இவருக்கு ஒரு ஃபைட் சீனே வைத்திருக்கலாம். ஆள் அப்படியொரு சிக்!

விவேக்கின் மகனாக நடித்திருக்கும் தேவ், ஒரு முழு படத்தின் ஹீரோவாக தாங்குகிற அளவுக்கு ஸ்மார்ட்! இவருக்கான விசிட்டிங் கார்ட் எந்த கம்பெனியில் அடித்து வைக்கப்பட்டிருக்கிறதோ?

அமெரிக்க மருமகளான அந்த பைஜ் ஹென்டர்சன் வணக்கம் போடும்போது தேவையில்லாமல் மோடியெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறார். இருக்கட்டும்மா…

குற்றம்… நடந்தது என்ன? என்பதை நோக்கிதான் கதை ரன்னிங் ஆகிறது. ரசிகர்கள் யூகிக்கக் கூடாது என்பதற்காக ஒரு இணைக்கதையை நடக்க விட்டிருக்கிறார் இயக்குனர். புத்திசாலித்தனமான மூவ்!

ஒரே ஒரு பாடல் மட்டுமே! போதும்னு சொல்றதா? இன்னும் வேணும்னு சொல்றதா? சின்ன கன்பியூஸ்! மற்றபடி பின்னணி இசையில் பிரமாதப்படுத்துகிறார் இசையமைப்பாளர் ராம்கோபால்!

ஒருவழியாக யார் குற்றவாளி என்று விவேக் கண்டு பிடிக்கையில் ஒரு சின்ன பெருமூச்சு. ஆனால், காட்சிகளாக வர வேண்டிய எல்லாவற்றையும் போயம் போல ஒப்பிக்கிறார் விவேக். அதன் காரணமாகவும் வருகிறது அதே பெருமூச்சு!

திரைகடலோடு திரவியம் தேடி, அந்த திரவியத்தை கொட்டி திரைப்படம் எடுத்திருக்கிறார்கள். நம்பிக்கையோடு வந்த இந்த சியாட்டில் தமிழர்களை திராட்டில் விட்றாதீங்கப்பா…!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
மெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்

Close