விஜய்யின் நீலாங்கரை வீடு முற்றுகை? ஆவேசத்துடன் கிளம்புகிறது மாணவர் அமைப்பு
அரசியல் தலைவர்கள் கூட அவ்வப்போது விலை போகலாம். ஆனால் மாணவர்கள்? அவர்கள் வில்லை எடுத்தால், அம்பு பாய்வது நிச்சயம்! தமிழீழ ஆதரவு மாணவர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் மாணவர்கள். அந்த கூட்டமைப்புதான் சமீபகால சில முக்கியமான விவாதங்களை முன் வைக்கிறது. கேள்வி கேட்கிறது. போராடுகிறது. அவர்களின் சமீபத்திய கேள்வி, கத்தியை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய விடலாமா என்பதுதான்.
கத்தியும், புலிப்பார்வையும் தமிழனால் தடை செய்யப்பட வேண்டிய படங்கள் என்று முழங்க ஆரம்பித்திருக்கும் இவர்கள், இவ்விரு படங்களும் போராட்டத்தை மீறி திரையிடப்பட்டால், அந்த படங்கள் ஓடும் தியேட்டர்களை கிழிப்போம் என்றெல்லாம் ஆவேசப்பட்டு வருவதை அவ்வளவு அலட்சியமாக பார்க்கவில்லை அரசும், சம்பந்தப்பட்ட படக்குழுவினரும். இந்த நிலையில்தான் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீலாங்கரையிலிருக்கும் விஜய் வீட்டை அவர்கள் முற்றுகையிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதற்கான முறையான அனுமதிக்காக அவர்கள் காவல் துறையை நாடிய போதிலும், அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அனுமதியில்லாமல் இந்த போராட்டத்தை அவர்கள் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் போராட்டம் என்று அறிவித்தால், தாங்கள் முன்னாலேயே கைது செய்யப்படுவோம் என்று நினைத்திருக்கலாம். அதனால் போராட்ட நேரத்தை மிக மிக ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் அவர்கள்.
பிரஸ்மீட் வைப்பார்கள், உண்ணாவிரதம் இருப்பார்கள், முழங்குவார்கள் என்கிற அளவுக்குதான் இவர்களின் போராட்டத்தை எடை போட்டது கத்தி படக்குழு. ஆனால் விஜய் வீடு முற்றுகை என்ற இவர்களின் புதிய வியூகம், தலையில் தேளை விட்டுக்கொண்ட அளவுக்கு நெருக்கடிதான்… சந்தேகமேயில்லை!