ஓபிஎஸ் ஈபிஎஸ்! நேரடி எதிர்ப்பில் இறங்கிய விஜய்!
கட்டாந்தரையோ? தொட்டாசிணுங்கியோ? முதலுக்கே மோசம் வைக்கிற அளவுக்கு டிஸ்ட்ரப் செய்தால், எரிச்சல் வரத்தானே செய்யும்? சும்மாயிருந்த விஜய்யையும் அப்படிதான் அரசியலை நோக்கி உசுப்பிவிட்டன கடந்த கால கழக ஆட்சிகள். அதிமுகவிலும் சரி, திமுகவிலும் சரி. விஜய் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை கோபத்தில் கொடநாட்டுக்கே போய், அப்போதைய முதல் ஜெ. வை சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார் அவர்.
காலம் இப்போது வாயை அகல திறக்க வைத்துவிட்டது. ஜெ.வின் மரணத்திற்கு பின் புழுவுக்கும் பூச்சிக்கும் கூட புடைத்துக் கொண்டு கிளம்புகிறது வீரம். ஆனால் அப்போதிலிருந்தே அரசியல் கருத்துக்களை அவ்வப்போது விதைத்து வந்த விஜய் சும்மாயிருப்பாரா?
இவரும் முருகதாசும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் படத்தில்தான் தன் அரசியல் அதிரடியை இன்னும் வேகமாக துவங்கியிருக்கிறாராம் அவர். எப்படி? இன்றைய தமிழக முதல்வர், துணை முதல்வர் பற்றிய கதைதான் அது என்றும், அவர்களை விஜய் எப்படி பந்தாடுகிறார் என்றும் போகிறதாம் கதை. ஓ.பி.எஸ். ஈபிஎஸ் கேரக்டரில் முறையே பழ கருப்பையாவும் ராதாரவியும் நடிக்கிறார்கள்.
ஓபி.எஸ் ஈபிஎஸ் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தார்கள் அல்லவா? அது குறித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாக தகவல். இந்தப்படம் திரைக்கு வரும்போது இதே அரசு தொடர்ந்தால் நிச்சயம் முட்டுக்கட்டை விழும்.
ஆனால் விஜய்க்கு ரிலீஸ் நேரத்தில் வரும் இதுபோன்ற தொந்தரவுகள் புதுசல்லவே?
ஆங்… ஒரு விஷயம். இந்த பொல்லாத கதையை படமாக்கித் தருவதே சன் பிக்சர்ஸ்தான். ஒரு காலத்தில் இவர்களாலும் பந்தாடப்பட்ட விஜய், பழசையெல்லாம் மறந்துட்டாரோ?