செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு! மனதிலிருந்து பேசிய விஜய் சேதுபதி!

தன்னை சுற்றி வேலி போட்டு வைத்திருக்கும் போலி நடிகர்கள் மத்தியில், மனதில் பட்டதை படக்கென்று பேசிவிடும் விஜய் சேதுபதி கிரேட்! ‘இவ்வளவு பெரிய பாராட்டுகளுக்குப் பின், இதுக்கெல்லாம் காரணம் நான்தான்னு சொல்றது பெரிய போலித்தனம். அது எனக்கு வராது’ என்று கூறி எல்லாரையும் ஒரு கணம் அசர விட்டார் வி.சே. அது ஒரு பரவசமான தருணம்….

அண்மையில் வெளிவந்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதிதான். படம் வெளியான சில மணி நேரத்தில் அப்படம் குறித்த கருத்துகளை தத்தமது வலை தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரிமாறிக் கொண்டார்கள் நிருபர்கள். பீடியை அணைக்காமல் வைக்கோல் போரில் வீசினால் என்னாகும்? பற்றிக் கொண்டது நாடு முழுக்க. ஆரம்பத்தில் இப்படத்திற்கு பெரிதாக தியேட்டர் ஒதுக்காத வியாபாரிகள், இந்த வாரத்திலிருந்து அதிக தியேட்டர்களை ஒதுக்கி பரிகாரம் செய்து கொண்டார்கள். இதையடுத்து தங்கள் நன்றியை தெரிவிக்க மீடியாவை கூட்டியது மே.தொ.ம படக்குழு. அங்குதான் இப்படி பரவசமானார் விஜய் சேதுபதி.

“இப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி என்னோட நண்பர். நான் நடிக்க வந்த புதிதில் அவர்தான் அசோசியேட் இயக்குனர். என்னை மனுஷனா மதிச்சி நடத்தியவர். அவர் யாரையும் குறை சொல்லி பேசி நான் கேட்டதேயில்ல. அப்படியொரு நல்ல மனுஷன். அந்த நன்றிக்கடனுக்காகதான் இந்தப்படம் தயாரிச்சேன். படத்தை அவர் எனக்கு காண்பிச்ச போது, எனக்கு புடிக்கல. படத்தின் மீது நம்பிக்கையும் இல்ல. ரிலீஸ் செய்ய முயற்சி செஞ்சோம். ஒருவரும் வாங்கவும் முன் வரல. பிறகு தாய் சரவணன் மூலமா படத்தை வெளியிட்டோம்.”

“அதற்கப்புறம் நீங்கள்லாம் எழுதிய விமர்சனங்களும், இந்த படத்தை நீங்கள்லாம் கொண்டாடியதையும் கேட்ட பிறகுதான் எனக்குன்னு ஒரு விமர்சன பார்வை வந்திச்சு. நாமதான் தப்பா முடிவு பண்ணிட்டோமான்னு நினைச்சேன். செருப்பால் அடிச்ச மாதிரி இருந்திச்சு. இந்தப்படத்தை பற்றிய எல்லா பெருமைகளும் லெனின் பாரதிக்கு மட்டும்தான். அதில் நான் பங்கு போட்டுக்க விரும்பல. அது சரியும் இல்ல” என்றார் வெளிப்படையாக!

விஜய் சேதுபதியின் இந்த வெளிப்படையான பேச்சு, அவர் மீதிருக்கும் மரியாதையை மேலும் உயர்த்துவதாக இருந்தது. இப்படியே இருங்க விஜய் சேதுபதி!

பின் குறிப்பு- ஒரு பைசா கூட வாங்காமல் இந்த படத்தை தாய் சரவணன் என்ற விநியோகஸ்தரிடம் கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி, இதன் மூலம் வரும் தொகையை இப்படத்தின் விளம்பரங்களுக்காக செலவு செய்து கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறாராம். அவ்வளவு ஒசரமான மேற்கு தொடர்ச்சி மலை-ன்னா அது விஜய் சேதுபதிதானோ?

1 Comment
  1. Balaji says

    Vijay Sethupathi is a great Man !

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
14 வருடங்கள் கழித்து மீண்டும் ஜோதிகா! சிம்பு ரசிகர்கள் பரவசம்!

Close