சம்முவப்பாண்டி… சந்தோசம்யா!
ஒரு ஹீரோவை ‘லாஞ்ச்’ பண்ணுவதென்பதே ஒரு கலை. அதுவும் இன்றைய விளம்பர யுகத்தில் எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டும்? ஆனால் சினிமாவில் சிற்றரசனாக இருந்த விஜயகாந்துக்கும் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் அப்படியொரு கொடுப்பினை இல்லாமல் போனது ஏன்? இந்தக் கேள்வி அவரது முதல் படமான ‘சகாப்தம்’ ரிலீசின் போது பலருக்கும் இருந்தது.
தமிழ்சினிமாவின் வாழ்நாள் மொக்கைப்படம் என்கிற அந்தஸ்தை தக்க வைத்த படமாக அமைந்துவிட்டது சகாப்தம்.
நல்லவேளை… அவரது இரண்டாவது படத்தில் முதல் படத்தின் சந்தேகத்தையும், வருத்தத்தையும் போக்கினார் இயக்குனர் பி.ஜி.முத்தையா.
மதுரை வீரன் படத்தின் முதல் லுக், பாடல்கள், ட்ரெய்லர், வசனங்கள் என்று திரும்பிய இடமெல்லாம் இது வெற்றிப்படம் என்கிற அறிகுறி தென்பட்டுக் கொண்டேயிருந்தது. வில்லேஜ் படங்களுக்கு பாடல்கள்தான் உயிரே. அதை இந்தப்படத்தில் உணர்ந்து அமைத்திருந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.
மகனின் பர்பார்மென்சை நேரில் கண்டு களிக்க தம்பதி சமேதராக வந்திருந்தார்கள் விஜயகாந்தும் பிரேமலதாவும். சினிமாக்காரர்கள் மட்டுமே புழங்கும் பிரசாத் லேப் தியேட்டர், கட்சிக்காரர்களின் கரை வேஷ்டிகளாலும் நிறைந்திருந்தது. நல்லவேளை… எல்லாருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியிருந்தார் சண்முகப்பாண்டியன்.
‘நான்தான் இந்தக்கதையை முதல்ல கேட்டேன். அப்புறம்தான் கேப்டன் கேட்கணும்னு ஆசைப்பட்டார். படத்தில் ஜல்லிக்கட்டுக்கு முக்கிய இடம் இருந்திச்சு. அதற்காகவே கேப்டன் சந்தோஷப்பட்டார். நான் பேசுகிற முதல் சினிமா மேடையும் இதுதான் என்றார் தேமுதிக தொண்டர்களின் அண்ணி பிரேமலதா.
மகன் கண்ணெதிரே முன்னேறுகிற மொமென்ட். அதை கான்பிடன்ட்டாக காண முடிந்தது விஜயகாந்தின் கண்களில்.
சம்முவப்பாண்டி…சந்தோசம்யா!