நக்கீரன் கோபால் இல்லாத வீரப்பன் படம்! ராம்கோபால் வர்மா எடுப்பது நிஜமா கற்பனையா?
ஒரு காட்டு அரக்கனை, நாட்டு சுரைக்காய் போல சந்தையில் பரப்பி வாரா வாரம் மக்கள் மனதில் ஏற்றியவர் நக்கீரன் கோபால் என்றால், அதை அந்த வீரப்பனின் ஆவியே கூட மறுக்காது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது அரசு தூதுவராக காட்டுக்குள் சென்று, அவரை காப்பாற்றியவரும் நக்கீரன் கோபால்தான். நிற்க…
இந்திய சினிமா இட்டு கட்டியும், கொட்டி நிரப்பியும் விளையாடிய வீரப்பன் கதையை பிரபல இந்தி, தெலுங்குப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் கையில் எடுத்திருக்கிறார். கன்னடத்தில் கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் வெளியான இந்த படம் தமிழில் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் வீரப்பனாக நடித்திருப்பவரை தவிர மற்ற அனைவரும் வேறு வேறு நடிகர்கள். இதில்தான் நக்கீரன் கோபால் போர்ஷனே இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராம்கோபால்வர்மா. இவர் மட்டுமல்ல, படத்தில் வீரப்பன் சம்பந்தப்பட்ட பல ‘இல்லை’கள்! இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், பளிச் பளிச்சென கேள்விகள் கேட்பப்பட, பதறாமல் பதில் சொன்னார் அவர்.
வீரப்பனை கொல்ல அதிரடிப்படை திட்டம் வகுத்ததையும், அந்த திட்டத்தில் பெற்ற வெற்றியையும்தான் நான் திரைக்கதையா வடிவமைச்சிருக்கேன். அதனால் நக்கீரன் கோபால் போர்ஷன் படத்தில் வராது என்றார் உறுதியாக. இந்த படத்தில் போலீஸ் ஹீரோவா, அல்லது வீரப்பன் ஹீரோவா என்ற இன்னொரு கேள்விக்கு, உண்மைதான் ஹீரோ என்றார் ஆர்ஜிபி. அடிக்கடி ட்விட்டரில் யாரையாவது விஐபிகளை விமர்சித்து கருத்தை போட்டு, கண்டவர்களிடமும் பாட்டு வாங்கும் வழக்கமுடையவரல்லவா இவர்? அது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
நீங்கள் அமிதாப், ரஜினி, கமல்னு நிறைய பேரை படு காட்டமாக விமர்சனம் செய்றீங்க? இது பப்ளிசிடிக்கா என்று கேட்டதற்கு, நான் ஒரு சினிமா படைப்பாளி, கண்டிப்பாக என் மீது அனைவரின் பார்வையும் விழ வேண்டும் என்ற நோக்கம் இருக்கத்தான் செய்யும். அதே சமயம் சமூக வலைதளங்கள் நம் கருத்துகளை , எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள, அதில் சில நேரங்களில் மக்களும் பங்கேற்கும் போது அது பெரிதாக்கப்படுகிறது என்றார் அவர்.
வீரப்பன் கதையின் நிஜ வடிவத்தை அவரே மறுபிறவி எடுத்து வந்து சொன்னாலும் அதிலும் ஏதாவது நொள்ளை நொட்டை இருக்கும் என்ற நிலையில், இவர் மட்டும் எந்த உண்மையை பளிச்சென்று சொல்லிவிடப் போகிறார்? ஆனாலும், சண்டைக்காட்சியில் தெறிக்க விடும் ராம்கோபால் வர்மா, கில்லிங் வீரப்பனை முடிந்தவரை ஸ்பெல்லிங் கரெக்ஷன் இல்லாமல் கொடுப்பார் என்று இப்போதைக்கு நம்புவோமாக!