ஆளுக்கு ஐயாயிரம்? இது தெறியோட பங்கு!
‘சொன்னதை செய்வேன், சொல்லாததையும் செய்வேன்’ என்ற முழக்கம் கேட்டு மூணு நாள் கூட முடியல. அதற்குள் ‘சொன்னதை செய்வேன். சொல்லாமலே செய்வேன்’ என்று கமுக்கமாக அழைத்து கை மணக்க கொடுத்தனுப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. யாருக்கு? என்ன கொடுத்தார்?
வேறென்ன… துட்டுதான். கொடுத்தது கையளவு என்றாலும், கொடுக்க நினைத்த மனசே கடலளவு என்று புகழ்ந்தபடியே கலைந்தது கை நீட்டியவர்களின் மனசு. வேறொன்றுமில்லை. தெறி படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை தயாரிப்பாளர் சங்கத்தில் படமெடுத்து நொடிந்து போயிருப்பவர்களுக்கு கொடுப்பேன் என்று கூறியிருந்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு. இப்போது கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்ட லாபம் என்னவென்றும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம். சொன்னதை செய்யணுமே? 100 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
நியாயமாக பார்த்தால் நொந்து போன தயாரிப்பாளர்களின் லிஸ்ட் எடுத்தால், ஐம்பது அறுபது பேரை தவிர மீதி அத்தனை பேரும், பேஸ்த் அடித்துப் போய்தான் கிடக்கிறார்கள். அப்படி பார்த்தால் கூட ஆயிரம் பேருக்காவது தலா ஐயாயிரம் கொடுத்திருக்க வேண்டும் அவர். என்னவோ? சிலரை மட்டும் அழைத்து இந்த உதவியை செய்திருக்கிறார். இருந்தாலும் கொடுத்த வாக்கை காப்பாத்துனாரே என்று சந்தோஷப்படுகிறது நலிந்த தயாரிப்பாளர் வட்டாரம்.
ஆமா… தெறிக்கு பிறகு விஜய் என்கிற பாய்ச்சல் ஹீரோவின் சவுண்ட், மியூட் ஆகிக்கிடக்கிறதே. அண்ணாத்தே எங்க போயிருக்கீங்க?