தயாரிப்பாளர் சங்கம் போண்டா பஜ்ஜி சாப்பிடதானா? நாவால் சிக்கிய விஷால்!

விஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த நாற்காலியை பிடித்தும் விட்டார் அவர். ஏதோ பேசுனோம். அதான் வந்திட்டமே… என்று நினைக்காமல் அடுத்தடுத்து அவர் செய்யும் சங்க முன்னேற்ற செயல்பாடுகள் யாவும் ஹாட்ஸ் ஆஃப் ரகம்தான். ஆனால் பெரிய நாற்காலி வாய்க்கும் போதெல்லாம், மறக்காமல் போட வேண்டிய முதல் பூட்டு அவரவர் வாய்க்குதான் என்பதை உணராமல் போனதால், உபத்திரவம் கதவைத் தட்டி “உள்ளே வரட்டுமா?” என்கிறது.

இந்த வார ஆனந்த விகடன் இதழில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று, தயாரிப்பாளர் சங்கத்தை கொந்தளிக்க விட்டிருக்கிறது. “இன்னும் ஒரு வாரத்திற்குள் விஷால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் இப்போது நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் கத்தி சண்டை படத்தை விட்டுவிட்டு அடுத்து வரும் அவர் படங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு இல்லை” என்று கூறியிருக்கிறது சங்கம்.

போராடியே பழக்கப்பட்ட விஷால் இந்த சவாலை ஏற்றுக் கொள்வாரா? அல்லது மன்னிப்பு கேட்பாரா? என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்.

அதே நேரத்தில், அப்படி என்னதான்யா சொல்லிட்டாரு அந்தாளு? என்று மண்டையை பிய்த்துக் கொள்ளும் திருவாளர் பொதுஜனத்திற்கு, அந்த குறிப்பிட்ட பதில் மட்டும் இங்கே-

‘‘நிறைய சினிமாக்கள்… அதில் பலரும் லாபம் அடைஞ்சாலும் தயாரிப்பாளர் மட்டும் நஷ்டம் அடைகிறார். அதுக்கு என்ன காரணம்?’’

‘‘அதுக்கு தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்கமும்தான் காரணம். ஓர் இழப்பு எப்படி வருது, அதைத் தவிர்க்க என்ன செய்யலாம், அவசியம் இல்லாத செலவுகளை எப்படித் தவிர்க்கலாம், திருட்டு விசிடி-யினால் எவ்வளவு இழப்பு, திருட்டு விசிடி விக்கிறவங்களை என்ன பண்ணலாம், வருமானம் வரக்கூடிய இடங்கள் எவை, மும்பையில் ரிலீஸான 15-வது நாளே ஒரு படத்தின் டிவிடி-யை அதிகாரபூர்வமா ரிலீஸ் பண்ணுவதுபோல நாம பண்ணலாமா, ரிலீஸ் ஆன ஒரே மாசத்துல சிங்கிள் சாட்டிலைட் டெலிகாஸ்ட் ரைட்ஸ் கொடுப்பதுபோல நாம பண்ணலாமா, கமல் சார் சொன்ன மாதிரி முதல் நாளோ, 10-வது நாளோ, படத்தை டி.டி.ஹெச்-க்குக் கொடுத்து வருமானம் பண்ணலாமா, நெட் ஃபிளிக்ஸ், ஹீரோ டாக்கீஸ் போன்ற ஆன்லைன்கள்ல நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணலாமா…

இப்படி எந்த நல்ல விஷயம் பேசி முடிவுபண்ணலாம்னு கூப்பிட்டாலும் சங்கத்துல யாரும் வர மாட்டேங்கிறாங்க. ஆனா, ‘சார், எனக்கு ஒரு பஞ்சாயத்து. அந்த ஹீரோ 50 லட்சம் பாக்கி வெச்சிருக்கார்’னு சொன்னா போதும். ‘வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்துப் பண்ணலாம்’னு உட்கார்ந்துடுறாங்க. இதுதான் பிரச்னைகளுக்கு ஆரம்பப்புள்ளி. தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்தாலே, தமிழ் சினிமா செழிப்பா இருக்கும்.’’

பின்குறிப்பு-

நடிகர் சங்கத்தின் ஒரு பிரிவு, ‘நோ மன்னிப்பு. நடக்கறதை பார்க்கலாம்’ என்கிறார்களாம். (மறுபடியும் எல்லா சேனலையும் லைவ் டெலிகாஸ்ட்டுக்கு கொண்டு வந்து விட்ருவாங்களோ?)

 

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு! நா.முத்துக்குமாரின் சகோதரர் விளக்கம்!

நா. முத்துக்குமார் எப்படி இறந்தார்? சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இறந்தாரா? என்பது குறித்த பல்வேறு கதைகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவரது குடும்பத்தினருக்கு தீரா மன உளைச்சல்...

Close