அப்பாடக்கர் என்றால் என்ன? சங்கப் புலவராகி விளக்கிய சுராஜ்!
வி.டி.வி கணேஷ், மற்றும் சந்தானம் மாதிரியான நபர்களுக்குதான் இத்தகைய தலைப்புகள் எல்லாம் உதயமாகும். ஆனால் டைரக்டர் சுராஜ் தன் படத்திற்கு அப்பாடக்கர் என்று பெயர் வைக்க, ஊரே சேர்ந்து படு கமர்ஷியல் டைட்டில்ப்பா என்று பாராட்டியது அவரை. ஆனால் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்குதான் பல்ஸ் எகிறிடுச்சு. ஏன்? ‘அப்பாடக்கர் என்ற தலைப்புக்கெல்லாம் வரிவிலக்கு கொடுங்க’ என்று அரசிடம் போய் நிற்க முடியாதே?
எப்படியாவது மாத்திருய்யா… என்று கெஞ்சாத குறையாக தயாரிப்பாளர் முரளிதரன் கேட்க, அப்பாடக்கர்னா சகலமும் அறிந்தவன் என்று அர்த்தம். அதுக்கு ஏன் வரிவிலக்கு தர மாட்டேங்கிறாங்க என்றாராம் சுராஜ். தயாரிப்பாளரும் சுராஜும் அவ்வளவு பழக்கம் என்பதால் சற்று காமெடியாகவே நீண்டது உரையாடல். தலைப்பை மாற்ற முடிவெடுத்ததும் இருவருமே சேர்ந்து என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்க, சகலமும் அறிந்தவன் என்பதை சகலகலாவல்லவன் என்று மொழி பெயர்த்தார்கள்.
ஏற்கனவே கமல் நடித்த சகலகலாவல்லவன் படத்தை தயாரித்திருந்தது ஏவிஎம் நிறுவனம் என்பதால் வெகு சுலபமாக அந்த தயாரிப்பாளர்களை ரீச் பண்ணிவிட்டார் முரளிதரன். தாராளமா எடுத்துக்கங்க. ஆனால் லண்டனிலிருக்கும் பாலசுப்ரமணியமிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கங்க என்றாராம் ஏ.வி.எம் சரவணன். அவரையும் தொடர்பு கொண்டார் முரளிதரன். எஸ்எம்எஸ் மூலமாகவே என்ஓசி கொடுத்துவிட்டாராம் அவரும். இருவருக்குமே மனசார நன்றி சொன்னார் முரளிதரன்.
அப்படி வந்ததுதான் இந்த சகலகலாவல்லவன் தலைப்பு. முன்னாடி வச்ச அப்பாடக்கரை என்ன பண்ணுவது? இளம் புயல் ஜெயம் ரவியை அப்பாடக்கர் ஜெயம் ரவி என்று மாற்றிவிட்டார் சுராஜ். ஒரு தலைப்பு எத்தனை பேரை அலைய விடுது பார்த்தீங்களா?