வெட்டுக்குத்து படங்கள் பற்றி ஒரு குத்துவெட்டு பார்வை! பாடலாசிரியர் முருகன் மந்திரம்

இதுவரை வெளியான தேவர் ஜாதி, சமூக பின்னணி கொண்ட படங்களில் “கொம்பன்” கண்டிப்பாக கொஞ்சம் மாறுபட்ட ஸ்பெஷலான நல்ல படம் தான். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது…

படம் தொடங்கும்போதே தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஆள்களை வேலைக்கு கூட்டிச்செல்கிற லாரியையும், பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற குழந்தையையும் வெள்ளையும் சுள்ளையுமாக காலையிலேயே பஞ்சாயத்துக்கு கிளம்புகிற ஊர்ப்பெரிசுகளையும் காட்டி…. “பள்ளிக்கூடத்துக்கு போகலேன்னா ஒண்ணு அவங்களை மாதிரி அடிமை வேலைக்கு போவ, அல்லது இவங்களை மாதிரி, கடைசி வரை உருப்படாம போவ…” என்று அந்த குழந்தையின் ஆதங்கத்தோடு எச்சரிக்கிற அம்மாவையும் காட்டுகிறது படத்தின் முதல் காட்சி.

கோயில் திருவிழாவிற்கு ஜாதி சனம்லாம் போறோம் நீ வரலயா…? என சாமியாடியை அழைக்கும்போது, சாமியாடி பதிலாக… திருவிழாவுக்கு சனம் மட்டும் போனா பரவாயில்ல… ஜாதியும் கூட சேர்ந்துல்லா வருது… அங்க வர எனக்கு விருப்பமில்ல என சொல்கிறார்.

இப்படி ஆங்காங்கே இயக்குநர் முத்தையா ஆரோக்கியத்தை விதைத்திருக்கிறார்.

கார்த்தியின் மென்மையும் வன்மையும் கம்பீரமும் கலந்த ஹீரோயிஸம் ரொம்பவே அழகு. நடை, உடை, பார்வை, பாவனை, புன்னகை, பேச்சு, மூச்சு, கோப முறுக்கு, காதல் கிறுக்கு, பாசத் தவிப்பு… என கொம்பன் கார்த்தி… கார்த்திக்கே ஸ்பெஷல் கார்த்தி. பருத்திவீரன் கார்த்திக்கு பிறகு கொம்பன் கார்த்தி என்கிற அளவுக்கு… கார்த்தி கட்டழகுக் கலக்கல்.

அதைப்போலவே ராஜ்கிரண்… ராஜ்கிரண் எப்போதுமே ஸ்பெஷலான கலைஞர் தான். அத்தனை அகலமான உடம்பு அதற்கேற்ற முகம்… நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என ராஜ்கிரணின் கம்பீரத்திற்கு அக்மார்க், ஐஎஸ்ஐ, மிச்சமிருக்கிற எல்லா மார்க்கையும் கேள்வி கேட்காமலே அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் ஆச்சர்யம் என்னவெனில், அந்த அகல உடலிலும் முரட்டு முகத்திலும் பாசத்தையும், ஏக்கத்தையும், இயலாமையையும், பணிவையும், விட்டுக்கொடுத்தலையும் தவிப்பையும் விலாவாரியாக வரிசைக்கட்டி வகைப்படுத்தும்போது… அய்யா மனசுக்குள்ள மட்டுமில்ல, எல்லார் வீட்டுக்குள்ளயும் ஒருத்தரா வந்து உட்கார்ந்துக்குறீங்க. உட்கார்ந்துட்டு எல்லாரையும் பார்த்து அந்த முரட்டு உதட்டுக்குள்ள மென்மையா புன்னகைக்கிறீங்க அய்யா… பொறுமை ஒளிரும் அமைதியின் நிறைகுடமாக… அழகு மகளின் அன்புக்கு அடிமை அப்பனாக… மருமகன் முன்னே முந்தானை இழுத்து மூடிக்கொள்கிற மாமியார் போல பணிவும் மரியாதையும் பாசமும் அள்ளிக்கொட்டுகிற தமிழ் மாமனாராக…. அடடா…. ராஜ்கிரண்… ராஜ ராஜ கம்பீர மெல்லிய வீர பாச கோப “ராஜ”கிரண் பராக் பராக்… பல்லாண்டு வாழ்க வாழ்க.

கார்த்தி, ராஜ்கிரண் தவிரவும் லஷ்மிமேனன், கோவை சரளா, தம்பி ராமய்யா, வேல.இராமமூர்த்தி, கருணாஸ், மாரிமுத்து… மற்ற கதாபாத்திரங்களும் நிறைவாகவே…

இந்த மாதிரியான படங்களில், கதையின் முடிவு, கோரமாக, அகோரமாக, வலியாகவே இருக்கும். வன்முறையின் முடிவு கண்டிப்பாக நன்முறையாக இருக்காது என்பதற்கு சாட்சியாக, கதை நாயகனும், நீதியும் தோற்று, துரோகமும் வன்முறையும் ஜெயிப்பதாகவே இந்த மாதிரி கதைகள் முடிக்கப்படும். முடியும். ஆனால், கொம்பனைப் பொறுத்தவரை… அவர் கொம்பனாக இருப்பது வரை மட்டுமே கதை சொல்லி புத்திசாலித்தனமாக சுபம் போட்டு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையிலும் படமாக…. கொம்பன் வரவேற்க வேண்டிய படமாகவே இருக்கிறது. ஆனால், உண்மையான கொம்பனை அவரின் எதிராளி, அங்காளி, பங்காளி வகையறாக்கள் நிச்சயமாக கொத்துக்கறி போட்டு குலவைபாடி கும்மாளமடித்திருப்பார்கள்.

ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையோடும், வேல்ராஜின் ஒளிப்பதிவோடும், கே.எல்.பிரவீண் படத்தொகுப்போடும் வீரசமரின் கலையோடும்… கொம்பன் திரையில் நிமிர்ந்து நிற்கிறான். சில பல வெட்டுக்குத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கிறது, கொம்பன் திரைப்படம். படம் பார்த்தவர்கள் அனைவரும், படத்தில் அப்படி ஒன்றும் ஜாதிப் பிரச்சினை இல்லையே… எதற்கு இந்தப்படத்தை தடை செய்ய சொன்னார்கள்… சரியான பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே என்றே பேசிக்கொண்டார்கள்.

என் பங்குக்கு நானும் நண்பர் ஒருவரிடம் இதுல பிரச்சினை பண்ண என்ன இருக்கு என்று கேட்டேன்…

நீங்க இந்தப்படத்தை தேவர் அல்லாத ஒரு பிறஜாதி மனநிலையோடு பாருங்கள். ஒரு “தலித்”தாக இந்தப்படத்தை பாருங்கள் என்று சொன்னார். இந்தப்படம் தேவர் படம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லையே என சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது… கொம்பையா பாண்டியனும் கதை நடக்கிற இடமும் கதாபாத்திரங்களின் தோற்ற மற்றும் பேச்சு வழக்கு, குணாதியசங்கள் மட்டுமே போதும்… இது ஒரு தேவர் சமுதாய பின்னணி கொண்ட படம் என்பதற்கு எனவே நீங்கள் பொதுப்பார்வை, அல்லது பிற ஜாதிப் பார்வை பாருங்கள் என்றார்.

தனித்தனி சமுதாயங்களின் வாழ்வியலையும், சில அரிய தனிமனிதர்கள் பற்றிய தனித்துவமான கதைகளையும் ஆவணப்படுத்த வேண்டும், படைப்புகளாக மாற்ற வேண்டும் என்பது எப்போதுமே மறுக்கமுடியாத ஒன்று. ஆனால், இந்த கொம்பன் வகையறா கதைகளும் திரைப்படங்களும் எந்த வகையிலும் புதிதல்லவே. ஆள்களையும் பெயர்களையும் கதை நடக்கும் ஊரின் பெயர்களையும் மட்டுமே மாற்றிக்கொள்கிறது. மற்றபடி தேவர் மகனுக்கும் விருமாண்டிக்கும் திலகருக்கும் கொம்பனுக்கும் மதயானைக்கூட்டத்திற்கும் கதை என்ற வகையில் என்ன வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விட முடியும்?

“மண்வாசனை” படத்திலேயே இது ஆரம்பித்து விட்டதே என்கிறார் இன்னொருவர்.

ஒரே மாதிரியான வரலாறுகளை, ஒரே மாதிரியான கதைகளை, ஒரே மாதிரியான கதை மாந்தர்களை, ஊர் பெயரையும் கதாபாத்திரங்களின் பெயரையும் மாற்றி மாற்றி மீண்டும் மீண்டும் படைத்தே ஆக வேண்டிய அவசியம் என்ன…? தன்னை விட இன்னொருவன் பெரியவனாக இருக்கக்கூடாது என்ற நினைப்பே… இந்த எல்லா படங்களிலும் உள்ள வில்லன் கதாபாத்திரங்களின் உளவியலாக இருக்கிறது. அந்த உளவியல் அனைவருக்கும் பொதுவானதாக எடுத்துக்கொண்டால்????

ஒன்றுக்கும் உதவாத சில்லரை விஷயங்கள், அல்லது உறவுகளுக்குள் நடக்கிற சின்ன சம்பவங்களை பெரிதாக்கி அதற்காக அசால்ட்டாக கொலைகள் செய்வது, அல்லது ஒரு காதல், அதற்காக தொடர் கொலைகள் செய்வதாகவே இருக்கிறது இந்தக் கதைகள். அல்லது ஊருக்குள்ளே எவன் பெரியவன் என்ற போட்டியில் அப்பன், சித்தப்பன், பெரியப்பன், அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என்று வித்தியாசமில்லாமல் இரத்த உறவுகளைக்கூட ரத்தச்சகதியாக்கி மீசை முறுக்கிக்கொள்கிற வீராப்பாக முடிகிறது.

இரத்த உறவுகளுக்கே இந்த நிலை என்றால்… இதே சூழலில் வேறு உறவுக்காரர்களின் நிலையும் வேறு ஜாதிக்காரர்களின் நிலையும் எப்படி இருக்கும்… என்று யோசிக்காமலோ கேள்வி கேட்காமலோ இருக்கமுடியாதே…

“மைனா” திரைப்படத்தில் ஒரு ஆங்காரமான நீலாம்பரியின் போலீஸ்கார கணவன், வீட்டில் யாருமில்லாத போது, இன்னொரு அந்நிய பெண்ணுக்கு பெருந்தன்மையோடு(????!!!) அடைக்கலம் கொடுப்பார். இத்தனைக்கும் அவர் காவல்துறை அதிகாரி, காவல்நிலையத்தில் தங்க வைத்திருக்கலாம். கூடவே திரிகிற தம்பி ராமையாவின் வீட்டில் தங்க வைத்திருக்கலாம். வேறு ஹோட்டல் அல்லது விடுதியில் தங்க வைத்திருக்கலாம். ஆனால், அவர் வீட்டிலேயே கூட்டிச்சென்று தங்க வைப்பார். அதுவும் இரவில். வீட்டில் மனைவி இல்லை என்று தெரிந்தும். நீலாம்பரி மாதிரியான பொண்டாட்டிக்கு கணவராக இருந்தும் அந்த போலீஸ்காரர் அவ்வளவு புத்திசாலித்தனமாக இருப்பார்.

அவர் அவ்வளவு புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார் என்றால்… அவரின் ஆங்கார நீலாம்பரி மனைவியின் அண்ணன்கள் அதைவிட அதி அதி அதி புத்திசாலிகளாக இருப்பார்கள்.

மச்சான் போலீஸ்காரர், தங்கை ஊருக்கு வந்து விட்டாள். மச்சானைத் தேடி தங்கையின் வீட்டுக்கு வருகிறார்கள் அந்த புத்த்த்த்திசாலி அண்ணன்கள். வந்ததும் தங்கையின் வீட்டில் யாரோ ஒரு பெண் இருக்கிறாள்.

அந்த பெண் யார் என்னவென்று கேட்க மாட்டார்கள், விசாரிக்க மாட்டார்கள், மச்சானை நம்ப மாட்டார்கள், மச்சானிடம் ஒருவார்த்தை ஒப்புக்குக் கூட இந்தப்பெண் யார், என்ன உறவென்று கேட்க மாட்டார்கள்… யார் பெற்ற பிள்ளையோ அந்த பெண்ணை தெருவில் இழுத்துப்போட்டு மார்பில் மிதித்தே கொல்வார்கள்… அந்த பாசக்கார அண்ணன்கள். இந்த புத்திசாலி போலீஸ்காரரும், இந்த புத்திசாலி அண்ணன்களும் இல்லையென்றால், மைனாவும் கிடையாது… ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது… மார்பில் மிதித்தே கொல்லப்பட்ட அந்த பெண் என்ன ஜாதி என்பதையும், மிதித்தே கொன்ற அந்த அண்ணன்கள் என்ன ஜாதிக்காரர்கள் என்பதையும் இயக்குநர் பிரபு சாலமனிடம் கேட்டு வந்து சொல்லுங்கள்.

………….

டாக்டர் கிருஷ்ணசாமி, “கொம்பன்” படத்தில் இப்படி இருக்கிறது என்று எதையோ சொல்லி மல்லுக்கட்ட, உண்மையில் அப்படி இருக்கிறதா என்று… தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு படம் பார்த்ததும் அப்படி தெரியவில்லையே… அவர் சொன்னபடி அப்படி ஒன்றும் படத்தில் இல்லையே, எந்த ஜாதியையும் தாக்குவது போல, தாழ்த்துவது போல… காட்சிகள் இல்லையே… என்றபோதே கொம்பன் ரொம்ப நல்லவன் ஆகி விட்டான். கொம்பன் ரொம்ப ரொம்ப நல்ல படமாகி விட்டது. கொம்பன்… என்ற வார்த்தை தனிப்பட்ட ஜாதிக்காரர்களை குறிக்கிறது…. அந்த ஜாதிக்காரர்கள் மற்ற ஜாதிக்காரர்களை விட கொம்பர்கள் என்ற அர்த்தம் தொனிக்கிறது கதையில் என்றும் குறிப்பிட்டார்கள்.

படத்தில் இரண்டு ஜாதி சாராருக்குள் நடக்கும் சண்டையில் ஒரு சாரார், ஒரு ஜாதிக்காரர்களை உயர்வாகவும் இன்னொரு ஜாதிக்கார்களை தாழ்வாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த இரண்டு ஜாதிக்காரர்களும் இன்ன இன்ன ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற அடையாளம் அந்த சம்பந்தப்பட்ட ஜாதிக்காரர்களுக்கு தெளிவாகப் புரியும் அடையாளப்படுத்தியும் குறியீடுகளாகவும் படத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றார்கள்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட காலமாக இரு ஜாதிகளுக்குள்ளும் சண்டையும் கொலைகளும் தொடர்கிறது. இந்தப்படம் அந்த நெருப்பை இன்னும் பெரிதாக்கும், தென் தமிழ் நாட்டில் ஜாதிக்கலவரம் வெடிக்கும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை விட்டதோடு படத்தை தடை செய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்தார். ஒரு படத்திற்கு இத்தனை பிரச்சினையா, #ஐசப்போர்ட்கொம்பன் என்று ஒரு கூட்டமும், இது ஒரு ஜாதிப்படம் அதனால் #ஒய்சப்போர்ட்கொம்பன் என்று இன்னொரு கூட்டமும் பரபரத்து பட படத்தார்கள்.

ஆனால், நிலவரம் என்னவெனில் இந்த ஐ சப்போர்ட் காரர்களுக்கும் சரி, ஒய் சப்போர்ட் காரர்களுக்கும் சரி, தமிழகத்தின் ஜாதி வரலாறோ, ஜாதிச்சண்டை வரலாறோ, இந்த மாதிரியான படங்களின் பின் மற்றும் முன் விளைவுகள் பற்றியோ எந்த நீள்பார்வையும் இல்லை, மீள்பார்வையும் இல்லை என்பதே உண்மை. அது அவரவர் கூத்தாக மேலோட்டமாகவே இருக்கிறது. கொம்பன் படத்தில் தடை செய்யும் அளவுக்கு ஒன்றும் இல்லை என படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சந்தோசம் வாழ்த்துக்கள்.

தணிக்கை நண்பர்களுக்கும், டாக்டர் நண்பர்களுக்கும் நிதி கொடுத்து நீதியை நிலைநாட்ட இல்லை இல்லை… நிலை மாற்ற… நீதியின் தேதியை மாற்ற… நடந்ததாக சொல்லப்படும் கதைகளைத் தாண்டி… கொம்பன் கம்பீரமாக வந்துவிட்டான்… வெற்றிக்கொடி கட்டிவிட்டான்… இதுவரை வெளியான தேவர் ஜாதி படங்களில் கொம்பன் கண்டிப்பாக கொஞ்சம் மாறுபட்ட ஸ்பெஷலான நல்ல படம் தான். பின்…

…………………………………

கொம்பன் வகையறா படங்கள், மற்ற ஜாதிகளைப் பற்றி அந்த படங்களில் எதுவுமே பேசவில்லை என்றால்… அந்த கதை நடக்கிற ஜாதிக்குள் நடக்கிற சம்வங்களை, அந்த ஜாதிக்குள் நடக்கிற வன்முறையை மட்டுமே பேசினால்…. நல்ல படங்களாகி விடுமா?

நல்ல படங்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?
நல்ல படங்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?
இங்கே தான், பலப்பல கேள்வித்தொகுப்புகளின் முதல் புள்ளி வைக்கப்படுகிறது.
பொதுப்பார்வையில், அதாவது பிற ஜாதிக்காரர்களின் பார்வையில் என்றே வைத்துக்கொள்வோம்…. இந்தப் படங்களை எப்படி பார்ப்பது…?

தலித் மனநிலையோடு பாருங்கள் என்று ஒருவர் சொல்கிறார்… அப்படி என்றால் என்ன… அதுவும் ஒரு பிற ஜாதி மனநிலைப் பார்வை தான்… பிற மனிதப் பார்வை தான்… அப்படி கொம்பன் படத்தைப் பார்த்த ஒரு சாரார், கொம்பன் படத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை வைத்திருப்பவர் பெண்களை கேவலமாக நினைப்பது, நடத்துவது போல ஒரு காட்சி இருக்கிறது. பொதுவாக தீப்பெட்டி தொழிற்சாலைகளை நாடார்களே வைத்திருப்பார்கள். அந்தக் காட்சி நாடார்களை அவமானப்படுத்துவதற்காகவே வைக்கப் பட்டுள்ளது என்றும் அந்த ஒரு சாரார் சொல்கிறார்கள். நாடார் ஜாதி மக்களின் சார்பில் ஏதோ ஒரு கண்டன போஸ்டரையும் சென்னை அருணாச்சலம் சாலையில் பார்க்க முடிந்தது.

அதோடு ஒரு பாடலில் “பனைமரம் வெடிக்கும்” என்று ஒரு வரி வருகிறதாம். பனைமரம் என்பது நாடார்களுக்கான குறியீடாக இருக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சட்டம், ஒழுங்கு, காவல்நிலையம், நீதிமன்றம் எல்லாம் எல்லாருக்கும் பொதுவானது. எல்லாரும் கட்டுப்படவேண்டிய விஷயங்கள்… கொம்பன் வகையறா படங்களில், காவல்நிலையத்தை, காவலர்களை, நீதிமன்றங்களை, நீதிபதிகளை எல்லாம் குச்சிமிட்டாய் சாப்பிடுகிற குழந்தை அளவில் தான் எடுத்துக்கொள்கிறார்கள். ஒன்று குச்சி மிட்டாய் கொடுத்து பணியவைப்பது, அல்லது குச்சி மிட்டாயை பிடுங்கி எறிந்து பணிய வைப்பது…

மிரட்டுவது, வெட்டுவது, குத்துவது, கொல்வது… என்று எந்த எல்லைக்கும் சர்வ சாதாரணமாக போகிற மனநிலை… கொம்பன் படத்திலும் அப்படி காட்சிகள் இருக்கிறது… பஞ்சாயத்து தலைவர் பதவியை 25 லட்சத்திற்கு ஏலம் போடுவது… அதில் 20 ஆயிரத்திற்கு கல்யாண மண்டபம் கட்டுவது… மிச்சம் 5 லட்சத்தை கோர்ட்டு செலவுக்கு வைத்துக்கொள்வது… இப்படி ஒரு காட்சியும் கொம்பனில் இருக்கிறது.

அப்படி என்றால் என்ன அர்த்தம், அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட காட்சிகள்… இதே இந்திய தேசத்தின்… இறையாண்மை… சட்ட, காவல், நீதி வரையறைக்குள் கட்டுப்பாடுகளுக்குள் இருக்கிற பிற ஜாதிக்காரர்களின் மனதில் என்ன மாதிரியான உணர்வை உருவாக்கும். என்ன மாதிரியான எதிர்வினையை உண்டாக்கும்.

அதெப்படி… இவர்கள் மட்டும் இப்படி செய்யலாம்… அவர்களுக்கு வேறு சட்டமா, வேறு நீதியா… என்ற கேள்வியை உருவாக்கலாம்… அல்லது இவர்களைப்போலவே நாமும் செய்ய வேண்டும் என்ற மனநிலையை விதைக்கலாம். இன்னும் என்னென்ன விளைவுகளை உருவாக்கும், உருவாக்கியது, உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை பிற ஜாதிக்காரர்களிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த படங்களில், குறிப்பிட்ட ஜாதியினர் செய்கிற இந்த சட்டம், ஒழுங்கு சமாச்சாரங்களை… பிற சமுதாயத்தினர் கைத்தட்டி ரசிப்பார்கள்… பிரம்மாதம்… என்று ஏற்றுக்கொள்வார்கள் என யாராவது உத்தரவாதம் தர முடியுமா?

தவிரவும், இன்னொரு உளவியலையும் சொல்கிறார் ஒருவர், சம்பந்தப்பட்ட ஜாதிக்காரர்கள் என்றாலே ஒரு மாதிரி முறுக்கிக்கொண்டு யாருக்கும் அடங்காமல் இருப்பார்கள் என்றொரு சித்தரிப்போ, உண்மையோ, பேச்சோ இருக்கிறது. அதையே தான் இந்த படங்களும் செய்கின்றன. மேலும் இந்த மாதிரி படங்களை பார்க்கிற சம்பந்தப்பட்ட ஜாதிக்காரர்கள் இன்னும் மெதப்போடு முறுக்கிக்கொள்ள இது வழிவகுக்கும்.

சரி, அதனாலென்ன… என்று கேட்டால், அவர்கள் முறுக்கிக்கொண்டால் பார்க்கிற மற்றவர்கள் ???!!!

ஜாதி உணர்வெனும் மாத்திரைகளுக்கு பக்க விளைவுகள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த மாத்திரைகளை இன்னும் வீரியமாக்காமல் இருப்பதே இந்த தலைமுறைக்கு செய்யும் பெரிய நன்மை என்கிறார்.

எல்லா கலைஞனும் தான் வாழ்ந்த ஊரின் கதையையும் தன் வாழ்ந்த மண்ணின் கதையையும் தான் எடுப்பான், அதில் தவறில்லை. இயக்குநர் ஹரி எடுக்கிற படங்களில், ஜாதிப்பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட நாடார் சமுதாய வெளிப்பாடு இருக்கும். உதாரணம்… சிங்கம் படத்தில் வருகிற சூர்யா, நாங்க “அய்யாவழி”க்காரங்க என்று சொல்வார். அதைப்பபோலவே ஹரியின் ஐயா, கோவில், மற்றும் பிற சில படங்களும். ஆனால், அந்த படங்கள் எப்போதும் வன்முறைக்கு கற்பூரம்… ஆரத்தி காட்டி எல்லாம் வரவேற்பதில்லை. கூடுமான வரை ஜாதிப்பெயர்களைக்கூட குறிப்பிடுவதில்லை. தனிக்கொடி பிடிப்பதில்லை.

ஏன் எனில்… நம்மூரில் தான், பெயர்களைப் பார்த்தே சாதி கண்டுபிடிப்பார்களே… இந்த பெயர் இன்ன சாதியில் தான் அதிகமாக வைப்பார்கள் என்கிற அளவுக்கு பெயர் பரிச்சயம் இருக்கிறது நம் அனைவருக்கும். துரைசிங்கம், விருமாண்டி எல்லாம் ஒரு பருக்கை உதாரணங்கள். அதை தனித்துவம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி…. அவ்வளவு தனித்தனியாக பிரிந்திருக்கிறோம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி. இன்னொரு கேள்வி… மெட்ராஸ் படம் வந்ததே… தலித் படம் தானே… அதை ஏன் கேள்வி கேட்கவில்லை என்று.

தேவர்மகன், விருமாண்டி, சண்டியர், திலகர், மதயானைக்கூட்டம், சூரியநகரம், கொம்பன், பசும்பொன்… வகையறா படங்களைப்போல அந்த படங்களுடன் ஒப்பிட சாத்தியமுள்ள ஒரு திரைப்படமா “மெட்ராஸ்”???? மெட்ராஸ் படத்திற்கு ஜாதி அடையாளம் தேவையில்லை என்று அந்த படம் வெளியான சமயத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம்… https://wh1049815.ispot.cc/madras-not-in-community-base/ மெட்ராஸ் திரைப்படம் சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அல்லது குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் இருக்கும் மக்களின் வாழ்வியலை அதன் பின்புலத்தோடு பதிவு செய்தது. தெளிவான கதையில், அந்தப் பகுதியின் அரசியல், அரசியல்வாதிகளின் பதவி ஆசை அந்தப்பகுதியையை எப்படி பாடாய் படுத்துகிறது என்பதை சித்தரித்தது.

மெட்ராஸ் திரைப்படம் தலித் படம் என்றே வைத்துக்கொள்வோம். அந்தப்படம், அல்லது படத்தின் எந்தப்பகுதி பிற ஜாதியினரை கோபப்படுத்தும்படி இருந்தது, அல்லது பிற ஜாதிக்காரர்களால் ஏற்க முடியாததாக இருந்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்கிறார், ஒருவர். ஆக மெட்ராஸ் திரைப்படத்தை இந்த படங்களோடு ஒப்பிடுவது என்பதே, விதண்டாவாதமாகத்தான் இருக்குமே தவிர, விவாதமாக இருக்காது.

இந்த தலைமுறையிடம் ஜாதி இல்லை, ஜாதித்தலைவர்கள் தான் ஜாதி பற்றி பேசுகிறார்கள் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதில் சில சதவிகிதம் கூட உண்மையில்லை. ஃபேஸ்புக்கில் பாருங்கள். எவ்வளவு ஜாதிப் பக்கங்கள். பெயரிலேயே ஜாதி வைத்திருப்பவர்கள். ஃபுரொஃபைல் படங்களில் தங்கள் ஜாதித் தலைவர்களின் படங்களை வைத்திருப்பவர்கள்…. இன்னும் எவ்வளவோ…. இருக்கிறது. பிரச்சினைக்கு காரணக்காரரான கிருஷ்ணசாமி, வெறும் அம்பு தான் என்று சொல்கிறார்கள். கொம்பன் படம் தொடர்பான அவரின் அறிக்கை ஒன்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/DrKrishnasamy/photos/a.322228447945154.1073741827.322218957946103/443520652482599/?type=1&theater

அந்த பதிவின் இணைப்பு. அந்தப் பதிவில் கமெண்ட் என்ற பகுதியில் இணைய தள இளைய சாதியினர் தங்களுக்குள் பேசிக்கொள்ளுவதை பாருங்கள். இன்னும் இதே போல எத்தனை பக்கங்கள் உள்ளதோ? பதிவுகள் உள்ளதோ? ஃபேஸ்புக்குக்கே வெளிச்சம்.

ஆக, ஜாதி என்பது அவ்வளவு எளிதில் முற்றிலுமாக இல்லாமல் ஆக்கி விட முடியாத ஒன்று. 100 வருட சினிமா வரலாற்றில் நம் ஊரில் காதல் படங்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனால், திரையில் காதலைக் கொண்டாடுகிற நம்மால் தெருவில் காதலைக்கொண்டாட முடியவில்லை. அதிலும் ஜாதி விட்டு ஜாதி என்றால் சொல்லவே வேண்டாம்.

சமீபத்தில் NH10 என்றொரு இந்திப் படம் வெளியானது. டெல்லியில் இருந்து ஹரியானா செல்கிற தேசிய நெடுஞ்சாலை எண் 10ல் சில மணி நேரங்களுக்குள் நடக்கிற சம்பவங்களே கதை. உயர்ந்த ஜாதியாக சொல்லப்படும் ஜாதி பெண்ணை, தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிற ஜாதிப்பையன் காதலித்து வீட்டை விட்டு ஓடி வருகிறார்கள். அவர்களை துரத்தி விரட்டி கண்டுபிடித்து சித்ரவதை செய்து, இரவோடு இரவாக, உயிரோடு புதைக்கிறார்கள். சித்ரவதை செய்து புதைப்பது உயர்ந்த ஜாதி பெண்ணின், அண்ணன் மற்றும் சகாக்கள். அனுப்பி வைத்தது அந்தப் பெண்ணின் அம்மா.

ஆக, வடக்கோ தெற்கோ ஜாதி என்பது வேறு வேறு வடிவமாக மாற்றம் கொண்டு தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இருகொலைகள் நடந்திருக்கிறது. அதில் ஒருவர் கல்லூரி மாணவர், இன்னொருவர் காவல்துறை அதிகாரி… இரண்டுமே ஜாதியில் பெயரால் நடந்த கொலைகள் என்றால் நம்ப முடிகிறதா?

மிக சிம்பிளாக ஒன்று சொல்வார்கள், பள்ளிக்கூடங்களிலும் அரசுப் பதவிகளிலும் அலுவலங்களிலும் ஆவணங்களில் ஜாதிப்பெயர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, பயன்படுத்தக்கூடாது என்று… மத்திய மாநில அரசுகளே கட்டாய சட்டம் போட வாய்ப்பிருக்கிறதா… அப்படி இல்லை எனில் அது முடியாது எனில்… ஜாதி இல்லை என்று எப்படி சொல்ல முடியும்.

அதைப்போலவே கமல் எடுத்தாலோ கார்த்தி எடுத்தாலோ கேட்பவர்கள் வேறு சின்ன சின்ன படங்கள் வரும்போது ஏன் கேட்கவில்லை என்று கொடி பிடிக்கிறார்கள். ஒரு ராக்கம்மாவோ, ஜக்கம்மாவோ செருப்பணிந்து கோயிலுக்குள் போனால் கண்டுகொள்ளாத நாமே தான், குஷ்பு செருப்பு என்றால் மட்டும் கொதிக்கிறோம். சமுகத்தில் மக்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட முகங்களுக்கு சொந்தக்காரர்கள் எதைச் செய்தாலும் அதை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் அல்லது மறுக்கவும் விவாதிக்கவும் தயாராகிறோம். ஏனெனில் அது அதிகப்படியான மக்களை சுலபமாக சென்று சேர்கிறது என்பதே காரணம். சுந்தர லிங்கமோ, சங்கர லிங்கமோ நாட்டை விட்டு போகப்போகிறேன் என்று சொன்னால் அது செய்தியாகுமா? கமல்ஹாசன் சொன்னால் அது தலைப்புச்செய்தி ஆகுமே…

ஆக பாப்புலாரிட்டியும் புகழும் அவர்களுடைய செல்வாக்கும் இணைந்து தீர்மானிக்கிற ஒன்று அது… இப்படி எந்த வட்டத்திற்குள்ளும் இல்லாதவர்கள் எதைச் செய்தால்…. எனக்கென்ன என்று தான் எல்லாரும் இருப்பார்கள். இப்போதெல்லாம் அப்படி எந்த அடையாளமும் பாப்புலாரிட்டியும் இல்லாதவர்கள் அதற்காக செயற்கையாக இந்த மாதிரி பிரச்சினையை உருவாக்கி தன்னைப் பற்றி பேச வைக்க பிளான் பண்ணுகிறார்கள்.

தங்கள் வீட்டையும், காரையும் தாங்களே உடைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் செய்வது அரசியல் ஸ்டைல் என்றால்… தங்கள் படத்தின் மீதே யாரையாவது ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வழக்கு தொடுக்க வைத்து… படம் வெளியாவதற்கு முன் பரபரப்பை கிளப்பிவிடுவது இந்தப்பக்கம் சினிமா ஸ்டைலாக இருக்கிறதாம்.

படம் என்றால் ஜாதி மட்டுமில்லை, இதைப்போல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

சமீபத்தில் “டார்லிங்” என்றொரு படம் வெளியானது. படத்தில் கடற்கரை பங்களாவில் வந்து தங்குகிற ஜோடிகளில் பெண்களை அங்கே உள்ள நால்வர் அணி வலுக்கட்டாயமாக வன்புணர்ச்சி செய்கிறார்கள். சரி, வன்புணர்ச்சி என்பது உடலின் அரிப்பு, காமெவெறி என்று எடுத்துக்கொண்டால் கூட அவர்கள் செய்த இன்னொரு விஷயம் ரொம்ப ரொம்ப கொடூரமானது, படு கேவலமானது. காதலனோ கணவனோ அவனை அடித்து உதைத்து பிடித்து வைத்துக்கொண்டு அவன் கண்முன்னே வைத்துத்தான் அவனது காதலியை அல்லது மனைவியை ஒவ்வொருவராக வன்புணர்ச்சி செய்வார்களாம்… அதில் என்ன தனி இன்பம் என்று தெரியவில்லை… சரி சைக்கோ என்று எடுத்துக்கொண்டால் கூட ஒருவன் இருக்கலாம்… நான்கு பேருமே சைக்கோ வா… அது என்ன லாஜிக், என்ன தேவை, எந்தக் …..ந்திரமும் இல்லை. ஆனால், படம் ஹிட்டோ ஹிட்டு.

இந்த ஹிட்டில் பொதுமக்கள் மனநிலை என்ன… நமக்கென்ன??

ஆக ஒட்டு மொத்த சமூகத்தையோ, அல்லது ஒரு இனம், ஜாதி, மத சார்புள்ள மக்களையோ எந்தப்படமும் மனரீதியாக பாதிக்கக்கூடாது, அல்லது சரியென்று அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை வலிந்து திணிக்க முயற்சி செய்யக்கூடாது. அவர்கள் கேள்வி கேட்கவில்லை என்றாலும் கூட இது படைப்பாளிகளின் பொறுப்பு. சினிமா என்கிற வலிமையான ஆயுதத்தை பயன்படுத்துபவர்கள் மனசாட்சியின் அனுமதி எல்லைக்குள் இருப்பதையே படைக்க முயற்சிக்க வேண்டும்.

அதையும் மீறி செய்தால் அந்த பாதிப்பு, எதிர்மறையான வழிநடத்துதலுக்கும் காலம் காலமாக அந்த காழ்ப்புணர்ச்சியை தொடர்ந்து வளர்ப்பதற்குமே வழி வகுக்கும். பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் தொடர்ச்சியாக நடந்த கலவர வரலாறு இதற்கொரு உதாரணம். கொம்பன் வகையறா படங்களை, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கண்டிப்பாக சொல்ல முடியாது, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அடம் பிடிக்கவும் முடியாது. இந்த மாதிரி படங்களை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது. ஏனெனில் நமக்கு செல்வாக்கு இருந்தால் தான் அந்த சட்டத்தையே தடை செய்து விடுவோமே.

ஆனால், சமூக நோக்கோடும் இந்த மாதிரியான பதிவுகள், காட்சிகள், சித்தரிப்புகள் போதும் போதும் என்கிற அளவுக்கு வந்துவிட்டது என்ற அளவிலும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுமே இம்மாதிரி படங்களை நேரடியாக எதையும் குறிப்பிடாமல் கதையாக மட்டுமே பார்க்க வேண்டும். சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு “சண்டைக்கோழி” திரைப்படம் எந்த வட்டார வழக்கு பேசினாலும், எந்த மாவட்டத்தில் நடந்திருந்தாலும் ஹிட்டு தான். அதைப்போல “சூரியவம்சம்” “நாட்டாமை” கதைகளையும் எந்த மாவட்டத்தில் எந்த வட்டார வழக்கு பேசினாலும் ஹிட்டு தான். மண்வாசம், யதார்த்தம், நேட்டிவிட்டி என்று வார்த்தைகளை காரணம் காட்டி வன்முறை வளர்ப்பது தவறு. அந்த வகையில் கூடுமானவரை இந்த விஷயங்களை மனதில் கொண்டு யோசிப்பதும் கதை சொல்வதும் நம் தலைமுறைக்கும் நமக்கும் நல்லது.

இல்லை என்றால்…

லஞ்சம் வாங்குறது தப்பில்ல, ஆனால் வாங்கிட்டு வேலை செய்து கொடுக்காமல் ஏமாற்றுவது தான் தவறு என்ற மனநிலை மிக சாதாரமான நம்மிடையே வந்து விட்டது போல, எந்த ஜாதியை உயர்த்தியும் படம் எடுக்கலாம், ஆனால் படத்துக்குள்ள அடுத்த ஜாதி வராமல், அடுத்த ஜாதியை தாழ்த்தி, தரக்குறைவாக சித்தரிக்காமல் இருந்தால் போதும் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு…

எல்லா ஜாதிக்காரர்களும் தங்கள் ஜாதியை உயர்த்திப்பேசும் வகையில் படம் எடுக்க வசூலில் ஈடுபடக் கூடும். படங்கள் தயாராகக் கூடும். அந்தப்படங்கள் வெளியாகும் போது இதைவிட மோசமான போராட்டங்களையும் சண்டைகளையும் கலவரங்களையும் சந்திக்க நேரலாம்.

-முருகன் மந்திரம்

1 Comment
  1. mathan says

    devars, gounders, iyengars r most oppressive castes in tamilnadu. they bully others, even if they dont qualify.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“நெருக்கம் “

மிக  நெருக்கமான  அன்போடு  அமைதியாக வாழ்ந்து  வரும்  தம்பதிகள் ஒரு சமயத்தில்  அந்த  நெருக்கமே  அவர்கள்  வாழ்க்கையில்  எப்படி விளையாடுகிறது  என்பதை ஒரு உண்மை  சம்பவத்தின் பாதிப்பில்  படமாகி இருக்கும்...

Close