யாகாவராயினும் நாகாக்க- விமர்சனம்

‘கேடாய் முடியும் கேமிரா மொபைல்’ என்று கூட இந்த படத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாம். ‘ஒரு நாள் டைம் தர்றேன். என் பொண்ணை கண்டுபிடிச்சு கொடுத்துட்டு உன் குடும்பத்தை மீட்டுட்டு போ…’ என்று ஹீரோவுக்கு வில்லன் சவடால் விடும் சாதாரண கதைதான். ஆனால் அதை சொல்லும் விதத்தில் நெஞ்சாங்கூட்டில் தவுசண்ட் வாலாவை கொளுத்திப் போடுகிறார் இயக்குனர் சத்யபிரபாஸ் பினிசெட்டி. மேக்கிங் மேக்கிங் என்பார்களே…. அது எப்படியிருக்கும் என்பதை இந்த படத்தின் கடைசி அரை மணி நேரத்திற்கு முன்பு வரை வாயில் ஈ புகுந்தாலும் தெரியாத வண்ணம் சொல்லியிருக்கிறார் சத்யபிரபாஸ். அப்புறம்? தமிழ்ப்பட மசாலாவை அரைத்து நெற்றி நிறைய பூசிக் கொண்டு, என்ன பண்ணுவதென்றே தெரியாமல் எங்கெங்கோ சுற்றியடிக்கிறார். வெளியே வரும்போது, ஆமா… நீங்க நல்லவரா? கெட்டவரா? குழப்பம்ஸ்!

மும்பையில் இறங்கி ஒரு கள்ளத்துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, முதலியாரை பார்க்க கிளம்புகிறார் ஆதி. அவர் வாயாலேயே கதையும் விரிகிறது. அடுத்த காட்சியிலேயே முதலியார் சுடப்பட, ஒரே களேபரம். சுட்டது ஆதிதான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, ‘அவரு இல்லேப்பா’ என்றெல்லாம் வாயால் சொல்லி வளவளக்காமல் சட்டு சட்டென்று நகர்கிறது காட்சிகள். அளந்து வைக்கப்பட்ட வசனங்கள். மிக பொருத்தமான எடிட்டிங் என்று ஒருவித மயக்க நிலையிலேயே நம்மை கொண்டு செல்கிறார்கள். பிளாஷ்பேக்…. ஒரு நள்ளிரவு பார்ட்டியில் தனது பணக்கார நண்பர்களின் அடாவடியால் ஒருவனை போட்டு பொளந்து எடுக்கிறார் ஆதி. அங்கு நடக்கும் களேபரத்தில் மும்பை முதலியாரின் பெண்ணுக்கே அடி விழுகிறது. சம்பந்தப்பட்ட பெண் யாரென்று தெரியவரும்போது, நண்பர்கள் அத்தனை பேரும் முதலியாருக்கு பயந்து ஓட, ‘அவரையே பார்த்து மன்னிப்பு கேட்டுட்டா போச்சு’ என்று கிளம்புகிறார் ஆதி. போன இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கிறது கதை.

சம்பவ நாளில் இருந்தே முதலியார் பெண்ணை காணோம். ‘உன் பிரண்ட்ஸ்தான் கடத்திட்டாங்க. அவ இருக்கிற இடத்தை சொல்லிட்டு உன் குடும்பத்தை மீட்டுக்கோ’ என்று ஆதியின் குடும்பத்தை சிறை வைக்கிறார் முதலியார். தேடக் கிளம்பும் ஆதிக்கு தேவைக்கு அதிகமாகவே தேவாங்கு சங்கு ஊதுகிறது. இறந்து போன முதலியார் பெண்ணை யார் கொன்றது? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கோடம்பாக்கத்திற்கு கொதிக்க கொதிக்க ஒரு ஆக்ஷன் ஹீரோ கிடைச்சாச்சு. ஆதியைதான் சொல்கிறோம். ஆஜானுபாகுவான உடம்பு. அதற்குள் முறுக்கேறி நிற்கும் முரட்டுத்தனம் என்று அசரடித்திருக்கிறார் மனுஷன். அதற்காக ஐயாயிரம் பேரை சுண்டு விரலால் நசுக்கலாம் என்று ஸ்டன்ட் மாஸ்டர்களின் ஆசைக்கு பலியாகாமலும், படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமது பிருஷ்டத்தை மிதிக்காமலும், யதார்த்தமாக சண்டை போடுகிறார். அடிவாங்குகிற இடத்தில் அடிவாங்கியும் ரத்தம் கக்குகிறார். சபாஷ். தன்னால் தன் அப்பாவுக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை வண்டி வண்டியாக டயலாக் பேசி கொல்லாமல், ஒரு பார்வையில் உணர்த்தி நெகிழ வைக்கிறார்.

இவருக்கும் நிக்கி கல்ராணிக்கும் இடையே வரும் காதல் செம ஜாலி. ‘என்னைதானே தேடுற?’ என்று கேட்டு அப்படியே ஆதி பைக்கில் ஏறிக் கொள்ளும் நிக்கி, என்னமாய் நடித்திருக்கிறார். அதுவும் அவர் என்பீல்டு ஓட்டுகிற அழகுக்காகவே இன்னும் நாலு முறை படம் பார்க்கலாம். ஆனால் எந்த இடத்திலும் இவரை லூசுப்பெண்ணே லெவலுக்கு கீழிறக்கவில்லை டைரக்டர். இருபதிரெண்டு வருஷமா உன் மேல உன் அப்பாவுக்கு வராத நம்பிக்கை ரெண்டு நாள் பழகுன எனக்கு வந்துருக்குன்னு சொல்லணும். உங்கப்பாவை பார்க்க போறேன் என்று அவர் கிளம்புகிற இடம் ஆஹா. நல்லவேளை… இந்த காதலை சோக கீதமாக முடிக்கவில்லை. பாராட்டுகள் சத்யபிரபாஸ்.

கண்களை ஊடுருவிச் சென்று மனசை படிக்கும் மிதுன் சக்கரவர்த்தி, இன்னுமொரு ‘நாயகன்’ கமலாகவே தெரிகிறார். கடைசி வரைக்கும் கூட கவனித்து பார்த்ததில், மனுஷன் இஞ்ச் டேப் அளந்து நடித்தாரோ என்கிற அளவுக்கு ஸ்ருதி சுத்தம். அவர் கண்ணெதிரிலேயே ஆதியும், நண்பர்களும் தாக்கப்படும் காட்சிகளில் மட்டும், அளவுக்கு அதிகமாகவே ஆந்திரா காரம். நாசர், நரேன், பிரகதி, பசுபதி என்று எல்லாருமே மனசை கொள்ளையடித்திருக்கிறார்கள். பசுபதியின் போர்ஷனை மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாமோ?

ஆதியின் நண்பர்களாக நடித்திருக்கும் அந்த மூவரும் நமது தமிழுக்கு ஒட்டாத முகங்கள். இருந்தாலும் சகித்துக் கொள்கிறோம். ஒரு பெண்ணை அவள் சம்மதமில்லாமல் செல்போனில் புகைப்படம் எடுப்பது தவறு என்று தெரிந்தும், அதை அவளே வந்து உணர்த்தியும் கூட அவர்கள் பண்ணுகிற பிரச்சனை எந்த விதத்திலும் நியாயமில்லை. அப்படியிருக்கும்போது அவர்களை அடித்து புரட்டினால் ரசிகர்களுக்கு அவர்கள் மீது இரக்கம் வரும் என்று டைரக்டர் நினைப்பது எந்த விதத்திலும் சரியில்லை. அந்த இடத்தில் நன்றாகவே சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.

ஒருகாலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரிச்சாபலேட்டுக்கு இந்த படத்தில் கனமான ரோல். நான் யாருன்னு தெரியாம கைய வச்சுட்டீங்கல்ல? நாளைக்கு ஒருத்தனும் உயிரோட இருக்க மாட்டீங்கடா என்று கதறுகிற இடத்திலும், தன்னை பிராத்தல் கேசில் உள்ளே போட்ருவேன் என்று எச்சரித்த இன்ஸ்பெக்டரின் கன்னத்தை பதம் பார்க்கும் இடத்திலும் அசரடிக்கிறார். வெல்டன் ரிச்சா.

இந்த படத்தில் தானும் ஒரு கேரக்டராகவே பயணித்திருக்கிறது சண்முகசுந்தரத்தின் கேமிரா. ஜஸ்ட் வினாடியில் கடந்து போகிற காட்சிகளுக்கு கூட அதிகம் மெனக்கெட்டிருக்கிறது அவர் வைத்திருக்கும் அசத்தல் கோணங்கள்! பிரஷன் பிரவின் ஷ்யாம் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஓ.கே. பின்னணி இசை ரொம்ப சுமார்.

ஹைவேஸ் பென்ஸ் போல அசால்ட்டாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை, அசுர வேகத்தில் திருப்பி முட்டு சந்தில் கொண்டு நிறுத்துகிற அந்த க்ளைமாக்ஸ் தோரணங்கள் ஏனய்யா? சம்பந்தமில்லாத கேரக்டர்கள்… சம்பந்தமில்லாத பினாத்தல்கள்… கடைசி காட்சிகளில் பலவற்றை நறுக்கிவிட்டு படத்தை முடித்திருந்தால்,

யாகவராயினும் ஆஹா ஓஹோ என்று பாராட்டியிருப்பார்கள்! பட்….?

ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
 மலேசியாவில் ஜீவன் –  வித்யா  பாடல் காட்சி  

         பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் "அதிபர்". இந்தப் படத்தில்...

Close