யூகன் விமர்சனம்

நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் ஐடி இளைஞர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் என்னாகும்? யூகன் மாதிரி படங்கள் அடிக்கடி வரும்! இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், எல்லாருமே ஐடி துறையை சேர்ந்தவர்கள்தான்.

கதைக்காக எங்கும் அலையவில்லை அவர்கள். தங்களது ஐடி துறை அலட்டல் மிரட்டல்களையே படமாக்கியிருக்கிறார்கள். ஒருவேளை அதே துறையிலிருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் விழுந்து விழுந்து ஓவர் டைம் பார்தோ, நைட் ஷிப்ட் பார்த்தோ ரசிப்பார்களோ என்னவோ?

ஆனாலும் சினிமா ட்ரென்ட் என்ன என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் கமல்ஜி. யெஸ்… இதுவும் ஆவி, பேய், பிசாசு கதைதான். ஒரு ஆவி சில ஐடி இளைஞர்களை குறி வைத்து போட்டுத் தள்ளுகிறது. துப்பறியும் போலீஸ் அதிகாரி கொல்லப்படும் நண்பர்களில் இருவரை சந்தேகப்பட்டு தூக்க, ‘அய்யா சாமி. நாங்க கொல்லல’ என்கிறார்கள் அவர்கள். அப்படின்னா யாரு?

கடைசியில் அந்த ஆவியே போலீஸ் அதிகாரியின் கண்களில் தென்பட, கேஸ் குளோஸ். ஆமா… ஏன் கொல்லுதாம் ஆவி? பிளாஷ்பேக்.

பிராஜக்ட் மேனேஜரின் திடீர் செல்வாக்கு, அவள் இவர்கள் மேல் செலுத்தும் ஆதிக்கம் எல்லாம் சேர்ந்து அவள் மேல் வெறுப்பு வரவழைக்கிறது. (அந்த மேனேஜர்தான் ஹீரோயின் சாக்ஷஷி அகர்வால்) கடைசியில் அவளது கம்ப்யூட்டரிலிருந்தே ஒரு முக்கியமான பிராஜக்ட்டை வேறொரு கம்பெனிக்கு விற்கிறார்கள். நிர்வாகம் ஹீரோயின் மீது சந்தேகப்பட்டு போலீஸ் வரும் போலீஸ் வரும்… என்று பயமுறுத்திக் கொண்டேயிருக்க, அதற்குள் ஹீரோயின் மர்கயா.

சும்மாயிருக்குமா ஆவி? மீதியை வெண்திரையில் காண்க என்று சொல்வதில் ஒரு சிக்கல். ஏனென்றால் மிக மெல்லிய கோடுதான் கதை. அந்த கோட்டை படம் அடைந்து சென்று நிற்பதற்குள் திடுக் திடீர் திருப்பம் ஏதும் நிகழவில்லை. ஆனால் தன் அம்மாவின் சம்மதத்தோடு ஒருவன் காதலியை விரட்டுகிற சுகம் இருக்கிறதே… அதை இந்த படத்தில் பார்க்கலாம்.

ஆவியாக வரும் சோனாக்ஷிக்கு அதிகம் மேக்கப் செலவு பிடித்திருக்கிறது. ஏனென்றால் பின்னணியில் அரையிருட்டில், கடுங்கோப பார்வையோடு நிற்கும் அவருக்கு நிஜத்திலேயே அவ்வளவு மேக்கப் போட்டிருக்கிறார்கள். காதல், அதிர்ச்சி, உருக்கம் என எல்லாவற்றையும் முகத்தில் தேக்கி கவர்கிறார் அவர்.

ஹீரோயினும், படத்தில் வரும் போலீஸ் அதிகாரியும் தவிர வேறு யாரும் ரசிகனின் மனசில் புகுந்து கொள்ள வேண்டும் என்று முயலவில்லை. வருகிறார்கள்… பேசுகிறார்கள்… அவ்வளவுதான்!

ஆங்காங்கே பளிச்சிடும் வெளிச்சமும், பதற வைக்காத இருட்டுமாக எப்படியோ சமாளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி ஆறுமுகம். இசை ராஷாந்த் அர்வின். ஹிட் மெட்டுகளுக்காக திணறியிருக்கிறார். இருந்தாலும் முருகன் மந்திரம் எழுதியிருக்கும் அந்த டூயட் சில முறை கேட்டால் மனசுக்குள் பொச்சக் என ஒட்டிக் கொள்ளும் ரகம்.

கொலைக்காரன் யாருன்னு யூகிங்க பார்க்கலாம் என்பதைதான் யூகன் என்று வைத்தார்களோ என்னவோ? யூகிச்சிட்டோம்… விட்ருங்க!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
கடவுளே சிக்கியிருந்தாலும், கரண்டியை பழுக்க போட்டிருப்பார்

வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று...

Close