யுவனை ஒழிக்க அனிருத் இறக்கிய ஆட்கள்?

யுவனால் முடியாதது வேறு எவனால் முடியும்? என்கிற வெற்று வேட்டு பிரச்சாரத்தை அனிருத்தின் சிஷ்யர்கள் முறியடித்துவிடுவார்கள் போலிருக்கிறது. ‘வடகறி’ படத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்ட யுவனுக்கு வேறு ஏதேதோ வேலைகள். சொன்ன நேரத்தில் எதையும் செய்து கொடுக்க முடியாத அளவுக்கு மியூசிக் பணியை ரப்ப்ப்ப்பராக இழுத்துக் கொண்டேயிருந்தாராம். வேறு வழியில்லாமல் யுவனை ஒதுங்க சொல்லிவிட்டு விவேக் சிவா, மெர்வின் சாலமன் என்ற இரட்டையர்களை கொண்டு இசையமைத்து விட்டார்கள். இவர்கள் இருவருமே அனிருத்தின் சிஷ்யர்கள். அனிருத்தின் சிபாரிசில்தான் இவர்கள் இருவரும் வடகறி படத்திற்குள் வந்தார்களாம். இருந்தாலும் யுவன் கம்போஸ் செய்த ஒரு பாடல் மட்டும் படத்தில் இருக்கிறது.

இந்த இரட்டையர்களில் மெர்வின் சாலமன் ஒரு நடிகரை போலவே இருக்கிறார். அவரது ஹேர் ஸ்டைலுக்காகவே லட்டுகள் பல அவர் பின்னால் சுற்றக்கூடும். (தம்பி…தொழிலாச்சு, துட்டாச்சுன்னு இருக்கணும். இல்லேன்னா கெட்டுப்போனவங்க சறுக்குன வரலாறு இங்க நிறைய இருக்கு. ப்ளீஸ் வாட்ச்) படத்தில் ஒரு பாடலை தனது குருநாதரும் நண்பனுமான அனிருத்தையே பாட வைத்திருக்கிறார்கள் இவர்கள். அவரோடு ஜோடி கட்டி பாடியிருப்பது ஆன்ட்ரியா. ‘புரிஞ்சுருச்…’ என்று புன்னகைத்தால் பதறுகிறார்கள் இருவரும்.

சார்… நீங்க நினைக்கிறது மாதிரியில்ல. அவங்க ரெண்டு பேரையும் தனி தனி டிராக்காதான் பாட வைச்சோம். அனிருத் பாடும்போது ஆன்ட்ரியா இல்ல. ஆன்ட்ரியா பாடும்போது அனிருத் இல்ல. இந்த பாட்டுக்கு அவங்க ரெண்டு பேரும் பாடுனா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. பாட வைச்சோம். மற்றபடி தேரை இழுத்து தெருவுல விட்டுட்டு போயிராதீங்க என்றார்கள் இருவரும் கோரஸாக.

‘ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் காஸ்ட்லியான மொபைல் வாங்க நினைக்கிறான். அதை நோக்கி படம் நகருது. அதுக்கு மேல கேட்காதீங்க’ என்று சுருக்கமாக ஆரம்பித்தார் படத்தின் டைரக்டர் சரவணராஜன். இவர் வெங்கட்பிரபுவிடம் தொழில் கற்றவர். அப்படின்னா படத்திற்கு மொபைல்னு வைக்காம ஏன் வடகறின்னு வச்சீங்க? என்றால், அதற்கும் பதில் வைத்திருக்கிறார். இந்த தலைப்புக்கும் படத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. அது படம் பார்த்தால்தான் தெரியும். சென்னையில இருக்கிற ஸ்லம் பகுதிகளில் படமாக்கியிருக்கோம். ஒரு ஸ்லம் பையன் கனவு காண்றதுக்கு பாங்காக் போகலாம்ல? அதனால் சன்னிலியோன் ஆடுற பாடலை மட்டும் பாங்காக்ல படமாக்கியிருக்கோம் என்றவரை இடைமறித்து, ‘ஒரு நீலப்பட நடிகையை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?’ என்று கேட்டால், பதறுகிறார் மனுஷன். ’ஒரு அட்ராக்ஷ்ன் இருக்குமேன்னுதான். மற்றபடி ஒண்ணுமில்ல. அவங்க இதுல தாவணி கட்டி ஆடியிருக்காங்க’ என்றார் சரவணராஜா.

அந்த தாவணியை கூட கட்டாமல் அவங்க ஆடிய ஆட்டமெல்லாம் இன்டர்நெட்டில் இறைந்து கிடக்க, சன்னி லியோன் வைத்த சாம்பார்ல என்ன சுவை இருக்குன்னு படம் பார்க்கும்போதுதான் தெரியும் போலிருக்கு.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
JAIHIND – 2 Stills

[nggallery id = 461]

Close