என் காட்ல மழைன்னு பாடப் போறீயா யுவன்?

மதுரை தமுக்கம் மைதானமே தலைகளால் நிரம்பியிருக்க, தலைவாழை இலை முழுக்க இசையை விருந்தாக்கினார் இசைஞானி இளையராஜா. உலகத்திற்கு அவர் தந்த ‘ஹார்ட் அட்டாக்’ அதிர்ச்சிக்குப் பின் சொந்த மண்ணில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிதான் அது. அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்திலிருந்து ஏராளமான மக்களை தனி பேருந்துகளில் அழைத்து வந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை காண சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு ஸ்பெஷல் விசிட் அடித்திருந்தோம் நாமும்.

டிக்கெட் விலை எவ்வளவுதான் இருக்கட்டுமே… என் மண்ணின் மைந்தனை காண அந்த விலையெல்லாம் ஜுஜுபி என்று திரண்டிருந்தது கூட்டம். சுமார் இருபதாயிரம் நாற்காலிகள் போட வேண்டிய இடத்தில் ஒரு நாற்காலிக்கு நான்கு கால்கள். கால்களுக்கு ஒரு ஆள் என்ற கணக்கில் என்று திரண்டிருந்தது மக்கள் கூட்டம். ராஜாவை பார்த்ததும் உற்சாக மிகுதியில் அவர்கள் விசிலடிக்க, தனக்கேயுரிய கண்டிப்பு குரலில் பேச ஆரம்பித்தார் ராஜா.

‘நிகழ்ச்சியை நீங்க நல்லா ரசிக்கணும் என்பதற்காகதான் நாங்க இங்கே வந்திருக்கோம். இங்கிருக்கிற ஒவ்வொரு வாத்திய கலைஞர்களையும் ஒவ்வொரு இளையராஜாவாக நினைத்து நீங்க மரியாதை கொடுக்கணும். அப்படின்னா விசிலடிச்சு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாதுன்னு அர்த்தம். சந்தோஷமா இசையை ரசிங்க. விசிலடிக்கிறேன் என்று மற்றவர்களின் ரசனைக்கு இடையூறா இருக்காதீங்க’ என்றார் முன்கூட்டியே.

ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு பாடலை தொடங்குவதற்கு முன்பே அதற்கான மியூசிக் ஆரம்பித்த வினாடியில் அது என்ன பாடல் என்பதை இனம் கண்டு கொண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்தார்கள். பாதி நிகழ்ச்சி வரைக்கும் நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யுவன் சங்கர் ராஜா வந்து சேரவில்லை. திடீரென யுவனை மேடையில் ஏற்ற, ரசிகர்களுக்கு உற்சாகம்.

வரும்போதே தான் பாட வேண்டிய பாடலை செல்போனில் வரிகளாக பதிவு செய்து வைத்திருந்தவர், அப்பா இளையராஜாவை பார்த்து மெல்லிய புன்முறுவலோடு நின்றார். என்ன பாடப் போறே? என் காட்ல மழைன்னு பாடப் போறீயா? என்று ராஜாவும் யுவனை பார்த்து சிரிக்க, ‘இல்லீங்ப்பா…’ என்று பதிலை மென்று முழுங்கிவிட்டு பாட ஆரம்பித்தார் யுவன்.

‘போட்டு வைத்த காதல் திட்டம் ஓ.கே கண்மணி….’

இந்த பாடல் முடிந்ததும் அந்த இடத்தில் நிற்காமல் சிட்டாக பறந்தார் யுவன். அதற்கப்புறம் ராஜாவின் இசையில் அடுத்த பாடல் ஒலித்தது.

‘போடா போடா புண்ணாக்கு… போடாத தப்புக்கணக்கு…’

எல்லாமே ஒரு கோ-இன்சிடென்ட்தான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை அனுப்பிய சிறுவன்

காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை ஒரு சிறுவன் அனுப்பி வைத்தான். சுவிட்சர்லாந்தில் உள்ள ‘ஷுரிச்’ நகரைச் சேர்ந்த சிறுவன் சாமுவேல்ஹெஸ் (15). இவன் காற்று மண்டலத்துக்கு ராணுவ...

Close