நான் எங்கப்பாவை பார்த்து ஆறு வருஷமாச்சு மிஷ்கின் பரவசம்!?
மதுரையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் இயக்குனர் பாலா, மிஷ்கின், பிரகாஷ்ராஜ் ஆகிய மூவரும். அதுவும் பாலா மேடைக்கு வந்ததும், ‘என்ன… பாடப் போறீயா?’ என்று கேட்டு சிரித்தார் இளையராஜா. மைக்கை கையில் வாங்கிய பாலா, ‘இந்த ஊர்ல இந்த இசை நிகழ்ச்சி நடக்குறது ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா இளையராஜா இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர். நானும் இந்த மதுரைக்காரன்தான். நான் இப்போ இயக்கப்போகிற ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடிக்கும் சசிகுமாரும் மதுரைக்காரன்தான். இதைவிட வேறு என்ன பெருமை வேணும்?’ என்றார். ‘இந்த படம் இளையராஜா சாருக்கு ஆயிரமாவது படம்’ என்று அவர் சொல்ல அந்த ஏரியாவே கைதட்டல்களால் அதிர்ந்தது.
அடுத்ததாக மைக்கை கையில் எடுத்தார் மிஷ்கின். என்னோட மூணாவது படத்துலதான் இளையராஜாப்பாவுடன் சேர்ற பாக்கியம் கிடைச்சுது. என்னை வயித்துல சுமந்த தகப்பன்னு நான் அவரை சொல்லுவேன். எங்கப்பாவை நான் பார்த்து ஆறு வருஷமாச்சு. அவர்ட்ட பேசறதும் இல்ல. ஆனால் என் அப்பாவா நான் இளையராஜாவைதான் பார்க்குறேன் என்றார். அவரை பற்றி நான் இங்க அதிகமா பேசுனா அவரு அடிப்பாரு. அதனால் இதோட நிறுத்திக்கிறேன் என்றார்.
பிரகாஷ்ராஜ் பேசும்போது, நான் ராஜா சாரின் பாடல்களை கேட்டு வளர்ந்தவன். அவரது மியூசிக்ல நான் படம் இயக்குறது என்னோட பாக்யம். அவர் ஸ்டுடியோவுல பாலா படத்துக்காக அவர் போட்டிருந்த பாடல் ஒன்றை கேட்டேன். அப்படியே அவர் காலை பிடிச்சுகிட்டு அழுதேன். அப்படியொரு கலைஞன் அவர். இன்னும் பல வருடங்கள் அவர் வாழணும் என்றார்.