உனக்கு 350 எனக்கு 300 கமல் ரஜினி போட்டா போட்டி?

மைசூர் சாண்டல், ஹமாம் சோப்பெல்லாம் போய் இன்னும் சில காலத்தில் எலக்ரானிக் சோப்பு வந்தாலும் வரும் போலிருக்கிறது. டெக்னாலஜியை வளைச்சு கக்கத்துல வச்சுக்கணும் என்கிற ஆசை சமூகத்தின் எல்லா தொழிலிலும் வந்துவிட்டது. இதில் சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன? எந்திரன் படத்தின் மூலம் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விட்ட ஷங்கர், அடுத்து எந்திரன்2 எடுத்து வருகிறார். இதற்காக ஸ்பெஷல் ரோபோக்கள் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாம். அவற்றுடன் ரஜினி பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று கிராபிக்ஸ் தொழில் நுட்பம் இல்லாமல் படமேயில்லை என்றாகிவிட்டது. அதை சரியாக செய்கிற நிறுவனம் ஒரு படத்திற்கு போடுகிற பில்லில் விசு டைப்பான இயக்குனர்கள் பத்து படம் எடுத்துவிடலாம். “நிமிஷத்துக்கு நிமிஷம் கோடி கோடியா சம்பாதிக்கிறேன். கத்தி படத்தால் நஷ்டம் வந்தால் அது என் ஒருநாள் வருமானம்” என்று லைக்கா நிறுவனம் சொன்னாலும் சொன்னது. அந்த நிறுவனத்திற்கு படம் இயக்க வருகிற எல்லாரும், ரிசர்வ் பேங்க்கே மூச்சா போகிற அளவுக்கு கனத்த பட்ஜெட்டோடு வருகிறார்கள்.

ஷங்கரின் எந்திரன் 2 படத்திற்கு 350 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிறார்கள். இன்றைய குமுதம் வார இதழில் இந்த 350 கோடியை வசூலித்துவிட முடியுமா என்று ஒரு கட்டுரை வேறு வந்திருக்கிறது. படித்தால் பகீராகிறது மனசு. அது தனிக்கதை. பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ரஜினியும் ஷங்கருமே இந்த 350 கோடியை எடுத்துவிட முடியுமா என்று ஊடகங்கள் சந்தேகம் எழுப்பிக் கொண்டிருக்க, லைக்காவின் நிழல் நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்திற்கு கமல் ஒரு படம் இயக்கப் போகிறாரல்லவா? அதற்கான பட்ஜெட்டாக 300 கோடியை குறித்தனுப்பியிருக்கிறாராம். எப்பவோ நின்று போன மருதநாயகத்தை மறுபடியும் தட்டி எழுப்ப வேண்டும் என்றால் இவ்வளவு ஆகும் என்பது அவர் கணக்கு.

ஒருவேளை நடந்தால் இரண்டு தமிழ் படங்களுக்கு ஆகிற செலவு 650 கோடி. கேட்க கேட்க பெருமையாகதான் இருக்கிறது. இப்படி போட்டி போட்டுக் கொண்டு தமிழ்சினிமாவை உலக சினிமாவா மாத்துங்க. அதுக்காக உலக சினிமாவை தமிழ்சினிமா ஆக்கிடாதீங்க. அதுதான் நம்ம வேண்டுகோள்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நிஜ குத்து சண்டை வீராங்கனையிடம் சிக்கிய மாதவன்!

மூன்றரை வருஷத்துக்கும் மேலாகிவிட்டது மாதவன் தமிழில் நடித்து! இன்னமும் அவரை சாக்லெட் பாய் ஊர் நம்பிக் கொண்டிருக்க, அவரோ முண்டாவை தட்டிக் கொண்டு குத்து சண்டைக்கு கிளம்பிவிட்டார்....

Close