அமெரிக்காவில் மின்சாதனம் மூலம் பக்கவாதத்தை குணப்படுத்தி சாதனை
சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளிடத்திலேயே இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றபோதிலும் இந்த புதிய முயற்சி பக்கவாத நோயினால் முடங்கியுள்ள 6 மில்லியன் அமெரிக்கர்களுக்கு குறிப்பாக முதுகுத்தண்டு பிரச்சினையால் அவதிப்பட்டுவரும் 1.3 மில்லியன் நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையே அளிக்கப்படாத நோயாளிகளுக்குக் கூட இந்த சிகிச்சை முறையில் பலன் கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி முதுகுத் தண்டு பிரச்சினைகளில் சேதமடைந்த நியூரான்களின் மறுவளர்ச்சி அல்லது ஸ்டெம்செல்கள் மூலம் புதுப்பித்தல் என்ற சிகிச்சை முறைகளும் இதுவரை கடினமானதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்து வந்தது. ஆனால் இந்தப் புதிய முறையின் மூலம் முதுகுத்தண்டு பிரச்சினைகளால் பக்கவாதம் ஏற்படும்போது அதனை வாழ்நாள் தண்டனையாக அனுபவிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று டாக்டர் ரோட்ரிக் பெட்டிகுரூ குறிப்பிடுகின்றார்.
இவர் தேசிய சுகாதார நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் உயிர் மருத்துவவியல் இமேஜிங் மற்றும் உயிர்பொறியியல் தேசிய நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். நடக்க முடியாது என்றபோதிலும் தன்னார்வ செயல்பாடுகள் சிலவற்றை அவர்களால் மேற்கொள்ளமுடியும் என்றும் முதுகுத்தண்டு காயங்களுக்கான ஆராய்ச்சியில் இந்த சிகிச்சை ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பிரெயின் என்ற மருத்துவ பத்திரிகையில் வெளிவந்துள்ள இந்த ஆய்வுகளின் ஒரு பகுதிக்கான செலவினை இவர்களது நிறுவனம் அளித்துள்ளதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.