பிரசன்னா இல்லாத வீடு துக்கம் விலகா தோழன்! -தேனி கண்ணன்
ஒரு சாயங்கால நேரம். சாரல் மழை பூ தூவலாய் தூறி சூழலை இதமாக்கியிருந்தது. வேப்பமரத்தில் விழுந்த மழைத்துளிகள் ஆயுள் முடிந்த இலைகளை நிலத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தன. பங்களா கேட்டை திறந்து கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தான் பிரசன்னா எதிரே வந்த அப்பாவை பார்த்துவிட்டு கைகள் தானாகவே பின்னால் மறைந்தது பிரசன்னாவுக்கு.
’பிரசன்னா என்ன மறைக்கிறே’
‘இல்லப்பா அது.. அது..’
தயங்கிய பிரசன்னாவின் கைகளை அப்பாவே இழுத்து பார்த்தார். பிறந்து சில நாட்களே ஆன நாய்க்குட்டி தெரு ஓரத்திலிருந்து தூக்கி வநதிருந்தான்.
அப்பா என்ன சொல்வாரோ என்ற பயமும் நாய்குட்டியின் மேல் பாசமும் கண்களில் பொங்கி நிற்பதை பார்த்த அப்பா, ‘நம்ம வீட்ல ஏற்கனவே ஜெர்மன் செப்பர்டு (மிஸ்ட்ரி) இருக்கு. அதோட இந்த நாய் வளராதுப்பா அதனால இதை என்ன செய்யலாம்னு நீயே சொல்லு பிரசன்னா” அப்பாவின் நியாமான காரணத்தை புரிந்து கொண்ட பிரசன்னா கொஞ்ச நாள் இருக்கட்டடும் டாடி ரெண்டு பேரும் ஃபைட் பண்ணாங்கன்னா வெளியே விட்டுடலம். ப்ரண்டஸ் ஆகிட்டாங்கன்னா வெச்சுக்கலாம். என்றான் பிரசன்னா. அந்த டீல் இருவருக்கும் பிடித்துப்போகவே,
அந்த பங்களாவில் உயர் தர மிஸ்ட்ரியோடு வளர ஆரம்பித்தது தெருவிலிருந்து எடுத்து வந்ததால் டஸ்ட்கான் என்ற நாட்டு நாய்.
வீட்டில் வளர்ந்து வந்த மிஸ்ட்ரி நாய் என்ன நினைததோ வந்த சில நாட்களிலேயே டஸ்கானை தன்னுடைய தம்பியாக்கிக்கொண்டது இதனால் அந்த முரட்டு உருவத்தின் மீது ஏறி விளையாடுவதும், அதன் முன்னால் குதித்து வம்புக்கிழுத்தது. இந்த செல்லச்சண்டையை பார்த்துக் கொண்டே நாள் முழுதும் கழிப்பதே பிரசன்னாவுக்கு வழக்கம்.
மிஸ்ட்ரி ஒரு ராஜாவைப் போல கம்பீரமாக, நாகரீகமாக நடந்து கொள்ளும். அந்த ஸ்டைல் நம்ம டஸ்கானுக்கு இருக்காது. சாப்பிடும்[போது ஆளாய் பறந்து அள்ளி முழுங்கும். மிஸ்ட்ரி நிதானமாக சாப்பிட்டு அதை போலவே சாப்பிட வைக்க முயற்சி செய்யும் அந்த்ஃகாட்சியை பக்கத்திலிருந்தே பிரசன்னா பார்த்து மகிழ்ந்தான்.
அவன் பள்ளிக்கு செல்லும் போது வாசல் வரைக்கும் வந்து ஏக்கப்பார்வை பார்த்து வழியுனுப்பி வைக்கும். மாலையில் வீடு திரும்பும்போது குதித்துத்தாவி குஷியாகி விடும். விடுமுறை நாட்களில் தன் வீட்டுத்தெருவில் பிரசன்னா நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடுவான் அப்போதெல்லாம் சைக்கிள் பின்னால் ஓடி வருவதுதான் டஸ்கானின் அலாதி இன்பம். அந்த தெருவின் முனையில் ஒரு பெட்டிக்கடை இருக்கும். அதில் பிரச்சன்னா தன் நண்பர்களூக்கு கூல்ட்ரிங்ஸ் சாக்லேட் என்று வாங்கிகொடுப்பான். அவன் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். மாதக்கடைசியில் மொத்த பணத்தையும் அப்பா கொடுத்து விடுவார். அப்படி நண்பர்களுக்கு வாங்க்கொடுக்கும் போதெல்லாம் டஸ்கானுக்கு ஸ்பெசலாக சில ரொட்டித்துண்டுகள் கிடைக்கும். தாவிக்குதித்து வாயில் கவ்விக்கொண்டு அடுத்த ரொட்டித் துண்டுக்காக வாலை ஆட்டி நிற்கும். பிரசன்னாவும் சிரித்துக்கொண்டே ஒரு ரொட்டியை மறைத்துக்கொண்டு இல்லாதது போல கையை விரித்து விளையாட்டுக் காட்டுவான். டஸ்கான் முன்னங்காலை தரையில் தாழ்த்தி தலையை குனிந்து கெஞ்சும். இந்த செல்லத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டே பிரசன்னா அந்த ரொட்டியை தூக்கிப் போடுவான்.
மீண்டும் சைக்கிளில் பிரசன்னாவை பின் தொடர்ந்து குதித்தோடும். இப்படியே பல மாதங்கள் கடந்தது. டஸ்கான் இப்போது வளர்ந்து நின்றது. மிஸ்ட்ரியோடு சேர்ந்து பல நல்ல பழக்கங்களை கற்றுக் கொண்டிருந்தது டஸ்கான். காவல் காப்பது, கண்ணியம் காப்பது என்று நயமான நாயானது. அதே போல் பிரசன்னாவிடம் ரொம்பவும் அன்யோன்யமானது. அவன் பள்ளியிலிருந்து வரும் வரைக்கும் வாசலிலேயே படுத்திருந்து அழைத்துச்சென்றது.
அந்த நாள் வந்தது.
பிரசன்னா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சரியாக பதினைந்தாம் நாள் குழந்தை பிரசன்னா கோமா நிலையிலேயே இறந்து போனதாக தகவல் வந்தது. தாங்க முடியாத அதிர்ச்சியில் நான் போய் பார்த்த போது உறங்குவது போல படுத்திருந்தான் தம்பி. அன்றும் பெய்தது சாரல் மழை. ஆனால் ஒவ்வொரு துளியும் திராவகமாய்.
நான் கேட்டுக்கொண்டபடி எந்த மீடியாவும் வீட்டுக்கு வரவில்லை. வீட்டைச் சுற்றி கூட்டம். நிசப்தமாய் நின்றிருந்தது.
தமிழகமெங்கும் தீயாய் பரவியிருந்த செய்தி மூகாம்பிகை கோவிலுக்கு சென்றிருந்த இசைஞானி இளையராவையும் சேர்ந்திருந்தது. அவரிடமிருந்து எனக்கு போன்.
’என்னய்யா என்ன நடந்தது.” அதிர்ச்சியும் கவலையும் கலந்த குரலில் கேட்டார்.
’நான் பெங்களூரிலிருந்து நாளைக்கு வந்திருவேன். மாலைக்கு சொல்லி வை.’ என்றார்.
அதன்படியே போனோம். மனம்முழுக்க துக்கத்தோடு என்ன சொல்வதென்று தெரியாமல் விவேக்கை தட்டிக்கொடுத்தார். எந்த துக்க வீட்டிலும் அதிக நேரம் இருக்க மாட்டார் இசைஞானி. ஆனால் பிரசன்னாவின் உடல் பக்கத்திலேயே அரை மணிநேரம் நின்றிருந்தார்.. பிரசன்னாவின் கைகளை ஒரு முறை பிடித்து அழுத்தினார். இந்த காட்சி பலரையும் விக்கித்து அழ வைத்தது. இப்படியெல்லாம் செய்கிறவர் இல்லை இளையராஜா. ஆனால் அதையும் மீறி அமைதியாய் படுத்திருந்த பிரசன்னாவின் முகம் அவரை உலுக்கியிருக்க வேண்டும்.
எல்லா காரியங்களும் முடிந்தன. பிரசன்னா விளையாடிய பந்து மூலையில் கிடந்தது. அவன் ஓட்டிய சைக்கிள் வீட்டு ஓரத்தில் அமைதியாய் நின்றிருந்தது.
டஸ்கான் ?
வீடு முழுக்க சுற்றிச் சுற்றி வந்தது. கேட்டை தாண்டி தெருவிற்கு வந்தது. ஓடியது தேடியது. இப்படியே சில நாட்கள். மெல்லிய குரலில் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்தது வீட்டில் கொடுக்கும் உணவு எதையும் சாப்பிட மறுத்தது. பிரசன்னா தனக்கு ரொட்டித்துண்டு கொடுக்கும் அந்த கடைக்குப் போய் நின்றது. மிஸ்ட்ரி நாயிடம் போய் ஏக்கமாக பார்ததது. ’என் ஃபிரெண்ட் பிரசன்னா எங்கே’ என்று கேட்பது போல் இருந்தது அந்த பார்வை.
ஒருநாள் காய்ச்சலில் படுத்தது. அவசரதிற்கு ப்ளுகிராஸ் வாகனம் போன் செய்து வரவழைக்கப்பட்டது. அந்த இடட்தை விட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடித்தது. வம்படியாக திணித்து அனுப்ப நேர்ந்தது. ஆனால் போகும்போது வீட்டை திரும்பிப் பார்த்தது டஸ்கான். பிரசன்னா வந்து வழியனுப்ப மாட்டானா என்ற ஏக்கம் தெரிந்தது கண்ணில்.
ஆனால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சில நாய்களூடன் சேர்ந்ததால் ப்ளுகிராஸின் மோசமான கவனிப்பாலும் டஸ்கான் இறந்து போன தகவலை சொன்னார்கள்.
’தனக்கு மிகவும் பிடி;jதவர்கள் இல்லாமல் போனால் நாய்கள் ஏங்கிப்போகும் சோகமான அந்த சூழலில் இருக்க நேர்ந்தால் நாய்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு ஏங்கியே இறந்து விடும்” என்றார் விலங்குகள் நல மருத்துவர்.
இந்நேரம் பிரசன்னாவுடன் விளையாடிக்கொண்டீருப்பான் டஸ்கான்.
-தேனி கண்ணன்
Kalangavaithu viteer theni kannan avargale…..
vivek sir eppadi thaangu-hiraro!