லட்சுமி ராமகிருஷ்ணன் தன் படத்திற்கு இப்படியா தலைப்பு வைக்கணும்?
கோடம்பாக்கத்துக்கு ரொம்ப முக்கியமான அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன். நடிக்க வருவதற்கு முன்பே குறும்படங்கள் இயக்கியவர் அவர். ‘என் கடன் படம் செய்து கிடப்பதே… ’ என்கிற ஆசையில் இருந்தவரை, நடிக்கதான் முதலில் அழைத்தது சினிமா. அதற்கப்புறம் ஒரு நல்ல நடிகையாக தனக்கு கொடுக்கப்பட்டதை பொறுப்பாக செய்து வந்தவருக்கு, நினைத்த லட்சியமும் நிறைவேறுகிற நேரம் வந்தது. நல்லவேளையாக தனது இயக்குனர் ஆசையை முதல் படத்திலேயே நாட்டுக்கு அழுத்தமாக பதிய வைத்துவிட்டார் லட்சுமி. அவரது முதல் படமான ஆரோகணம், ஹிட்!
அதற்கப்புறமும் நடித்து வந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு மீண்டும் இயக்குனராகியிருக்கிறார். இந்த முறை லட்சுமி இயக்கியிருக்கும் படம் சற்றே ஆக்ஷன், ப்ளஸ் சேசிங் த்ரில்லர்! ‘நெருங்கி வா, முத்தமிடாதே’ இந்த தலைப்பை பார்த்தவுடனேயே, அட… லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படியெல்லாம் தலைப்பு வைக்கணுமா? என்கிற ‘திடுக்’ வருகிறதல்லவா? ‘தனியார் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்கிற பொறுப்பான நிகழ்ச்சியை நடத்தி வரும் நீங்களே இப்படியொரு தலைப்பு வைக்கணுமா?’ இந்த கேள்வியை அவரிடம் கேட்டால், “ம்…இப்படியெல்லாம் கேட்கணும்னுதான் அப்படி ஒரு தலைப்பே வச்சேன். ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி வேற எதையோ சொல்ல வர்ற படமில்ல அது. பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு நான்கு நாட்களுக்கு பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டால் கதி என்னாகும்? என்பதுதான் கதையின் நாட்.”
“திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு செல்கிற லாரி, வழக்கமாக நாலு மணி நேரத்திற்குள் போய் சேரும். ஆனால் இந்த கதையில் பதினாலு மணி நேரம் ஆகுது. ஏன்? இதைதான் விறுவிறுப்பா சொல்லியிருக்கேன். லாரிக்கு பின்னாடி எழுதப்பட்டிருக்கும் வாசகம் ஒன்றுதான் இந்த படத்தின் தலைப்பு. ஷபீர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பியா நடிக்கிறார். மற்றொரு முக்கிய ரோலில் கன்னடத்தில் சமீபத்தில் தாறுமாறான வெற்றி பெற்ற படமான லுசியா புகழ் ஸ்ருதி நடிக்கிறார்”.
லட்சுமியின் முந்தைய படமான ஆரோகணத்தின் ஹீரோயினாக நடித்த விஜிக்கு இதில் முக்கியமான ரோல் தரப்பட்டிருக்கிறது. இதில் நடிக்க சம்பளமே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவர்.
“இப்பவும் எனக்கு நிறைய அம்மா கேரக்டர்கள் வருது. நடிக்க அழைக்கிறவர்களுக்கு நான் நோ சொல்றதில்ல. நேரம் இருந்தா கண்டிப்பா நடிச்சு கொடுக்கிறேன்” என்கிறார் லட்சுமி. நெருங்கி வா, முத்தமிடாதே ரிலீசுக்கு பின் ஒரு அழகான அம்மாவை அழகான டைரக்டர் வந்து காலி பண்ணிவிடுவார் போலவே தெரிகிறது.